தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 maart 2017

லைக்காவை எதிர்ப்பது எமது நோக்கமல்ல! விடுதலைச்சிறுத்தைகள்

நடிகர் ரஜினிகாந்தின் ஈழத்து வருகை தொடர்பான விமர்சனங்கள் தொடர்பிலும், குறித்த விஜயத்தினை ஏற்பாடு செய்திருந்த லைக்கா நிறுவனம் தொடர்பிலும் தமது நிலைப்பாட்டை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
தற்போதை அரசியல் சூழலில், இலங்கையிலுள்ள வவுனியா பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டுமென யாம் விடுத்த வேண்டுகோளை நடிகர் ரஜினிகாந்த் அவர்கள், நேர்மறையான வகையில், சரியான கோணத்தில் புரிந்து கொண்டு தனது பயணத்தைத் தவிர்த்திருக்கிறார்.
இது அவரது பக்குவமான பண்பு நலன்கள்களை வெளிப்படுத்துகிறது.
இது தொடர்பாக லைக்கா நிறுவனத்தின் பெயரால் வெளியாகியுள்ள அறிக்கையில், "அரசியல் ஆதாயம் தேடுவதற்காக தமிழகத் தலைவர்கள் சிலர், இதனை அரசியலாக்குகின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதிலென்ன ஆதாய நோக்கம் இருக்க முடியுமென்று விளங்கவில்லை. ரஜினிகாந்த் அவர்களின் பயணத்தையும் லைக்கா நிறுவனத்தின் செயற்பாடுகளையும் எதிர்ப்பதால், தமிழக மக்களின் பேராதரவைப் பெற்றுவிட முடியுமென்று நாம் நம்பினால், இதைவிட நகைப்புக்குரியது வேறென்ன இருக்கமுடியும்?
அரசியல் ஆதாயம் தேடுவதற்காக சிங்கள ஆட்சியாளர்கள் முயற்சிக்கிறார்கள் என்பது தான், வடக்கு மாகாணத் தமிழர்களின் அச்சம்.
அதனை வெளிப்படுத்தும் வகையில் தான் ஒரு வேண்டுகோள் விடுத்தோம். மற்றபடி, லைக்கா நிறுவனத்திற்கு எதிராகச் செயல்பட வேண்டிய தேவை நமக்கென்ன உள்ளது?
அவர்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மறுவாழ்வுப் பணிகள் செய்வதை யாம் குறை கூறவோ எதிர்க்கவோ இல்லை.
சிங்கள ஆட்சியாளர்களை 40இற்கும் மேற்பட்ட நாடுகள், அண்மையில் ஐநா மனித உரிமை மன்றத்தில் வன்மையாகக் கண்டித்துள்ள தற்போதைய அரசியல் சூழலில், ரஜினிகாந்த் அவர்களின் வரவைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள சிங்கள அரசு முயற்சிக்கிறது என்பது தான் தமிழ்மக்கள் முன்வைக்கும் கருத்தாகும்.
இது வெறும் கற்பனை, யூகம் என்று லைக்கா நிறுவனத்தாரும், இன்னும் சிலரும் கருதலாம்.
ஆனால், நம்முடைய நோக்கம் ரஜினி எதிர்ப்போ, லைக்கா எதிர்ப்போ, அரசியல் ஆதாயமோ, விளம்பர நாட்டமோ அல்ல என்பதை உறுதிபடுத்த விரும்புகிறோம். மாறாக, அப்படி லைக்கா நிறுவனத்தார் நினைத்தால் அதுவும் வெறும் கற்பனையே, யூகமே ஆகும்.
அத்துடன், எமது இந்த நடவடிக்கையானது, சிங்கள ஆட்சியாளர்களுக்குச் சாதகமான ஒரு சூழலை உருவாக்கிவிடக் கூடாது என்பதிலிருந்து எழுந்த எதிர்ப்பு மட்டுமே என்பதை அழுத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten