தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 1 augustus 2015

போர் முடிவுக்குக் கொண்டு வரப்படாமல் இருந்திருந்தால் அரசியல்வாதிகள் இவ்வளவு ஆடியிருக்க மாட்டார்கள்!- அர்ஜூன

விக்னேஸ்வரன் நிலைப்பாடு குறித்து தேர்தலுக்குப் பிறகு பேசுவோம்: இரா. சம்பந்தன்
[ வெள்ளிக்கிழமை, 31 யூலை 2015, 07:59.50 PM GMT ] [ பி.பி.சி ]
நாடாளுமன்றத்தில் பிரச்சாரம் செய்யப்போவதில்லை என்ற வட மாகாண முதல்வரின் நிலைப்பாடு குறித்து தேர்தலுக்குப் பிறகு பேசுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்காக பிரச்சாரம் செய்யப் போவதில்லையென்று வடக்கு மாகாணத்தின் முதலமைச்சரான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அவர் விடுத்திருந்த அறிக்கையில், "கூட்டமைப்பினர் என்னை வட மாகாண முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர்களது தேர்தல் களங்களில் அக்கட்சி வேட்பாளர்களுக்காக பேசுவது எனக்கு அழகல்ல" என்று தான் கருதுவதாகக் கூறியிருந்தார்.
போருக்குப் பின்னரான புனர் நிர்மாண நடவடிக்கைகள் மக்களின் தேவைகளை அனுசரித்து நடத்தப்படாமல் தான் தோன்றித்தனமாக நடைபெற்றுவருவது மனவருத்தத்தைத் தருவதாகவும் விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அரசியல் ரீதியான தீர்வுகள் கிடைக்கும் வரை, எந்தக் காலத்திலும் அமைச்சரவைப் பதவிகளை எமது பிரதிநிதிகள் ஏற்கக் கூடாது என்பதே தனது கருத்து என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அப்படி அமைச்சரவைப் பதவியை ஏற்றுக் கொண்டால், கூட்டுப் பொறுப்பு என்ற வகையில் அமைச்சர்கள் சுதந்திரம் இழந்து, மக்களின் எதிர்பார்ப்பைக் கைவிட வேண்டிவரும் என்றும் விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார்.
இது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன், இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் விருப்ப வாக்குகளை அளிக்க வேண்டியிருக்கும். பிரச்சாரம் செய்தால் விருப்ப வாக்குகளை யாருக்கு அளிப்பது என்பதைச் சொல்ல வேண்டியிருக்கும் என்பதால் விக்னேஸ்வரம் பிரச்சாரம் செய்வதைத் தவிர்த்திருக்கலாம் என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக விக்னேஸ்வரன் தன்னிடம் பேசவில்லையென்றும், தேர்தலுக்குப் பிறகு இது குறித்து விவாதிக்கப்படும் என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.
நெருக்கடிச் சூழலில் இயங்கிய சிறந்த ஊடவியலாளர் விருது தீபச்செல்வனுக்கு
[ வெள்ளிக்கிழமை, 31 யூலை 2015, 09:03.27 PM GMT ]
நெருக்கடிச் சூழலில் இயங்கிய சிறந்த ஊடகவியலாளர் விருது  தீபச்செல்வனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழர் தாயகப் பகுதியில் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட நில அபகரிப்புக்கள் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளுக்காக இந்த விருதை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் இலங்கை பத்திரிகை ஆசியரியர் சங்கம் இணைந்து வழங்கியுள்ளது.
கிளிநொச்சியின் பாரம்பரியம் மிக்க பாடசாலையான கிளி.மத்திய மகா வித்தியாலயத்தின் மாணவரான தீபச்செல்வனின் இயற்பெயர் பாலேந்திரம் பிரதீபன் ஆகும்.
இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புப் பட்டத்தையும் சென்னைப் பல்லைக்ககைத்தில் இதழியல் எம்.ஏ பட்டத்தையும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இதழியல் எம்.பீல் பட்டத்தையும் பெற்றவர்.
ஈழத்தின் முக்கிய கவிஞராக அறியப்பட்ட தீபச்செல்வன் ஒடுக்கப்படும் ஈழ மக்களின் உரிமைப் போராட்டத்தின் குரலாக தன் எழுத்துக்களை படைத்து வருகிறார்.


தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை! காணாமல் போனோருக்கு நட்டஈடு!- முல்லைத்தீவில் அள்ளி வீசினார் ரணில்!!
[ சனிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2015, 12:00.39 AM GMT ]
இனப்பிரச்சினையை புண்ணாக வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியம் தமக்குக் கிடையாதென்றும் மிக விரைவில் அதற்குத் தீர்வு காண்பதே தமது நோக்கமென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முல்லைத்தீவில் தெரிவித்தார்.
தென்னாபிரிக்காவைப் போன்று உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் அதன் மூலம் பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, காணாமற்போனோரின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள புதிய அரசாங்கத்தில் புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கு அமைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் முன்னியவளை விளையாட்டரங்கில் நடைபெற்றது.
அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், டி.எம். சுவாமிநாதன், வேட்பாளர்களான ஜனகன், விஜிந்தன், ரோஹன கமகே உட்பட வேட்பாளர்கள், முக்கியஸ்தர்களுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இப்பிரசாரக் கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்,
33 வருடங்களுக்குப் பின் அமைதியான முறையில் பயமின்றி பிரசாரக் கூட்டங்களை நடத்தும் சூழல் வடக்கில் தற்போது நிலவுகிறது. இதற்கு முன் ஜே.ஆரின் காலத்தில் 1982ல் இதுபோன்று பிரசாரக் கூட்டங்களை நடத்த முடிந்தது. அதற்குப் பின்னர் யுத்தம் காரணமாக அமைதியான தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்த முடியாத சூழ்நிலையே தொடர்ந்தது.
முல்லைத்தீவு மக்களை நேரில் சந்தித்ததில் எனக்கு பெரு மகிழ்ச்சி. யுத்தத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் முல்லைத்தீவும் ஒன்று. இந்த மாவட்டம் முழுமையாக அழிவடைந்தது. யுத்தத்தின் பின்னர் மக்கள் எதிர்பார்த்தவை அவர்களின் வாழ்வில் இடம்பெறவில்லை.
மீளமைப்புப் பணிகள் காலதாமதமாகின. அதேபோன்று இப் பிரதேசங்களில் சுதந்திரமான சூழ்நிலையும் காணப்படவில்லை. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மூலமே ஒரிரு வேலைத்திட்டங்களாவது முன்னெடுக்கப்பட்டன.
இன்று மக்களுக்கு சுதந்திரம் உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நாம் அரசாங்கத்தை அமைத்து 100 நாள் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தோம் அதன் மூலமே இத்தகைய சுதந்திர சூழ்நிலை ஏற்பட்டது. 100 நாட்களில் நல்லாட்சியை ஏற்படுத்த முடியுமென எவரும் நினைத்திருக்கவில்லை. நாம் அதை செய்தோம்.
நாம் தற்போது புதிய நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். 60 மாதங்களில் இதனை மேற்கொள்ளவுள்ளோம். இதனைச் செய்வதற்கு எமக்குப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை அவசியம்.
இதற்கிணங்க ஏனைய எட்டு மாவட்டங்களிலிருந்தும் எமக்கு அதிகமான எம்.பிக்கள் வருவார்கள். எமது முக்கிய நோக்கம் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்துவது.
அதற்காக வடக்கு மக்கள் எமக்கு வடக்கிலிருந்தும் எம்.பிக்களைப் பெற்றுத்தர வேண்டியது முக்கியம். தமிழ், சிங்கள, முஸ்லிம் பாராளுமன்ற எம்.பிக்கள் எமக்கு அவசியம். அவர்கள் அரசாங்கத்தின் பங்காளிகளானவுடன் அவர்களே உங்களுக்கான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பர்.
கடந்த காலங்களில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் மட்டுமே உங்களுக்காக சேவை செய்தார். இவற்றை மேற்கொள்ள இன்னும் எம்.பிக்கள் தேவைப்படுகின்றனர். மக்களுக்காக வேலை செய்வதென்றால் அரசாங்கத்துக்குள் இருப்பது முக்கியம். அரசாங்கத்துக்கு வெளியில் இருந்து எதுவும் செய்ய முடியாது. அரசாங்கத்திற்கு வெளியே இருந்து நல்ல ஆலோசனைகளை வழங்க முடியுமே தவிர வேலை செய்ய முடியாது.
நாம் புதிய இலங்கையை உருவாக்கும் போது புதிய முல்லைத்தீவும் உருவாக்கப்பட வேண்டும். வடக்கு மக்களுக்காக புதிய முல்லைத்தீவு, புதிய வன்னி மாவட்டம் உருவாக்கப்படுவது அவசியமாகும். மக்கள் சுபீட்சமாக வாழக்கூடியதாக நாம் வன்னியை மாற்ற வேண்டும். அதற்கு எமக்கு 60 மாதங்கள் கூட அதிகமே.
உதவி செய்பவர்களுடன் இணைந்து மிக விரைவில் எம்மால் அதனை மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுண்டு.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். விசாரணைகளின்றி உள்ளோரை நாம் விரைவாக விடுவிப்போம்.
காணாமற் போனோர் பற்றி உறுதிப்படுத்திக் கொண்டு அவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு பெற்றுக்கொடுக்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இதற்காக புதிய பாராளுமன்றத்தில் புதிய சட்ட மொன்றை நிறைவேற்றவும் தீர்மானித்துள்ளோம்.
யுத்தத்தினால் பெண்களை பொறுப்பாளராகக் கொண்ட குடும்பங்கள் அதிகமாகியுள்ளன. விதவைகள் உள்ளனர். அவர்களுக்காக விசேட வேலைத்திட்டமொன்றை நாம் முன்னெடுக்கவுள்ளோம்.
http://www.tamilwin.com/show-RUmtyITVSVmq6H.html

அனுராதபுரம் சுதந்திரக் கட்சி பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி
[ சனிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2015, 12:18.00 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அனுராதபுர மாவட்ட வேட்பாளர் குழுத் தலைவரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளருமான கைத்தொழில் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் வீட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நேற்று கலந்துகொண்டுள்ளார்.
ஜனாதிபதி போயா தினமான நேற்று அனுராதபுரத்திலுள்ள விகாரைகளில் சமயக் கிரியைகள் பலவற்றில் கலந்து கொள்வதற்காக வேண்டி அங்கு சென்றிருந்தார்.
இதன்போதே திடீரென இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அமைச்சர் துமிந்தவின் வீட்டில் கூடியிருந்த மக்களுடன் சிறிதுநேரம் கலந்துரையாடிவிட்டு ஜனாதிபதி அங்கிருந்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

போர் முடிவுக்குக் கொண்டு வரப்படாமல் இருந்திருந்தால் அரசியல்வாதிகள் இவ்வளவு ஆடியிருக்க மாட்டார்கள்!- அர்ஜூன
[ சனிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2015, 01:07.14 AM GMT ]
போர் முடிவுக்குக் கொண்டு வரப்படாமல் இருந்திருந்தால் அரசியல்வாதிகள் இவ்வளவு ஆடியிருக்க மாட்டார்கள் என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மஹர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நான் இதைச் சொன்னால் ஊடகங்களின் தாக்குதலுக்கு இலக்காக நேரிடும். எனினும், இதைச் சொல்லாமல் இருக்க முடியாது, அதனால் சொல்கின்றேன்.
சில வேளைகளில் போர் முடிவுக்கு கொண்டு வரப்படாமல் இருந்திருந்தால் அரசியல்வாதிகள் இவ்வளவு ஆடியிருக்க மாட்டார்கள்.
அது வேறு ஒன்றுக்காகவும் அல்ல.
போர் வெற்றியை நாட்டு மக்களைப் போன்றே அரசியல்வாதிகளும் அனுபவிக்கின்றார்கள்.
சுதந்திரமாக எந்தவொரு இடத்திற்கும் செல்ல அனுமதியிருந்தது.
களவு எடுக்க அஞ்சவில்லை.
எந்தவொரு குற்றச் செயலில் ஈடுபட்டாலும் கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாக்க தலைவர் ஒருவர் இருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyITVSVmq7C.html

Geen opmerkingen:

Een reactie posten