இத்தேர்தலில் இரண்டு முக்கிய கட்சிகளில் ஒன்றாகிய ஐக்கிய தேசியக் கட்சியானது, இலங்கை சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்குவதனையே முக்கிய கருவாக கொண்டிருக்கிறது.
அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பானது, நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக மீண்டும் தோன்றுவதாக சொல்லக்கூடிய விடுதலைபுலிகள் உருவாகுவதனை தடுப்பதனையே பிரதானமாக கொண்டிருக்கின்றது.
இவ்வாறாக பார்க்கின்ற பொழுது நல்லாட்சிக்கு வாக்களிப்பதா ?இல்லை நாட்டின் பாதுகாப்பிற்கு வாக்களிப்பதா? என இரண்டு கோணங்களில் மக்களை சிந்திக்க தூண்டும் பிரச்சாரங்களையே இரண்டு கட்சிகளும் ஏற்படுத்துகின்றன.
ஏனைய கட்சிகளாக இருக்ககூடிய முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மலையக கட்சிகள் என்பன பேரம் பேசும் சக்தியினை தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சிகளையே மேற்கொண்டுவருகின்றன.
தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே இருக்கின்ற தருணத்தில் நாட்டின் பாதுகாப்பினை அச்சுறுத்தக் கூடிய வகையில் இந்தியாவில் கைது செய்யப்படும் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளின் நிலைப்பாடு பாரிய தாக்கத்தினை செலுத்தியுள்ளது.
இருப்பினும் இதுவரையில் இல்லாத இக்கைதுகள் இத்தேர்தல் காலங்களில் மட்டும் இடம் பெறுகின்மையானது பாரிய சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமன்றி மிரிஹானையில் இடம்பெற்ற வெள்ளைவான் விவகாரமும் இத்தேர்தல் பிரச்சாரங்களில் அதிகம் விவாதிக்கின்ற விடயங்களாக மாறிப்போயுள்ளன.
இலங்கைத் தேர்தல் பிரச்சாரத்திற்கும், அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்திற்கும் இடையில் காணப்படுகின்ற பிரதான வேறுபாடாக இதனை நாம் அடையாளப்படுத்தலாம்.
அதாவது அமெரிக்க தேர்தலில் அதிகம் நாட்டின் அபிவிருத்தி, பொருளாதார மேம்பாடு, வாழ்க்கைச் செலவு போன்ற மையக் கருத்துகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும்.
ஆனால் இலங்கையினை பொறுத்தவரையில் விடுதலைப்புலிகள் இருக்கின்றார்களா? இல்லையா? என்பதனை வாதாடும் களமாகவே தேர்தல்களம் மாறிப்போயிருக்கின்றது.
குறிப்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றக் கூடிய சிறிய நிகழ்ச்சிகளில் பேசக் கூடிய விடயங்களையே இங்கு தேர்தல் மேடைகளில் பேசுகிறார்கள்.
இலங்கையினை பொறுத்தவரையில், மக்கள் ஓரளவு அரசியல் ரீதியாக விழிப்படைந்துள்ளமையானது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.
ஆனால் சிங்கள மக்களிடையே இத்தகைய விழிப்புணர்வானது 50சத வீதமாக காணப்படுகின்றது. இலங்கையை பொறுத்தவரையில் விடுதலைப்புலிகளை ஒழிக்கவேண்டிய தேவை இல்லை. இனி கவனம் செலுத்த வேண்டியது அடிப்படை தேவைகளாக இருக்கக்கூடிய பொருளாதார மேம்பாடு, வாழ்க்கைச் செலவினை குறைத்தல் மற்றும் நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு கொண்டு செல்லுதல் என்பதேயாகும்.
இதனை விடுத்து மீண்டும் மீண்டும் விடுதலைப்புலிகளைப் பற்றி பேசுவதால் எவ்வித பயனும் கிட்டப் போவதில்லை.
இலங்கை சிறிய நாடுதான் ஆனால் இனவாதத்தில் மிகப்பெரிய நாடு.
இலங்கையினை பொறுத்தவரையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோ, அதே அளவிற்கு தற்போதைய பாராளுமன்றத் தேர்தலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
இவ்விடத்தில் தற்போதைய ஜனாதிபதியின் நிலை குறித்து யோசித்து பார்த்தால் இந்திய ஜனாதிபதியின் நிலைப்பாட்டைப் போல, நாம் நிர்வாகி கூடிய அந்தஸ்தை பெற்றுவிட்டதா? என கேள்வி எழுப்பியுள்ளது.
.பாராளுமன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது முதல் ஜனாதிபதியின் அதிகாரம் குறைந்து வருவதனைப் போல ஒரு மாயை ஏற்பட்டுள்ளதனை அவதானிக்கலாம்.
கடந்த இரண்டு தடவை ஜனாதிபதியாக மகிந்த தெரிவு செய்யப்பட்டப் பொழுது, பாராளுமன்றத் தேர்தல் இத்தகைய முக்கியத்துவத்தினை பெறவில்லை.
காரணம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆட்சியினை கைப்பற்றப் போகின்றமை தொடர்பில் சந்தேகம் இருக்கவில்லை.
ஆனால் இத்தேர்தலை பொறுத்தவரையில் ஜனாதிபதியாக மைத்திரி இருந்தாலும், அவர் மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கின்ற, ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைக்கும் என்பதனை திட்டவட்டமாக கூறமுடியாதுள்ளது.
இது மைத்திரியின் தலைமைத்துவக் குறைபாடா? அல்லது மகிந்தவின் மீள்வருகையின் தாக்கமா? என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
பிரதமருக்கான போட்டியில் மகிந்த வராமல் இருந்திருந்தால் தேர்தலில் பிரச்சாரத்தின் தலைப்பாக நிச்சயம் இனவாதம் இருந்திருக்காது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அத்தகைய ஒரு தேர்தலில் நாட்டின் பொருளாதார மேம்பாடே முதன்மை பெற்றிருக்கும்.
இலங்கை தேர்தல்களில் இந்நிலை மாற்றப்படுமா? இனவாதம் பேசாதா இலங்கை உருவாகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
-திவி-
http://www.tamilwin.com/show-RUmtyITVSVmr3A.html
Geen opmerkingen:
Een reactie posten