இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் எவரும் சிறிது கவனம் செலுத்த முன்வரவில்லை. இந்த விடயத்தில் மேற்குலகம் தனது மனசாட்சியுடன் நடக்கவில்லை. இவ்வாறு கனடிய எழுத்தாளர் எலிஸபெத் ஹக் (Elizabeth Haq) தனது மன ஆதங்கத்தை கனேடிய நஷனல் போஸ்ட் ஊடகத்தில் பதிவு செய்தள்ளார்.
இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ்ப் புலிகள் என அறியப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரப்பட்ட நீண்ட கால உள்நாட்டு யுத்தமானது 2009ல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போது உண்மையில் எத்தனை ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர் என்பது எவருக்கும் தெரியாது.
நிச்சயமாக, இது இந்த யுத்தமானது அண்மைக் காலங்களில் உலகம் சாட்சியாகவுள்ள மிகப் பயங்கரமான குருதி தோய்ந்த ஒரு யுத்தமாக காணப்படுகிறது. ஆனால் சிறிலங்காவுக்கு வெளியிலுள்ள எவரும் இது தொடர்பில் தமது கவனத்தைச் செலுத்தவில்லை.
இரு தரப்புகளுக்குமிடையில் ஏற்பட்ட இந்த யுத்தம் தொடரப்பட்டு பல ஆண்டுகளின் பின்னர் அதாவது 1980களில் விடுதலைப் புலிகள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்ளத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து கடந்த பத்தாண்டில் தீவிரம் பெற்ற இந்த யுத்தத்தின் விளைவாக மிகப் பெரிய இனப்படுகொலை ஒன்றை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டது.
யுத்தத்தில் பங்குகொண்ட இரு தரப்புக்களும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் எனப் பல்வேறு மீறல்களைப் புரிந்தன. புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்துடன் இலங்கையில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இவ்வாறான பல்வேறு மீறல்கள் இடம்பெற்ற போதிலும் ஐக்கிய நாடுகள் சபை இதில் எவ்வித கவனத்தையும் செலுத்தவில்லை. அண்மையில் ஐ.நா வெளியிட்ட இதன் உள்ளக அறிக்கையில், ஐ.நா பொதுச் செயலாளர் இலங்கையில் மோதல் இடம்பெற்ற வேளையில் ஐ.நா அங்கு செயற்படாதது மிகப் பெரிய தவறு என சுட்டிக்காட்டியிருந்தார்.
பி.பி.சி ஊடக சேவையின் முன்னாள் செய்தியாளரான பிரான்செஸ் ஹரிசன் அண்மையில் தான் எழுதி வெளியிட்ட ‘மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன’ என்ற நூலில் இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்களை மிக விரிவாகப் பதிவுசெய்துள்ளார். இந்த யுத்தத்திலிருந்து உயிர் மீண்டவர்களின் மனதை உருக்கும் உண்மைச் சம்பவங்கள் ‘ஐக்கிய நாடுகள் சபை கவனிக்கத் தவறிய யுத்தம்’ என்ற உபதலைப்பின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
9/11 ற்குப் பின்னான உலகில் இலங்கை அரசாங்கமானது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் புலிகளை அழிப்பதில் தீவிரம் காட்டியதுடன், புலிகளை இலகுவில் அழிப்பதற்கான கருவியாக பயங்கரவாதத்தை தனது கையில் எடுத்துக் கொண்டதாகவும் ஆனால் இது மேலும் இலங்கையிலுள்ள சிறுபான்மை இனங்களுக்கிடையில் ஆழமான கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஹரிசன் தனது நூலில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த யுத்தத்தை முன்னெடுப்பதில் இலங்கை இராணுவம், ஐ.நா உறுப்பு நாடுகளான அமெரிக்கா, கனடா, சீனா, இந்தியா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் உதவியையும் பெற்றுக்கொண்டது. 2008 காலப்பகுதியில் இலங்கைக்கு சீனா அதிக ஆயுதங்களை விற்பனை செய்ததாக ஹரிசன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த மிக ஒடுங்கிய சதுப்பு நிலப்பகுதியில் அகப்பட்டுத் தவித்த மக்கள் மீது இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட இறுதிக் கட்டத் தாக்குதலில் 40,000 வரையான மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கையானது 70,000 வரை இருக்கலாம் என நம்பப்படுகிறது.
மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன என்ற ஹரிசனின் நூலில் யுத்தத்திலிருந்து மீண்ட 10 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதகுரு, அருட்சகோதரி, புலி உறுப்பினர் ஒருவரின் தாய் போன்ற உப தலைப்புக்களில் இந்தக் கதைகளை பதிவு செய்துள்ள ஹரிசன் இதன் மூலம் இவர்களின் அனுபவங்களை மேலும் வலிதாக்கியுள்ளார்.
இந்தக் கதைகள் உண்மையானவையாகவும், கண்டிப்பானதாகவும் உள்ளபோதிலும், வாசிக்கின்றவர்களின் மனங்களை உருவகவைக்கின்றன. குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டமை, அரசாங்க படைத்தரப்பின் சோதனைச் சாவடிகளில் பெண்கள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை, பாதுகாப்பு வலயங்களில் அமைக்கப்பட்ட வைத்தியசாலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் போன்றவற்றை ஹரிசன் தனது நூலில் ஆதரங்களுடன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த நூலானது பக்கச் சார்பானதாக எழுதப்படவில்லை. யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ப்பட்ட மீறல்களை மட்டுமல்லாது பிரான்செஸ் ஹரிசன் தனது மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன என்ற நூலில் புலிகளின் சிறுவயது ஆட்சேர்ப்புக்கள், புலம்பெயர்ந்த தமிழ் மக்களை அச்சுறுத்தி நிதி சேகரித்தமை போன்றவற்றையும் விபரித்துள்ளார்.
இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது அதன் வடக்கு கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை தொடர்பில் கல்விமான்களும் சட்டவாளர்களும் ஆழமாக விவாதிக்க வேண்டும் என அண்மையில் ஹரிசன் தெரிவித்துள்ளார்.
நீண்ட கால அடிப்படையில் ஒரு சமூகத்தை நேரடியாக அல்லது மறைமுகமாக அழிப்பது இனப்படுகொலையா என என்னிடம் வினவினால் அதற்கு நான் ஆம் எனப் பதிலளிப்பேன்” என றியேர்சன் பல்கலைக்கழகத்தில் கோட்பாடு மற்றும் பொது நிர்வாகத் துறையின் பேராசிரியர் அபர்ணா சுந்தர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அடிப்படை மக்கள் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் இது இங்கு கேள்விக்குறியாக உள்ளது. இங்கு தேர்தல்கள் நீதியற்ற முறையில் நடாத்தப்படுகின்றன. அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கான அடிப்படைக் கட்டமைப்பு இங்கு காணப்படவில்லை. இங்கு அடக்குமுறை நிலவுகிறது” எனவும் சுந்தர் தெரிவித்துள்ளார்.
உலகில் பாலஸ்தீனம் மற்றும் சிரியர் எதிர்நோக்கும் துன்பங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால் இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் எவரும் சிறிது கவனம் செலுத்த முன்வரவில்லை. இந்த விடயத்தில் மேற்குலகம் தனது மனசாட்சியுடன் நடக்கவில்லை.
இலங்கையில் அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ளாது புறக்கணிக்க திட்டமிட்டுள்ளதாக கனேடிய பிரதமர் ஸ்டீபன் கார்ப்பர் எச்சரிக்கை விடுத்திருந்தமை இலங்கை தொடர்பில் உலகம் தனது கவனத்தை திருப்பியதற்கான ஆரம்பமாக உள்ளது.
இதேபோன்று இலங்கையில் இடம்பெற்ற குருதி தோய்ந்த யுத்தம் தொடர்பாக ஏனைய உலக நாடுகள் கேள்வி கேட்க முன்வரவேண்டியது மிக இன்றியமையாத ஒன்றாகும்.
http://news.lankasri.com/show-RUmqzCSWNUep0.html
Geen opmerkingen:
Een reactie posten