அப்படி என்றால் விடுதலைப் புலிகளை அவர் இழிவுபடுத்திப் பேசியதையும், வட கிழக்கில் இருந்து இராணுவத்தை விலக்கவேண்டியது இல்லை என்றும், மற்றும் யாழில் சிங்கக் கொடியைக் கையில் பிடித்து ஆட்டோ ...ஆட்டென்று... ஆட்டியது எல்லாம் சரி என்கிறார்களா இவ்வமைப்புகள் ? அடிப்படையில் உறுதியின்றி புலம்பெயர் அமைப்புகள், எவ்வாறு செயல்படமுடியும் ? IRA என்ற பெயரில் செயல்பட்ட அமைப்பு, ஒரு காலத்தில் பிரித்தானியாவில், தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த அமைப்பே அயர்லாந்தில் அரசை நிறுவியது. அயர்லாந்து மக்கள் ஐ.ஆர்.ஏ அமைப்பை ஒருபோதும் தீவிரவாதிகள் என்று சொன்னதே கிடையாதே. தமது மக்களுக்காகப் போராடிய அமைப்பு என்று தானே மெச்சி வருகிறார்கள் ! இதேபோலவே ஆபிரிக்க விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய பலர் இன்னமும் ஏ.என்.சி அமைப்பில் இருக்கவில்லையா ? அந்த அமைப்பு ஆபிரிக்காவை ஆளவில்லையா ? அவர்கள் எப்போதாவது தமது போராளிகளை தீவிரவாதிகள் என்று வர்ணித்தார்களா ? எப்போதும் ஏ.சி காரில், கையில் மோபைல் போனுடன் , சொகுசாக அலைந்து திரியும் சம்பந்தன் ஐயாவுக்கு, காட்டில் 1 மணி நேரமாவது வசிக்கத் தெரியுமா ?
மழையிலும் நுளம்புக் கடியிலும், உரிய மருத்துவ வசதிகள் இன்றி, போதிய உணவுகள் இன்றி காட்டிலும் மேட்டிலும் தமிழர்களுக்காகப் போராடினார்களே புலிகள். போராடியது மட்டுமா ? தமது விடுதலை உணர்வுக்காக உயிரையும் அர்ப்பணித்தார்களே ? அவர்களைப் பார்த்து காறித் துப்பியுள்ளார் சம்பந்தன் ஐயா. இது ஒரு மாபெரும் வரலாற்றுத் துரோகம். மானமுள்ள எந்தத் தமிழனும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டான். புலம்பெயர் நாடுகளில் உள்ள மக்கள் அவையைத் தவிர இதுவரை எந்த ஒரு அமைப்பும் இதனைக் கண்டிக்கவில்லை. மக்கள் அவையே என்னும் அமைப்பே சம்பந்தன் பேச்சை முதன் முதல் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தத் துணிச்சல் ஏன் மற்றைய அமைப்புகளுக்கு இல்லாது போனது ? கறுப்பு என்னும் (இனந்தெரியாத மின்னஞ்சல் பத்திரிகை) மின்னஞ்சலூடாக வெளிவந்து, அதில் நாடு கடந்த அரசைப் பற்றி எழுதியிருந்தால், அதற்கு கூட மறுப்பறிக்கை விட நாடு கடந்த அரசாங்கம் தயங்குவது இல்லை. உடனே அறிக்கை விடுவார்கள். ஆனால் தற்போது சம்பந்தர் பேசியிருக்கும் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்க மட்டும் இந்த அமைப்புகள் அச்சப்படுகிறது. சம்பந்தன் என்றால் என்ன சர்வ வல்லமை படைத்தவரா ?
அறிந்தோ அறியாமலே, புலம்பெயர் நாடுகளில் எல்லாம் தமிழர்களை புலிகளாகவே பார்க்கிறார்கள் வேற்றின மக்கள், என்பது தான் யதார்த்தம். புலிகள் தான் எமக்கு ஒரு முகவரியைத் தேடித்தந்தவர்கள். போராடினார்கள், போராட்டத்தில் வீழ்ந்தால் கூட அதில் இருந்து யுத்தக் குற்றம், இன அழிப்பு என்ற இரு பெரும் சக்திகளை விட்டுச் சென்றவர்களும் அவர்களே. புலிகளைப் புறந்தள்ளி, அவர்களை இழிவுபடுத்தி மேற்குலகோடு இணைந்து தீர்வு ஒன்றைப் பெற்றுவிடலாம் என்று, நினைக்கும் சில தமிழ் தலைவர்களுக்கு ஒரு விடையம் நன்கு புரியவேண்டும். அதாவது உங்கள் அடையாளங்களை தொலைத்துவிட்டு, மேற்குலகின் மோகத்தில் அலையவேண்டாம். பின்னர் நீங்கள் யார் என்று, நீங்களே தேடிப்பார்க்கவேண்டிய நிலை தான் தோன்றும். என்றைக்கும் விலைபோகாத எம் தேசிய தலைவர் போல வாழக் கற்றுக்கொள்ளுங்கள். வாழ்வோ சாவோ எமது இலட்சியம் ஒருபோதும் தோற்ப்பது இல்லை ! அதனை மனதில் நிறுத்திக்கொண்டால் போதும் !
Geen opmerkingen:
Een reactie posten