கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கொமாண்டர் சுமித் ரணசிங்க மற்றும் இவ்விவகாரத்தின் பிரதான சாட்சியாளர்களில் ஒருவரான கடற்படை கப்டன் வெகெதர ஆகியோரின் வாக்கு மூலங்கள் ஊடாக இது தொடர்பிலான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணையாளர் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்னவின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய புற நகர் பகுதிகளில் இருந்து வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின் கடத்தல் விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணை ஒரு மாதத்தின் பின்னர் நேற்று மீளவும் கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
முன்னாள் கடற்படை தளபதிஇ வசந்த கரண்ணாகொட தனது பாதுகப்பு உத்தியோகத்தராக இருந்த லெப்டினன்ட் கொமாண்டர் சம்பத் முனசிங்கவுக்கு எதிராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்த மேலதிக விசாரணைகளிலேயே இந்த கடத்தல் விவகாரம் அம்பலத்துக்கு வந்தது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் உத்தரவுக்கு அமைவாக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரட்னவின் ஆலோசனைக்கு அமைய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நாகஹமுல்லவின் வழிகாட்டலின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சானி அபேசேகர உதவி பொலிஸ் அத்தியட்சர் தெசேரா ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய புலனாய்வு பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டீ சில்வா தலைமையில் முன்னெடுக்கப்படும் இருவேறு விசாரணைகளில் இந்த பிரதான கடத்தல் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
கொழும்புஇ கொட்டாஞ்சேனைஇ தெஹிவளைஇ வத்தளை மற்றும் கட்டுநாயக்க உள்ளிட்ட பல பிரதேசங்களில் பல்வேறு உத்திகளை கையாண்டு இந்த கடத்தல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக தெஹிவளையில் 2008.09.17 அன்று பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்பவரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாகநாதன்இ பிரதீப் விஸ்வநாதன்இ திலகேஸ்வரன் ராமலிங்கம்இ மொஹம்மட் திலான்இ மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாணவர்களும் கடத்தப்பட்டிருந்தனர்.
இதனைவிட கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த கஸ்தூரி ஆரச்சிலாகே ஜோன் ரீட், அரிப்பு பிரதேசத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்டாஞ்சேனையை சேர்ந்த அன்டனி கஸ்தூரி ஆராச்சி, திருகோணமலையை சேர்ந்த கனகராஜா கஜன் உள்ளிட்டோரும் கடத்தப்பட்டிருந்தனர். இது குறித்த வழக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றில் இடம்பெறும் நிலையில் நேற்றும் அது குறித்த விசாரணைகள் இடம்பெற்றன.
நேற்றைய விசாரணையின் போது இக்கடத்தல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் உள்ள கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் சம்பத் முனசிங்க மன்றில் ஆஜராகியிருந்ததுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படை சிறப்பு புலனாய்வுப் பிரிவின் கமான்டர் சுமித் ரணசிங்க, கடற்படை சிப்பாய் லக்ஷ்மன் உதயகுமார ஆகியோர் சிறை அதிகாரிகளால் மன்றில் ஆஜர்செய்யப்பட்டனர்.விசாரணை அதிகாரியான குற்றப் புலனாய்வுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவும் உதவி பொலிஸ் அத்தியட்சர் திசேரா ஆகியோர் மேலதிக விசாரணை அறிக்கையுடன் ஆஜராகியிருந்தார். பாதிக்கப்பட்ட தரப்பினராக கடத்தப்பட்டவர்களின் உறவினர்களின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன மன்றில் பிரசன்னமாகியிருந்தார்.
சந்தேக நபர்கள் சார்பில் நேற்று 10 இற்கும் அதிகமான சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர். ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வாவின் தலைமையில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான அனுஜ பிரேமரதனஇ அசித் சிறிவர்தனஇ ரசிக பாலசூரிய உள்ளிட்ட 10 பேரே இவ்வாறு ஆஜராகியிருந்தனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கூடுதல் சக்தியாக சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க மன்றில் பிரசன்னமாகியிருந்தார்.
இந் நிலையில் விசாரணையானது ஆரம்பிக்கப்பட்ட போது, பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா மன்றுக்கு மேலதிக விசாரணை தொடர்பில் எடுத்துரைத்தார்.
‘கனம் நீதிவான் அவர்களே கடந்த 2009.05.28 ஆம் திகதி முதல் இந்த விவகாரம் தொடர்பில் நான் விசாரணை செய்து வருகின்றேன். கடத்தப்பட்ட 11 பேரும் கொழும்பு சைத்திய வீதியிலொ உள்ள பிட்டு பம்பு, திருகோணமலை நிலத்தடி சிறை க்கூடமான கன்சைட் ஆகியவற்றில் தடுத்து வைக்கப்ப்ட்டிருந்தமைக்கு தெளிவான ஆதாரங்கள் உள்ளன. இக்கடத்தல்கள் கடற்படை லெப்டினன் கொமாண்டர் ஹெட்டி ஆரச்சியின் கீழ் இயங்கிய குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளமைக்கான ஆதரங்கள் உள்ளன. அவை அனைத்தும் இன்று மன்றுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இக்கடத்தல் தொடர்பிலான முதல் சந்தேக நபரான சம்பத் முனசிங்கவின் கீழ் சேவையாற்றிய உபுல் பண்டார எனும் கடற்படை வீரர் தன்னிடம் தெரிவித்ததாக இரண்டாவது சந்தேக நபரான கொமாண்டர் சுமித் ரணசிங்க அவரது வககு மூலத்தில் சில விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது கடத்தப்பட்ட ஐந்து மாணவர்களில் நால்வரை திருமலைக்கு கொண்டு போகும் வழியில் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி களனி கங்கையில் வீசிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனைவிட இந்த விவகாரத்தில் பிரதான சாட்சிகளில் ஒருவரான கப்டன் வெலகெதர தனது சாட்சியத்தில் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். தான் திரு மலை கன்சைட் முகாமில் சேவையில் இருந்த போது அதனுள் இருந்து கொல்லப்பட்டவர்களின் சடலங்களை பொலித்தீனில் சுற்றி கெப் வண்டி ஒன்றில் முகாமுக்கு வெளியே எடுத்து செல்வதை தான் அவதானித்ததாக அவர் எம்மிடம் சாட்சியம் அளித்துள்ளார்.
அத்துடன் குறித்த கன்சைட் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்றொரு கடற்படை வீரரின் வாக்கு மூலத்துக்கு அமைவாக அங்கு இருந்த அனைவரும் படிப்படியாக கொல்லப்பட்டுள்ளமை வெளிப்படுத்தப்பட்டது. எனவே இந்த ஐந்து மாணவர் உள்ளிட்ட 11 பேரும் கொலை செய்யப்ப்ட்டிருக்க வேண்டும். இந்த விசாரணைகள் கடற்படையை இலக்காக வைத்து இடம்பெறுவதாகவும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுருத்தல் எனவும் பலரால் கூறப்படுகிறது.
உண்மையில் இந்த விசாரணைகள் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. ஏனெனில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவின் உத்தரவுக்கு அமையவே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இச்சம்பவத்துடன் கடற்படையினருக்கு உள்ள தொடர்பு குறித்து நாம் முதலில் கோத்தபாய ராஜபக்ஷவிடம் கூரிய போதுஇ இது தேசிய பாதுகாப்பு விவகாரம் அல்ல. அவர்கள் தனிப்பட்ட ரீதியில் செய்துள்ளார்கள். எனவே நீங்கள் உங்கள் விசாரணையை தொடருங்கள் என அவர் எமக்கு உத்தரவிட்டார். இதனைவிட அப்போதைய தேசிய புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் ஹெந்த விதாரணவுடனும் நாம் இது தொடர்பில் கலந்துரையாடிய போது அவரும் இதனையே பதிலாக அளித்தார். எனவே எனாம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுருத்தல் ஏற்படும் வகையில் எந்த விசாரணையையும் முன்னெடுக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க கருத்துக்களை முன்வைத்தார். ‘ கனம் நீதிவான் அவர்களேஇ இந்த சம்பவம் குறித்து நேரடியாக தொடர்புபட்ட மேலும் இருவர் கைது செய்யப்படவுள்ளனர். அவர்களை தேடி வருகின்ரோம். இதனைவிட இந்த விவகாரத்துடன் கட்டளை ரீதியாக அல்லது ஆலோசனை ரீதியாக தொடர்புபட்ட உயர் அதிகாரிகள் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பில் நாம் தொடர்ந்து பரிசீலித்து வருகின்றோம்.’ என்றார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட தரப்பின் சட்டத்தரணியான அச்சலா செனவிரத்ன வாதிட்டார்.
‘ கனம் நீதிவான் அவர்களேஇ ஒவ்வொரு பீ அறிக்கையிலும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள லப்டினன் கொமான்டர் ஹெட்டி ஆரச்சி இன்னும் கைது செய்யப்பரவில்லை. அவர் தலைமறைவகைவிட்டதாக நாம் கேள்விப்படுகிறோம்.
இதனைவிட இந்த வழக்கின் முதல் சந்தேக நபர் லெப்டினன் கொமாண்டர் சம்பத் முனசிங்க பினையில் உள்ளார். அவரது சம்பந்தம் தொடர்பில் தெளிவாக விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில்இ அனைவருக்கும் எதிரான குற்றவியல் சட்டத்தின் 296 ஆவது அத்தியாயத்துக்கு அமைய குற்றச்சாட்டு உள்ள நிலையில் அவரது பிணையை இரத்து செய்து அவரையும் விளக்கமறியலில் வைக்க வேண்டும் என் அகோரினார். அத்துடன் ஏனைய சந்தேக நபர்களும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என கோரினார்.
இதனையடுத்து ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, சிரேஷ்ட சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன ஆகியோர் விளக்கமறியலில் உள்ள சந்தேக நபர்களுக்கு பிணை கோரினர். பிரதான சாட்சியான வெலகெதர மனிதக் கடத்தல் சம்பவம் ஒன்று தொடர்பில்இ தற்போது கைதாகியுள்ள 2 ஆம் சந்தேக நபருடன் கோபத்தில் இருந்தார். அதனால் பொய்யான விடயங்களை முன்வைப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். அத்துடன் யாரோ சிலரின் தேவைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவு கடற்படை புலனாய்வுப் பிரிவை இலக்கு வைப்பதா குற்றம் சுமத்தியதுடன் இக்கைதுகளினால் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டி பிணை கோரினர்.
எனினும் சட்ட மா அதிபர் பிணை வழங்க கடும் ஆட்சேபனை தெரிவித்தார். 7 ஆண்டுகளுக்கு முன்னர் சட்ட விரோதமாக கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்கள் 7 வருடங்களாக இல்லை என்பது அவர்கள் கொலை செய்யப்பட்டுவிட்டதாகவே அர்த்தம். எனவே இதற்கு பிணை வழங்க முடியாது என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க வாதிட்டார்.
எனினும் இதற்கு சந்தேக நபர்கள் தரப்பு ஆட்சேபனம் வெளியிட்டது.
இந் நிலையில் பிணை தொடர்பில் ஆட்சேபனங்களை எதிர்வரும் 24 ஆம் திகதி எழுத்து மூலம் மன்றில் சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதிவான் வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்தி வைத்து அதுவரை விளக்கமறியலில் இருந்து வரும் இரு சந்தேக நபர்களையும் தொடர்ந்து அவ்வாறே தடுத்து வைக்க உத்தரவிட்டார். அத்துடன் பிணையில் உள்ள லெப்டினன் கொமாண்டர் சம்பத் முனசிங்கவின் பிணையை ரத்து செய்து அவரை புதிய குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைப்பதா? இல்லையா? என்பதையும் அந்த திகதியில் மன்றுக்கு அறியத்தருமாறு சட்ட மா அதிபருக்கு நீதிவான் பணித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten