தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 augustus 2015

சிறிலங்காவின் எதிர்காலம் பின்நோக்கித் திரும்புகிறதா?

பேரறிவாளன் உட்பட 7 பேரின் தண்டனைக் குறைப்பு வழக்கில் தமிழக அரசு வாதம்
[ செவ்வாய்க்கிழமை, 04 ஓகஸ்ட் 2015, 11:36.25 AM GMT ]
சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு தண்டனை குறைப்பு என்பது சிறைக் கைதிகளின் நன்னடத்தையின் அடிப்படையில் எடுக்கக் கூடிய முடிவு என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தனது வாதத்தை முன்வைத்துள்ளது.
பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலைக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு இன்று தனது வாதத்தைத் தொடக்கியுள்ளது.
அதில், தண்டனைக் குறைப்பு என்பது சிறைக் கைதிகளின் நன்னடத்தையைப் பொறுத்து எடுக்கக் கூடிய முடிவு. இதில், விசாரணை அமைப்பு, வழக்கின் முக்கியத்துவத்தை கருதி முடிவு எடுக்கப்படுவதில்லை.
தண்டனைக் குறைப்புக்கு, மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்பது மாநில அரசின் அதிகாரத்தை நசுக்குவதாகும்.
சட்டப்பேரவையில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் ஒருமனதாக தீர்மானத்தை முன்மொழியும் போது அதனை நிறைவேற்றுவது அரசின் கடமையாகும் என்றும் தமிழக அரசு வழக்குரைஞர் குறிப்பிட்டுள்ளார்.


பூநகரியில் புதிதாக திறந்து வைக்கப்பட்டது பௌத்த வழிபாட்டுத் தலம்
[ செவ்வாய்க்கிழமை, 04 ஓகஸ்ட் 2015, 01:10.32 PM GMT ]
கிளிநொச்சி – பூநகரிப் பகுதியில் புதிய பௌத்த வழிபாட்டுத்தலம் ஒன்று கட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது.
66-1ஆவது பிரிகேட் தலைமையகத்துக்கு அருகிலேயே, இந்த புதிய பௌத்த வழிபாட்டுத்தலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பௌத்த வழிபாட்டுத் தலத்தை 66ஆவது டிவிசனின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் விக்கிரமரத்ன கடந்த மாதம் 29ஆம் நாள் திறந்து வைத்துள்ளார்.
66-1ஆவது பிரிகேட் தளபதி லெப்.கேணல் எக்கநாயக்கவின் உத்தரவின் பேரில், அந்தப்படைப்பிரிவில் உள்ள அதிகாரிகளின் நிதியுதவி மற்றும், படையினரின் மனித வள உதவியுடன் இந்த வழிபாட்டுத் தலம் அமைக்கப்பட்டுள்ளது.

மகிந்தவுடன் விவாதிக்க தயாரில்லை: ரணில்
[ செவ்வாய்க்கிழமை, 04 ஓகஸ்ட் 2015, 01:34.59 PM GMT ]
மஹிந்த பிரதமர் வேட்பாளர் அல்ல இதனால் அவருடன் தான் விவாதத்தில் ஈடுபட தயாரில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு  வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமர் வேட்பாளர் அல்ல என ஐக்கிய முன்னணியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே குறிப்பிட்டுள்ளார். அப்படியான ஒருவருடன் தான் விவாதம் புரியத் தேவையில்லை.
மஹிந்ததான் பிரதமர் வேட்பாளர் என்று ஜனாதிபதி அறிவிக்கும் பட்சத்தில், தான் அவருடன் விவாதத்துக்கு வருவேன் என ரணில் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் எதிர்காலம் பின்நோக்கித் திரும்புகிறதா?
[ செவ்வாய்க்கிழமை, 04 ஓகஸ்ட் 2015, 01:49.55 PM GMT ] [ புதினப்பலகை ]
ராஜபக்ச மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றினால், அவர் தனது பழைய அரசியல் முறையைத் தொடர்ந்தும் பின்பற்றுவார். இதனால் நாட்டில் ஜனநாயக மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியாது.
சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகஸ்ட் 17ல் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அண்மையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மகிந்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் குருநாகல் மாவட்டத்திற்கான வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார்.
மகிந்த ராஜபக்ச இத்தேர்தலில் வெற்றி பெற்றால் நிச்சயமாக அவர் பிரதமராக அறிவிக்கப்படுவார் என்பதில் மாற்றமில்லை. இவர் சிறிலங்காவின் ஆட்சிப்பீடத்தில் மீண்டும் ஏறினால் சிறிலங்காவின் ஜனநாயக அரசியல் மறுமலர்ச்சி சிக்கலிற்கு உள்ளாகும்.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போன்று, மகிந்த ராஜபக்சவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நீண்டகால உறுப்பினராவார்.
ஆனால் சிறிசேன, ஐக்கிய மக்கள் முன்னணி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக உள்ளார். இவர் கடந்த ஜனவரியில் மேற்கொள்ளப்பட்ட ஜனாதிபதி தேர்தல் மூலம் ராஜபக்சவைத் தோற்கடித்து ஜனாதிபதியானார்.
இந்நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் கீழ் மகிந்த ராஜபக்சவுக்குத் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டதானது சிலரை அதிருப்தி கொள்ளச் செய்துள்ளது.
ராஜபக்சவால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஊழல்கள் மற்றும் அதிகாரத்துவ ஆட்சியை இல்லாதொழிப்பதாக சிறிசேன வாக்குறுதி வழங்கியுள்ள போதிலும், ராஜபக்ச மீண்டும் அரசியலுக்குள் நுழைந்தால் இவர் தனது பழைய அரசியல் முறையைத் தொடர்ந்தும் பின்பற்றுவார்.
இதனால் நாட்டில் ஜனநாயக மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியாது.
சிறிசேனவைப் பொறுத்தளவில் கட்சியின் கோட்பாடுகள் மற்றும் கட்சியின் ஒற்றுமை என்பது மிகவும் முக்கியமானதாகும். சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐ.ம.சு.கூட்டணி போன்றவற்றின் உறுப்பினர்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
இதனால் சிறிசேனவால் முற்றுமுழுதாக இவற்றைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியவில்லை. சிறிசேனவின் அரசியல் பலவீனமானது நாட்டில் அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்குத் தடையாக உள்ளது.
குறிப்பாக தேர்தல் சீர்திருத்தங்கள், தகவல் உரிமைச் சட்டம், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் போன்றன இச்சீர்திருத்தத்திற்குள் அடங்கும்.
கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடத்தவுள்ளதாக ராஜபக்ச அறிவித்ததன் பின்னர் எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக சிறிசேன நிறுத்தப்பட்டார். ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் ஒன்றிணைத்து எதிரணி உருவாக்கப்பட்டது.
சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நீண்டகால உறுப்பினராவார். இவர் அதிபர் வேட்பளாராக நிறுத்தப்பட்ட போது ராஜபக்ச பெரும் அதிர்ச்சியடைந்தார்.
சிறிலங்காவின் ஜனாதிபதி சிறிசேன தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் உருவாக்கப்பட்டது. சிறிசேனவின் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் கூறப்பட்ட பல்வேறு விடயங்கள் நிறைவேற்றப்படவில்லை.
இதற்கும் மேலாக, ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு ஊழல்குற்றங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. தவிர, ஐக்கிய தேசியக் கட்சியானது தற்போது ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்கிறது.
முன்னைய தேர்தல்களில் பயன்படுத்தியது போன்று தற்போது ஐ.ம.சு.முன்னணியால் அரச சொத்துக்களைப் பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததை விட சில மாதங்களுக்குப் பின்னரே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
தன்னால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை முழுமையாகக் கட்டுப்படுத்தி ராஜபக்சவை ஓரங்கட்ட முடியும் என சிறிசேன எதிர்பார்த்தார். ஆனாலும் நாடாளுமன்றத்தைக் கலைப்பதில் சிறிசேன காலந்தாழ்த்தியதானது இவருக்கான எதிர்ப்பு அதிகரிப்பதற்குக் காரணமாகியது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ராஜபக்சவைத் தடுப்பதற்கு சிறிசேன மிகக்குறைந்த அதிகாரத்தையே பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.
இவ்வாறானதொரு சூழலில் ராஜபக்ச மீண்டும் அரசியலில் நுழைந்துள்ளதானது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒருசாராருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிளவானது ஐக்கிய தேசியக் கட்சி இத்தேர்தலில் அதிக வாக்குகளைப் பெறுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
இதேபோன்றே அண்மையில் இடம்பெற்ற அதிபர் தேர்தலிலும் ஐ.ம.சு.முன்னணிக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் பாரியதொரு எதிரணி உருவாக்கப்பட்டது.
எனினும், யூலை 14 அன்று, சிறிசேன ஆற்றிய உரையொன்றில், ராஜபக்சவின் நியமனத்தைத் தான் எதிர்பதாகவும், இத்தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி வெற்றி பெற்றால் ராஜபக்ச பிரதமராக அறிவிக்கப்படமாட்டார் எனவும் குறிப்பிட்டடிருந்தார்.
சிறிசேனவின் இந்த உரையானது வாக்காளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவானது ஆகஸ்ட் 17 அன்று இடம்பெறவுள்ள தேர்தலில் ஐ.தே.கட்சி தலைமையிலான கூட்டணிக்கு ஏதோவொரு விதத்தில் நன்மையளிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஐ.ம.சு.முன்னணியின் ஊடாக ராஜபக்ச மீண்டும் தலைதூக்குவதானது நாட்டிற்கு பல்வேறு தீமையையே உருவாக்கும்.
சிறிசேன அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதானது பல்வேறு சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தியது. ஐ.தே.க தலைமையிலான எதிரணியின் பலத்துடன் சிறிசேன தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானாலும் கூட, நாடாளுமன்றின் பெரும்பான்மை ஆசனங்கள் ஐ.ம.சு.முன்னணியின் வசமே இருந்தது.
அடுத்த கட்டமாக சிறிலங்காவில் நல்லாட்சி நிலைநிறுத்தப்பட்டு, ஆழமான ஜனநாயக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இவை நவீன அரசியல் சீர்திருத்தங்களின் ஊடாகவே மேற்கொள்ளப்பட முடியும். மீளிணக்கப்பாடு, அதிகாரப் பரவலாக்கல், போர்க்கால குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறல் போன்றன உடனடியாக வெற்றியளிக்கும் விவகாரங்கள் அல்ல.
எனினும், ராஜபக்ச மூன்றாவது தடவையாகவும் சிறிலங்காவின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், இவர் தனது அதிகாரத்துவ ஆட்சியைத் தொடர்ந்தும் பலப்படுத்தியிருப்பார்.
அரசியல் யாப்பின் 19வது திருத்தச் சட்டமானது மீளவும் ஜனாதிபதி பதவிக்காலத்தை வரையறுக்கிறது. அத்துடன் நிறைவேற்று அதிகார முறைமையை ஒழித்து அதிபருக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துகிறது. இது ஒரு சாதகமான நகர்வாகும்.
கடந்த ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சவைத் தோற்கடித்ததன் மூலம், பெரும்பாலான இலங்கையர்கள் ஊழல் மற்றும் அதிகாரத்துவ ஆட்சி போன்றன தொடர்வதற்கு விரும்பவில்லை. இதேபோன்று வருகின்ற தேர்தலிலும் மக்கள் தமது ஆணையை வழங்குவார்கள் என நம்பப்படுகிறது.
நாட்டில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வந்ததன் மூலம் ராஜபக்ச, நாட்டின் சிங்கள பௌத்த தேசியவாதிகள் மத்தியில் மிக முக்கிய அரசியல் ஆயுதமாக நோக்கப்படுகிறார்.
போரின் போது இடம்பெற்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அடங்கிய ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை வரும் செப்ரெம்பரில் வெளியிடப்படவுள்ள நிலையில் இதனை தனது தேர்தல் பரப்புரையின் போது ராஜபக்ச பயன்படுத்தலாம்.
அடுத்த சில மாதங்களில் இலங்கைத் தீவின் உள்ளக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெறவுள்ளன. இதேபோன்று அனைத்துலக சமூகத்துடனான கொழும்பின் உறவுநிலையிலும் மாற்றம் ஏற்படவுள்ளது.
தேர்தல் காலத்தில் நடுநிலை வகிக்கப்போவதாக சிறிசேன அறிவித்துள்ளார். அடுத்த சில மாதங்களில் சிறிலங்காவின் அரசியலில் எத்தகைய மாற்றங்கள் இடம்பெறும் என எதிர்வுகூறுவது மிகவும் சிரமமாகும்.
இந்நிலையில் வரும் தேர்தலானது பெரும் போட்டி நிறைந்ததாக அமையும். இதற்கும் மேலாக, நாட்டின் அரசியலில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதும்,
போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முடிவெட்டுவதற்கும் பல்வேறு தடைகள் நிலவுகின்றன. இந்நிலையானது கிட்டிய எதிர்காலத்தில் மிக முக்கிய விடயங்களாக அமைந்திருக்கும்.
இவ்வாறு foreignpolicy ஊடகத்தில் TAYLOR DIBBERT எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
மொழியாக்கம்- நித்தியபாரதி.
http://www.tamilwin.com/show-RUmtyITYSVmt2E.html

Geen opmerkingen:

Een reactie posten