2006 ம் ஆண்டு கனடா மற்றும் அமெரிக்காவில் நடந்த விடுதலைப் புலிகளுக்கான ஆயுத டீலிங், பெரும் சிக்கலில் முடிவடைந்தது யாவரும் அறிந்ததே. கனடாவில் இருந்து அமெரிக்கா சென்று அங்கே ஆயுதம் வாங்க முற்பட்டவேளையில், 7 பேர் கைதாகியிருந்தார்கள். பின்னர் 2வர் மீது கனடாவில் வழக்கு தொடரப்பட்டது. இவை எல்லாம் நீங்கள் ஏற்கனவே அறிந்த செய்திகள். ஆனால் இவர்கள் எவ்வாறு கைதானார்கள் ? இவர்களை பொறியில் சிக்க வைத்த ஏஜன்டுகள் யார் ? பணப் பரிமாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது ? என்பது தொடர்பாக இதுவரை வெளிவராத சில தகவல்களை நாம் இங்கே தர இருக்கிறோம். வாருங்கள் விடையத்துக்குச் செல்லலாம் !
2002ம் ஆண்டு வரை விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை சப்ளை செய்து வந்தது கே.பி தான். இதற்காக கே.பி திணைக்களம் என்று ஒரு அமைப்பே இயங்கிவந்தது. இருப்பினும் 2002ம் ஆண்டு தேசிய தலைவர் அவர்கள் கே.பியுடனான டீலிங்கை இடைநிறுத்தினார். காஸ்ரோ ஊடாகவே இனி ஆயுதங்களை இறக்குமதிசெய்யவேண்டும் என்று பணிப்பை விடுத்தார். இதனூடாக காஸ்ரோ தனது வெளிநாட்டுத் தொடர்பாடல் மூலமாக ஆயுதங்களை தருவிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால் அவர் தருவித்த பல ஆயுதக் கப்பல்கள் இலங்கை கடற்படை மற்றும், இந்திய கடற்படையால் தாக்கி அழிக்கப்பட்டது. இக் கப்பல்களின் நடமாட்டத்தை அமெரிக்கா செய்மதியூடாக கண்காணித்து தகவல்களை வழங்கியதும் பின்னர் தெரியவந்த விடையம்.
புதிய பொறுப்பில் காஸ்ட்ரோ நியமிக்கப்பட்ட பின், வெளிநாடுகளில் ஆயுதம் வாங்கும் பிரிவாக செயல்பட்ட கே.பி. டிபார்ட்மென்ட் என அழைக்கப்பட்ட கே.பி.யின் ஆட்கள் அனைவரும் நீக்கப்பட்டனர். காஸ்ட்ரோ புதிதாக ஆட்களை நியமித்தார். 2002-ம் ஆண்டில் இருந்து, இந்த புதிய ஆட்களிடம், ஆயுதங்கள் வாங்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. காஸ்ட்ரோ நியமித்த ஆட்கள், இரண்டு செட்டாக இருந்தார்கள். ஒரு செட், ஆயுதங்கள் பற்றி ஓரளவுக்கு தெரிந்த ஆட்கள். இவர்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஆயுதம் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். மற்றொரு செட், கனடாவிலும், அமெரிக்காவிலும் வசித்தவர்கள். பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்ற, இளைஞர்கள். திறமைசாலிகள். ஆனால், ஆயுதம் வாங்க நியமிக்கப்படுவதற்கு முன், ஆயுதங்களை கண்ணால் கூட கண்டவர்கள் அல்ல.
விடுதலைப் புலிகள் போன்ற ஒரு இயக்கத்துக்கு ஆயுதம் வாங்குவது, சுலபமான விஷயமல்ல. ஆயுத வியாபாரிகள், தரகர்கள், ஆயுத பிளாக் மார்க்கெட், பற்றியெல்லாம் நன்றாக தெரிந்த, இதற்குள் இறங்கி அடிபட்ட ஆளாக இருக்க வேண்டும். காஸ்ட்ரோவால் நியமிக்கப்பட்ட கனடாவிலும், அமெரிக்காவிலும் வசித்த ஆட்கள் அப்படியான பின்னணி ஏதுமற்றவர்கள் என்பது துரதிஷ்டவசமானது. இது இவ்வாறு இருக்கையில், அமெரிக்க எவ்.பி.ஐ ஏஜன்டுகளும், கனேடிய சிறப்பு பொலிசாரும் இணைந்து 7 பேரைக் கைதுசெய்திருந்தார்கள். அவர்கள் பெயர்:
1) சதா என்கிற சதாஜன் சரசந்திரன்
2) சகில் என்கிற சகிலால் சபாரத்தினம்
3) தணி என்கிற திருத்தணிகன் தணிகாசலம்
4) யோகா என்கிற நடராஜா யோகராஜா
5) டாக்டர் மூர்த்தி என்கிற முருகேசு விநாயகமூர்த்தி
6) சந்துரு என்கிற விஜய்சாந்தர் பத்மநாதன்
7) நாச்சிமுத்து சோக்கிடடீஸ் , ஆகியோர்.
மேலேயுள்ள 7 பேரும், அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு, அங்கே வழக்கை சந்தித்தவர்கள். அமெரிக்காவில் வழக்கு பதிவாகி, கனடாவில் கைது செய்யப்பட்டவர்கள் இருவர். இதில் சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜா ,மற்றும் பிரதீபன் நடராஜா இவர்கள் தம்மை அமெரிக்காவுக்கு அனுப்ப கூடாது என செய்த அப்பீல்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்கள் தற்போது அமெரிக்காவுக்கு என் நேரமும் நாடுகடத்தப்படலாம் என்ற நிலை தோன்றியுள்ளது.
இவர்கள் எப்படி சிக்கிக்கொண்டார்கள் ?
இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில், ஒரு எவ்.பி.ஐ ஏஜன்ட் தன்னை உருமறைப்புச் செய்து, தன் இரகசியக் குறியீடாக Cஈ - 1 என்று தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். இந்த சி.ஐ- 1 என்ற ஏஜன்ட் ஒரு ஆயுத வியாபாரிபோல, நடித்துள்ளார். இவருடைய தொடர்பு எப்படிக் கிடைத்தது என்பது தெரியவில்லை, இருப்பினும் 2006-ம் ஆண்டு நடுப் பகுதியில், யோகா என்கிற நடராஜா யோகராஜா இவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஆயுதங்கள் வாங்குவது தொடர்பாகப் பேசியுள்ளார். அந்த உரையாடல் முழுவதும் யோகா அறியாமல் பதிவு செய்யப்பட்டது. அந்த உரையாடலின்போது, தமக்கு தேவையான ஆயுதங்களின் பட்டியலை யோகா தெரிவித்தார். “ஆயுதங்களை வாங்குவதற்கு முன், அவற்றை பரிசோதிக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார். அதில் சிக்கல் ஏதுமில்லை. எம்மிடம் சாம்பிள் ஆயுதங்கள் உள்ளன. நீங்கள் அமெரிக்காவுக்கு வாருங்கள். தாராளமாக காட்டுகிறோம்” என்றார், சி.ஐ 1 அதிகாரி. (எப்.பி.ஐ யிடம் இல்லாத ஆயுதமா ? தாராளமாக காட்டலாம்தானே)... ஜூலை மாதம் 31-ம் தேதி, யோகா, சதா, ஆகிய இருவரும் நியூயார்க் குவீன்ஸ் பகுதியில் Cஈ௧ஐ சந்தித்தனர். அங்கே இவர்கள் பேசியவை அனைத்தும், சி.ஐ 1 உடலில் பொருத்தப்பட்டிருந்த கருவியில் பதிவாகியது.
புலிகளுக்கு தற்போதுள்ள அச்சுறுத்தல், கிபிர்கள்தான். அவற்றை அடித்து வீழ்த்த வேண்டும்” என்றார் சதா. இதனையடுத்து எஸ்.ஏ 18 ரக ஏவுகணைகளை நாம் தரலாம் என சி.ஐ 1 ஏஜன்ட் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கனடா திரும்பிய இவர்களை பின் தொடர்ந்துள்ளது எவ்.பி.ஐ. இவர்கள் இருவருடைய போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டன. ஆயுத விவகாரத்தில் இவர்களுடன் யார் யார் தொடர்பில் உள்ளார்கள் என்ற லிஸ்ட் தயாரிக்கப்பட்டு, அவர்களும் ரகசியமாக கண்காணிக்கப்பட்டனர். இதற்கிடையே எவ்.பி.ஐக்கு ஒரு சந்தேகம், இவர்கள் நிஜமாகவே ஆயுதம் வாங்கும் ஆட்கள்தானா என்று ஏற்பட்டது. காரணம் இவர்கள் தெருவித்த சில தகவல்கள் தான். மிகவும் சாதாரண பொதுமகன் போல இவர்கள் காணப்படுகிறார்களே. இவர்களிடம் பணம் இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்கவேண்டும் என்று எண்ணியது எப்.பி.ஐ. இந்த சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, இவர்களிடம் ஆயுதம் வாங்கும் அளவுக்கு பணம் (சுமார் 1 மில்லியன் டாலர்) உள்ளதா என்று செக் பண்ணுவதற்கு கனேடிய உளவுத்துறையின் உதவியை நாடியது எவ்.பி.ஐ. அப்போது, இவர்கள் இலங்கை சென்று திரும்பியபின், பெருமளவு பணம், இவர்களது பேங்க் கணக்குகளுக்கு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சதாவுடன் தொடர்பில் இருந்த சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜா (தற்போது கனடாவில் இருந்து அமெரிக்கா அனுப்பப்பட உள்ளவர்) 2006-ம் ஆண்டு, திடீரென தமது கிரெடிட் கார்ட்டுக்கு 1 லட்சம் டாலர் பணம் டிப்பாசிட் செய்துவிட்டு, அதில் இருந்து செலவு செய்த விபரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பிரி-பே கிரெடிட் காட்டுகள் உள்ளது. அதாவது நீங்கள் பணத்தை டெபாசிட் பண்ணிவிட்டு, குறிப்பிட்ட கிரெடிட் கார்டில் பொருட்களை வாங்கலாம். இப் பணம் எங்கிருந்து வருகிறது என்று அமெரிக்க எவ்.பி.ஐ ஆராய்ந்தவேளை அது தமிழர் புணர்வாழ்வுக் கழகம் ஊடாகவே இவர் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்தே அமெரிக்காவில் இயங்கி வந்த ரி.ஆர்.ஓ அலுவலகம் முற்றுகையிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தற்போது எப்.பி.ஐக்கு இவர்கள் யார் என்று புரிந்து விட்டதில், ஆகஸ்ட் 7-ம் தேதி அடுத்த சந்திப்பு நியூயார்க் குவீன்ஸ் பகுதியில் நடந்தது. அந்த சந்திப்புக்கு யோகா மட்டுமே வந்து, சி.ஐ 1 ஏஜன்டை சந்தித்தார். இதையடுத்து, விலை பேசும் படலம் தொடங்கவே, எமது நிதிப் பொறுப்பாளரை அழைத்து வருகிறேன்” என்று கூறிவிட்டு சென்றார், யோகா. சனிக்கிழமை, ஆகஸ்ட் 19-ம் தேதி அடுத்த சந்திப்பு. இம்முறை யோகா வரவில்லை. சதா, வேறு இருவருடன் வந்து சேர்ந்தார். “இவர்தான் எமது நிதி பொறுப்பாளர். விடுதலைப் புலிகளின் ஆயுத கொள்வனவுக்கு நிதி அப்ரூவல் கொடுப்பது இவர்தான்” என சதா அறிமுகப்படுத்திய நபர், சகில் என்கிற சகிலால் சபாரத்தினம்.
இவர்களுடன் கூட வந்திருந்த மூன்றாவது நபர், தணி என்கிற திருத்தணிகன் தணிகாசலம். இவர்கள் மூவரும் கனடாவில் இருந்து காரில், முதல் நாளே வந்திருந்தனர். நியூயார்க் குவீன்ஸில் இவர்கள், சி.ஐ 1 ஐ சந்தித்தனர். “ஆயுதங்களின் சாம்பிள் பார்க்க வேண்டும். அதன் பின்னர்தான் விலை பற்றி பேச முடியும்” என்றனர். சரி, வாருங்கள்” என இவர்களை அழைத்துக்கொண்டு சி.ஐ 1, லாங் லைன்ட் சென்றார். அங்கேயுள்ள ஒரு வீட்டில் வைத்து, “ஆயுத வியாபாரத்தில் எனது உதவியாளர்கள் இவர்கள்” என்று இரண்டு பேரை அறிமுகப் படுத்தினார். அவர்களும், எவ்.பி.ஐ ஏஜென்டுகள்தான். நீதிமன்ற ஆவணங்களில் இவ்விரு ஏஜன்டுகளின் இரகசியக் குறியீடாக யூசி.1 யூசி.2 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து பல பணி நேரம் பேசிய இவர்கள், இறுதியில் இதையடுத்து, மற்றொரு அறையில் இருந்து ஒரு நீளமான மரப் பெட்டியை கொண்டுவந்தனர். அதை திறந்தபோது, அதற்குள் புத்தம் புதிய எஸ்.ஏ- 18 ரக ஏவுகணை ஒன்று இருந்தது. ஏவுகணையுடன், அதன் ஃபயரிங் டியூப், ட்ரிக்கர் சிஸ்டம் ஆகியவற்றையும் எடுத்துக் காட்டினார், சி.ஐ 1 ஏஜன்ட். இவற்றை தவிர, மரப் பெட்டிக்குள், இரு ஏகே 47 துப்பாக்கிகள் புத்தம் புதிதாக இருந்தன.
இதுமட்டுமல்லாது, ஆயுதங்களை கைகளில் கொடுத்து அதனை தொட்டுப்பார்க்கவும் சொல்லியுள்ளனர் ஏஜன்டுகள். அப்படி என்றால் தான் இவர்களின் கைரேகைகள் அதில் பதியும். இவ்வாறு சகல விதத்திலும் ஆயுதம் வாங்கச் சென்ற தமிழர்களை பொறியில் சிக்கவைத்தனர் இந்த 3 எப்.பி.ஐ ஏஜன்டுகள். இந்த மூன்று ஏஜன்டுகளும் குறிப்பிட்ட தேதி ஒன்றில் பணத்துடன் வரச்சொல்லி அவர்களை அனுப்பி வைத்தனர். பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக கைதுகள் இடம்பெற்றது. பேசிய அனைத்து வார்த்தைகளையும் பதிவுசெய்த எவ்.பி.ஐ ஏஜன்டுகள், பின்னர் 7 பேரையும் அமெரிக்க நீதிமன்றில் நிறுத்தினர். இதில் சம்பந்தப்பட மேலும் 2 வரை கனடாவில் இருந்து நாடு கடத்தவேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தனர். இதற்கு அமைவாகவே தற்போது கனேடிய நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. கனடாவிலும் சரி, அமெரிக்காவானாலும் சரி, விடுதலைப் புலிகளின் பல மில்லியன் டாலர்கள், இவ்வாறு எப்.பி.ஐ ஏஜன்டுகளால் கைப்பற்றப்பட்டது. இதேவேளை ஈழத்தில் பாரிய போர் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. இந்தப் பாரிய சிக்கலே, புலிகளின் பின்னடைவுக்கு ஒரு காரணியாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. குறித்த நேரத்தில் புலிகளால் கோரப்பட்ட ஆயுதங்கள் வன்னிக்குச் சென்றிருந்தால், போரின் பரிநாமமே மாறியிருக்கும். வான் தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டிருந்தால், இலங்கை இராணுவத்தின் நகர்வுகள் வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கும் என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட விடையம்.
குறிப்பிட்ட இச் சம்பவத்தால் மட்டும் தான் புலிகள் யுத்தத்தில் பாரிய பின்னடைவைச் சந்தித்தார்கள் என்று கூறிவிடமுடியாது. அதில் பல காரணிகள் இருப்பதை அனைவரும் அறிவார்கள். கருணா போன்ற துரோகிகள் தமது ஆதரவாளர்களை புலிகள் இயக்கத்தில் ஊடுருவ விட்டு, இலங்கை அரசுக்கு பல தகவல்களை வழங்கவைத்தார் என்பதனையும் யாரும் மறுக்கமுடியாது !
Geen opmerkingen:
Een reactie posten