தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 23 maart 2017

தமிழரை அழிப்பதற்கென்று வரையப்பட்ட நெழிவுசுழிவான அரசியற் செயற்திட்டம் - மு.திருநாவுக்கரசு

“அடிப்படைத் தருமத்தில் இருந்து வழுவியவனுடன் நியாயம் பேசுவதில் அர்த்தம் இல்லை” - கிரேக்க பழமொழி.
தமிழரை அழிப்பதற்கான ஓர் அரசியற் பொறிமுறையில் தமிழ்த் தலைவர்களை ஓர் அங்கமாக்குவது என்பதிலிருந்து நல்லாட்சி அரசாங்கத்தின் திட்ட வரைபடம் தீட்டப்பட்டது.
அதாவது தமிழ்த் தலைவர்களை உதிரிப் பாகமாகக் கொண்ட ஒர் இயந்திரத்தை வடிவமைப்பதன் மூலமே தமிழ் மக்களை தோற்கடிப்பதற்கான பயணத்தில் முன்னேற முடியும் என்ற உபாயத்தின் அடிப்படையில் நல்லாட்சி அரச இயந்திரம் வடிவமைக்கப்பட்டது.
இன்றைய புகோள அரசியலை, நாடுகளுக்கு இடையேயான அரசியலை உள்நாட்டு அரசியலை கையாள்வதற்கான அரசியற் கோட்பாட்டுப் பதங்களாக நவதாராண்மைவாதம் (Neo-Liberalism) யதார்த்தவாதம் (Realism) சமூக யதார்த்தவாதம் (Social Realism) புதிய யதார்த்தவாதம் (Neo-Realism) அல்லது கட்டமைப்பு யதார்த்தவாதம் (Structural Realism) நிர்மாணிப்புவாதம் (constructivism) என்பன உள்ளன.
பொருளாதாரம், அரசியல், இராணுவம், கலாச்சாரம் சார்ந்த பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கிய வகையில் இக்கோடுகள் செயற்படுகின்றன.
மேற்படி இப்பதங்களின் அடிப்படையில் இலங்கை அரசியல் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்படுகிறது.
ஆதலால் இத்தகைய கோட்பாடுகளை தெரிந்து கொள்ளாமலும், புரிந்து கொள்ளமலும் நிகழ்கால அரசியற் போக்கையோ, ஈழத் தமிழரின் தலைவிதியையோ புரிந்துகொள்ள முடியாது.
அத்துடன் இலங்கை அரசினதும், ஆட்சியாளர்களினதும் இராஜதந்திர பாரம்பரியத்தை எழுத்தெண்ணி, கற்றுக்கொள்ளாமல் அவர்களின் அரசியல் நகர்வுகளையும், போக்குக்களையும், விளைவுகளையும், தமிழரின் எதிர்காலத்தையும் புரிந்துகொள்ள முடியாது.
எனவே மேற்படி உலகம் தழுவிய அரசியற் கோட்பாடுகளையும், இலங்கையின் தனிவிசேடமான இராஜதந்திர மரபையும் தெரிந்து கொள்ளாமல் ஒருபோதும் தமிழ் மக்களின் எதிர்காலத்தை நல்லபடி நிர்ணயிக்க முடியாது.
ஜோதிடர்களின் ஆலோசனையால் சற்றும் எதிர்பாராத விதத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி ஜனாதிபதி தேர்தலுக்கு நாள் குறித்தார்.
இத்திடீர் அறிவித்தலைத் தொடர்ந்து நல்லாட்சி அரசாங்கம் உருவாகுவதற்கான திட்டமிடல் உருவாகனது.
அந்த நல்லாட்சி அரசாங்கமானது ஈழத் தமிழரின் வாக்குப்பலத்தினாற்தான் உருவாக முடியும் என்ற நிலையில் ஈழத் தமிழரை நோக்கி யதார்த்தவாத கோட்பாடு தொழிற்படத் தொடங்கியது.
யதார்த்தவாத கோட்பாட்டில் இராணுவ பக்கம், அரசியற் பக்கம், நிர்மாணிப்புப் பக்கம் எனப் பல தொடர் பக்கங்கள் உண்டு. 2015ஆம் ஆண்டு இலங்கையில் காணப்பட்ட யதார்த்த நிலையின் படி தமிழர்களை வெற்றிகொள்ளவது என்பதிலிருந்தே நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவது ஆரம்பிக்கப்பட வேண்டியிருந்தது.
யதார்த்த வாதத்தின்படி ஒரு மக்கள் கூட்டத்தை வெற்றி கொள்வதற்கு அந்த மக்களின் நம்பிக்கைக்கு உள்ளால் பயணிக்க வேண்டும்.
அவர்களின் நெஞ்சங்களை தொடக்கூடிய வகையில் அவர்களின் நம்பிக்கைகளை கையில் எடுக்க வேண்டும்.
தமிழ் மக்களின் பெருங்கடவுளான நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு செல்வதும், வெறும் மேலுடன் முருகனை வணங்குவதும், அர்ச்சனை செய்வதும் அங்கு வரும் முதியோர்களைப் பார்த்து அன்பாக சிரிப்பதும், சுகம் விசாரிப்பதும் என்பதிலிருந்து தமிழ் மக்களை வெற்றி கொள்வதற்கான திட்டத்திற்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது.
நல்லூர் முருகன் கோயிலில் போடப்பட்ட பிள்ளையார் சுழியில் இருந்துதான் புதிய ஆட்சியாளர்களின் தமிழின எதிர்ப்பு வியூகம் செயற்படத் தொடங்கியது.
ஈழத் தமிழரை தோற்கடிப்பது என்பதில் ராஜபக்ஷ அரசாங்கத்தினது கொள்கையும், புதிய அரசாங்கத்தினது கொள்கையும் ஒரே இலக்கைக் கொண்டவை.
ஆனால் அங்குள்ள வேறுபாடு என்னவெனில் அது காலகட்ட அணுகுமுறை வேறுபாடு மட்டுமே.
தமிழ் மக்களைத் தோற்கடிப்பதற்கான இராணுவத் திட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியிடமும், சுதந்திரக் கட்சியிடமும் ஒரே விதமான கொள்கைத் திட்டமே இருந்தது.
அதாவது 1987ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த போது மேற்கொள்ளப்பட்ட ஒபரேஷன் லிபரேஷன் (Operation Liberation) என்பதன் முதற் கட்டமாக ஆப்ரேஷன் வடமராச்சி மேற்கொள்ளப்பட்டது.
அந்த நடவடிக்கையின் போது குறிப்பாக வல்வெட்டித்துறையில் உள்ள நெடியகாடு பிள்ளையார் கோயில் நூலகத்தில் இளைஞர்கள் கைது செய்து அடைக்கப்பட்டு அந்த கட்டிடத்திற்குள் இராணுவத்தினர் வெடிகுண்டை வெடிக்க வைத்த போது மொத்தம் 68 இளைஞர்கள் தசைகள்கூட பொறுக்கப்பட முடியாதவாறு சிதறி படுகொலையானார்கள்.
ஆனால் அன்று இந்திய அரசாங்கத்தின் தலையீட்டால் அந்த இராணுவ நடவடிக்கை இடையில் நிறுத்தப்பட்டுவிட்டது.
இந்த இராணுவத் திட்டத்தைத்தான் வெளிநாடுகளின் எதிர்ப்பில்லாத ஒரு சூழலில் அப்படியே முள்ளிவாய்க்காலில் ராஜபக்ஷ அரசாங்கத்தால் நிறைவேற்றி வைக்கப்பட்டது.
இங்கு இரு கட்சிகளும் ஒரே இராணுவத் திட்டத்தையும், ஒரே இராணுவ நடைமுறைகளையுமே கொண்டிருந்தனர். இதில் இருந்து நல்லாட்சிக்கான மனம் உள்ளவர்கள், கெட்ட ஆட்சிக்கான மனமுள்ளவர்கள் என்று இரண்டாக பிரிக்க முடியாது.
ராஜபக்ஸ அரசாங்கம் இராணுவ வெற்றி அடைந்த போது அங்கு ஏற்பட்ட பாரீய மக்கள் படுகொலையால் இலங்கை அரசு சர்வதேச அரங்கில் நெருக்கடிக்கு உள்ளானது ஒதுக்கப்பட்டது.
மக்கள் படுகொலையின் பேரால் செர்பிய மிலோசவிச்சுக்கள், கம்போடிய பொல்பாட்டுக்கள் என ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்க என பலபகுதிகளில் இருந்தும் படுகொலைகளுக்கு காரணமான ஆட்சியாளர்கள் விசாரணை செய்யும் யுகம் நடைமுறைக்கு வந்திருந்த அரசியல் சூழலில் இலங்கை ஆட்சியாளர்களுக்கும் மின்சார நாற்காலிகள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் காத்திருப்பதாக அரசியல் பேசப்படும் நிலை உருவானது.
எனவே இப்போது இந்தத் தலைவர்களையும், இராணுவத் தளபதிகளையும் இலங்கை அரசையும் காப்பாற்றுவதற்கு பிரச்சனைக்குரிய ராஜபக்ஷாக்களால் முடியாது, அவர்களது அரசயில் வழிமுறைகளாலும் முடியாது.
இந்த நிலையில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதன் வாயிலாக அடைந்த இராணுவ வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்றுவதற்கு புதிய அரசியல் கொள்கையும், புதிய வியூகமும், புதிய அரசியல் திட்டங்களும் தேவைப்பட்டன.
அந்த திட்டத்தை தங்கத் தாம்பாளத்தில் ஏந்தியவாறு புதிய நல்லாட்சி அரசாங்கத்திற்கான ஆட்சியாளர்கள் உதயமாயினர்.
தமிழ் மக்களின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு என்று கூறிக் கொண்டு பதவிக்கு வந்ததும் ஓர் ஆண்டிற்குள் அதிகாரப் பகிர்வு நிறைவேற்றப்பட்டுவிடும் என்ற திட்டம் பெரும் ஆரவாரத்துடன் அறிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த 100 நாட்களுக்குள் சிங்கள தலைவர்களுக்கு இடையேயான அதிகாரப் போட்டித் தொடர்பான போட்டியில் அவர்களுக்கான அதிகாரப் பகிர்வு முதற்கண் அரங்கேறியது.
அதாவது ராஜபக்ஷ குடும்பத்திடம் அதிகாரம் குவிந்திருந்ததற்குப் பதிலாக ஜனாதிபதிக்கு மட்டும் இருந்த அதிகாரங்கள் இப்போது ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் பகிரப்பட்டது.
புpரதமர் தனக்கான அமைச்சர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து அளித்தார். இதன் மூலம் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சாகளுக்கு இடையே அதிகாரப் பகிர்வு 100 நாட்களுக்குள் வெற்றிகரமாக நிறைவேறியது.
ராஜபக்ஷ அரசாங்கத்தால் தண்டிக்கபட்டிருந்த பதவிகளுக்கு வரமுடியாது தடைசெய்யப்பட்டிருந்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு மன்னிப்பு அளித்து பதவிகளும், பட்டங்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.
இங்கு அதிகாரப் பகிர்வு மிக வெற்றிகரமாக சிங்களத் தலைவர்களுக்கு இடையே நிறைவேறியது. கூடவே ராஜபக்ஷ அரசாங்கத்தில் அரசியலிலிருந்து ஓரங்கட்டப்பட்டிருந்த திருமதி. சந்திரிகா பண்டாரநாயக்காவிற்கும் அரசியலில் உயர் தீர்மானம் எடுக்கும் மட்டத்தில் பங்கு வழங்கப்பட்டது.
இத்தோடு ஜனநாயகம் மீட்கப்பட்டுவிட்டதான தோற்றம் உருவானதே தவிர தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனை எதுவும் அணுகப்படவில்லை.
ஆனால் அவை பற்றி வாக்குறுதிகள் தொடர்ந்து வழங்கப்பட்டன.
வடக்கு-கிழக்கு இணைந்த அரசியல் தீர்வு. *காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி. அரசியல் கைதிகள் விடுதலை.
யுத்த அழிவில் இருந்து தமிழ் மக்களுக்கு விமோசனம். போர்க்குற்றத்திற்கான சர்வதேச விசாரணை.
மேற்படி வாக்குறுதிகளின் பேரால் தமிழ் மக்களிடம் தேர்தலுக்குப் போகும் போதே இவை எதுவும் வழங்கப்படுவதில்லை என்ற தெளிவான முடிவு அவர்களுக்கு இருந்தது.
எப்படியோ தமிழ்த் தலைவர்களை கைக்குள் போட்டுவிட்டால். தமிழ் மக்களின் முதுகில் சவாரி செய்வது இலகுவாகிவிடும் என்பது முற்கூட்டிய முடிவாக அமைந்தது.
ஒருவருடம் கழிந்தது. “காணாமல் போனோர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று 2016ஆம் ஆண்டு தைப் பொங்கல் விழாவின் போது பிரதமர் அறிவித்தார்.
காணாமல் போனோர்களை வெளிநாடுகளிற்தான் தேட வேண்டும் என்று 2017ஆம் ஆண்டு பொங்கல் தினத்தின் பின்பு நல்லாட்சி அரசாங்கத்தினர் அறிவித்தனர்.
இங்கு பிரச்சனை இப்படித்தான் ஒருநாள் அறிவிப்போம் என்று 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதமே தெரியும்.
ஆனால் பருவகால வளர்ச்சிக்குப் பொருத்தமாக பாம்பு அவ்வவ்க் கால கட்டங்களில் செட்டையைக் கழற்றுவது போல தாம் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக அப்படியே கழற்றிக் கொண்டு போகிறார்கள்.
வடக்கு-கிழக்கு இணைப்பு இல்லை என்பதும் இப்படியே அரங்கேறிவிட்டது.
முதலில் நெருக்கடிகளை உலக அரங்கில் தணிப்பதற்காக சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட போர்க்குற்ற விசாரணை நிகழும் என்று இலங்கை அரசு ஐநா மனித உரிமைகள் ஆணையத்திடம் தீர்மானத்தின் வாயிலாக ஒப்புக் கொண்டது.
பின்பு கலப்பு விசாரணையும் இல்லை என்று சொல்லியது மட்டுமல்ல, ஜனாதிபதி ஜனவரி 5ஆம் தேதி பின்வருமாறு இன்னொரு திடுக்கிடும் அறிவித்தலை செய்துள்ளார்.
படையினர் மீது விசாணைகளை மேற்கொண்டு தண்டிக்க வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கைக்கு நான் ஒருபோதும் செவிசாய்க்க மாட்டேன்” இதன் படி உள்ளநாட்டு விசாரணைமுறைகூட நடைபெறாது என்பது தெளிவாகியுள்ளது.
நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்ததும் முதலில் ஆட்சியில் இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளரான அவரது சகோதரர், இராணுவத் தலைமைத்
தளபதி போன்ற எந்த ஆட்சியாளர்கள் மீதும் விசாரணை நடக்காது என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதனை நிறைவேற்றியதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பின்வருமாறு கூறினார்.
போர்க்குற்ற விசாரணை என்பதன் பேரால் தலைவர்கள் எதிர்நோக்கிய “மின்சார நாற்காலி” பிரச்சனைக்கு நான் முடிவு கட்டிவிட்டேன்.
இனிமேல் அப்படியொரு பேச்சுக்கே இடமில்லை என்று சிங்கள மக்களிடம் உறுதிபடக் கூறினார். இவையெல்லாமே ஆரம்பத்தில் இருந்தே எடுக்கப்பட்ட முடிவுகள் காலகட்ட சூழலுக்குப் பொருத்தமான
வளர்ச்சி நிலைக்கு ஏற்ப ஒவ்வொன்றாக செயற்படுத்தப்பட்டு தமிழர்கள் இலவுகாத்த கிளிகளாக ஆக்கப்பட்டதைக் காணலாம்.
இவை அனைத்துக்குமாக தமிழ்த் தலைவர்களை அணைப்பதுதான் ஒரேஒரு வழி என்பதை நல்லாட்சி அரசாங்கத்தினரும், அவர்களுக்கு பின்னால் இருந்த உள்நாட்டு, வெளிநாட்டு மூளைகளும் தெளிவாக உணர்ந்திருந்தன.
இங்கு தமிழ் மக்கள் வெறுங்கையோடு மட்டும் விடப்படவில்லை. அவர்கள் எதிர்காலத்தில் தலையெடுக்க முடியாதவாறு தமிழ்ப் பகுதிகள் சிங்கள மயமாக்கப்படுவதில் அணைத்துக் கெடுக்கும் தந்திரம் தெளிவாக பின்பற்றப்படுகிறது.
உண்மையில் இலங்கை ஆட்சியாளர்களின் பிரதான எதிரி இந்தியாதான். 2500 ஆண்டுகளுக்கும் மேலாய் இந்த பிரம்மாண்டமான இந்தியாவால் அருகில் இருக்கும் இலங்கையை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரவோ அல்லது வெற்றி கொள்ளவோ அல்லது தன் செல்வாக்கு மண்டலத்திற்கு உட்படுத்தவோ முடியாத அளவிற்கு இலங்கை ஆட்சியாளர்களின் அரசியல் இராஜதந்திர மதிநுட்பமும், கையாளல்களும் மேல் நிலையில் இருப்பதைக் காணலாம்.
சிங்கள அரசின் இராஜதந்திரமானது 2300 ஆண்டுகளுக்கும் மேலான அதுவம் எழுத்தறிவு கொண்ட தொடர்ச்சி அறாத பௌத்த நிறுவனத்தின் பலத்தையும், பின்னணியையும், மெருகையும் கொண்டது.
1980களின் மத்தியில் இலங்கைக்கு எதிராக இந்தி;ய இராணுவம் அச்சுறுத்தலாக இருக்கின்றது என்ற எண்ணத்தைக் கொண்டிருந்த ஜெவர்த்தன அரசாங்கம் இந்திய அரசை அணைத்து தனது இரண்டு எதிரிகளான இந்திய இராணுவத்தையும் - புலிகளையும் மோதவிட்டார்.
இதன் பின்பு அடுத்து பதவிக்கு வந்த ஜனாதிபதி பிரேமதாசா காயப்பட்டிருந்த புலிகளை அணைத்து இந்திய இராணுவத்தை நாட்டைவிட்டு வெளியேற்றுவதில் வெற்றிபெற்றார்.
இது 2500 ஆண்டு கால சிங்கள இராஜதந்திரத்தின் இரண்டு கட்டங்கள் மட்டுமே. அவர்களிடம் இராஜதந்திரக் கலை தொழிற் தேர்ச்சியுடனும், கோட்பாட்டு நுணுக்கத்துடன் வளர்ச்சி பெற்றிருக்கிறது.
இதற்கு நிகராக தமிழ்த் தலைவர்களால் ஒருபோதும் பாத்திரம் வகிக்க முடியவில்லை.
அவர்களின் இராஜதந்திரம் உள்நாட்டிலும் வெற்றிவாகை சூடுகிறது. அண்டைநாட்டுடனும் வெற்றிவாகை சூடுகிறது. சர்வதேச அரங்கிலும் வெற்றிவாகை சூடுகிறது.
தற்போது சர்வதேச அரங்கில் வெற்றிவாகை சூடுவதற்கு அவர்கள் கையாளும் பிரதான கருவி தமிழ்த் தலைவர்கள் மட்டுமே. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாய் வியர்வை சிந்தாத வெற்றியை அவர்கள் பெற்றது மட்டுமல்ல.
நீண்டகாலத்தில் தமிழ் மக்கள் தலையெடுக்க முடியாத அளவிற்கான பொறிகளையும் அவர்கள் உருவாக்கிவிட்டார்கள்.
எந்தொரு சிங்களத் தலைவரிடமும் தமிழ் மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்றோ அல்லது அவர்களது அரசியல் பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டும் என்றோ சிந்திப்பதும் இல்லை அதற்கான அரசியல் திடசித்தமும் இல்லை.
தமிழ் மக்களின் துயர் நிறைந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஓர் ஆத்ம பலம் வேண்டும்.
இதயசுத்தி, நன்நோக்கம், அர்ப்பணிப்பு, கண்ணியம், தர்மாவேசம் இவைகள் அனைத்தும் ஒன்று சேர்பவரிடந்தான் ஆத்மபலம் உருவாகும்.
ஆனால் அதற்கான வாய்ப்புக்கள் சிங்கள தலைவர்கள் பக்கத்தில் இல்லை. இன்று ஆட்சியில் இருக்கும் அனைவரும் 1995ஆம் ஆண்டு செம்மணிப் படுகொலை தொடக்கம், 1987ஆம் ஆண்டு ஆப்ரேஷன்
லிபரேஷன் உட்பட, 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரையான தமிழ் மக்களின் படுகொலைகளோடு தொடர்புள்ளவர்கள்தான். அப்படியென்றால் யாரிடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியும்.
ஆதலால் இந்த நல்லாட்சி அரசாங்கத்திடம் இருந்து எத்தகைய நீதியையும் எதிர்பார்ப்பதற்கு எத்தகைய வாய்ப்பும் இல்லை.
இதை யாராவது செய்து காட்டினால் நிச்சயம் நாம் அவர்களை வரவேற்ற முடியும். அப்படி நம்ப இடமில்லை. 2015ஆம் அண்டின் தொடக்கத்திலேயே அரசியல் தீர்வு காண்பதற்காக போர்க்குற்ற
விசாரணையை விட்டுக் கொடுக்கலாம் என்று நாடாளுமன்ற தமிழ்த் தலைவர்கள் பலரும் கூறினார்கள். நடந்தவற்றிற்கு நீதி காணவேண்டும். நடக்க வேண்டியதற்கு தீர்வு காணவேண்டும்.
இவை இரண்டும் வேறுவேறு என வடமாகாண முதலமைச்சர் பேசினார். அப்படியென்றால் நல்லாட்சி அரசாங்கம் உருவான ஆரம்ப காலத்திலேயே போர்க்குற்ற விசாரணை இல்லை என்ற தீர்மானம் தமிழ்த் தலைவர்களுக்கும், நல்லாட்சி அரசாங்கத்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்டிருந்ததோ என்ற நியாயமான ஐயத்தை கருத்தில் எடுக்காது விடமுடியாது.
ஏல்லாம் ஆரம்பத்திலேயே திட்டமிட்ட தெளிவான வரைபடத்தின் கீழ் தமிழ் மக்களின் தலைவிதி துயரமாய் நீள்கிறது. தமிழ் மக்களின் பேரால் அரசியல் செய்வோர் தமது சோற்றுக் கோப்பைகளுக்குள் தமிழ் மக்களின்
இரத்தமும், கண்ணீரும் இருக்கின்றது என்பதை கண்டுகொள்வார்களோ இல்லையோ நாம் அறியோம்.
“ஒருவர் யார் என்பது அவரது வாழ்கையில் இருக்கிறது, அது வார்த்தைகளிலோ பிரசங்கங்களிலோ அல்ல” என்ற ஓர் அரசியல் ஞானியின் கூற்று கவனத்திற்குரியது.
அதாவது ஒருவர் வெல்லும் சாய்கிறாரா அல்லது கொள்கையின் பக்கம் நிற்கிறாரா? வசதிகளை பார்த்து ஓடுகிறாரா அல்லது இலட்சியங்களை நோக்கி பயணிக்கிறாரா என்பதை அவனவனுக்குரிய வாழ்வு கண்ணாடி போற்காட்டும்.
எப்படியாயினும் தமிழ் மக்களுக்கான நீதியில் இருந்துதான் இலங்கைக்கான அமைதியும், சமாதானமும் பிறக்கமுடியும். இந்த பிராந்தியத்துக்கான அமைதியும், சமாதானமும் பிறக்கமுடியும்.
அளவால் சிறிய மக்களேயாயினும் பலம் பொருந்திய பண்பாட்டைக் கொண்ட நீதியின் சளையாத பற்றுக் கொண்ட அந்த மக்களுக்கான நீதியை தேடுவதற்கான பாதையும், கடினமானது, பயணமும் நெடியது எனத் தெரிகிறது.

Geen opmerkingen:

Een reactie posten