இலங்கை இராணுவத்தினரின் புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் குறித்து மிக கவனமாக ஆராயப்பட வேண்டும் என்று அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், அனைத்துலக அகதிகள் பாதுகாப்புத் தேவைப்படுவோர் தொடர்பாக அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையம், வழிகாட்டு ஆவணம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இந்த ஆவணத்தில், இலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையோர், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள், ஒருபாலுறவுச் சேர்க்கையாளர்கள் போன்றோர், அனைத்துலக அகதிகள் பாதுகாப்புத் தேவைப்படக் கூடியவர்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
அதேவேளை, இலங்கை இராணுவத்தினரின் விண்ணப்பங்களை மிகக் கவனமாக ஆராய வேண்டும் என்றும் அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.
வடக்கு கிழக்கில் மூன்று பத்தாண்டுகளாகத் தொடர்ந்த ஆயுதமோதலின் போது, இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் அனைத்துலக மனித உரிமைச் சட்ட மீறல்களும், போருக்குப் பிந்திய மோசமான மனித உரிமை மீறல்களும் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து புகலிடம் கோருபவர்களின் அனைத்துலகப் பாதுகாப்பு தேவைகளை மதிப்பிடுவதற்கான அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையத்தின் தகுதி வழிகாட்டி -2012‘ என்ற அறிக்கையிலேயே இந்தப் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
புகலிடம் கோருவோரின் விண்ணப்பங்கள் குறித்து முடிவெடுப்போர் மற்றும் அரசுகளுக்கு உதவும் நோக்கிலேயே இந்த வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.
இதில், ஈபிடிபி, புளொட் மற்றும் இலங்கை அரச ஆதரவு மற்றும் எதிர்த்தரப்பு, துணை ஆயுதக்குழுக்கள் என்பனவற்றின் முன்னாள் உறுப்பினர்களின் விண்ணப்பங்களையும் கவனமாக பரிசீலிக்கும்படியும் அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையம் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmqzCRXNVkp7.html
Geen opmerkingen:
Een reactie posten