தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 9 december 2012

இலங்கைப் படைத்தரப்பைச் சோ்ந்தோருக்கு கனடா குத்தியுள்ள முத்திரை !


இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர், தப்பிச்சென்ற இரண்டாவது படை அதிகாரியினது புகலிடக் கோரிக்கையினையும் கனடா நிராகரித்துள்ளது.
ஏற்கனவே இலங்கைக் கடற்படையில் கொமடோர் தர அதிகாரியாக இருந்த நடராசா குருபரன் என்பவரின் புகலிடக் கோரிக்கையை கடந்த யூலை மாதம் கனடிய அதிகாரிகள் நிராகரித்திருந்தனர்.
கொமடோர் குருபரன் போரில் நேரடியாக பங்கேற்ற ஒருவரல்லர்.
அவர் ஒரு தொழில்நுட்ப அதிகாரியாகவே இலங்கைக் கடற்படையில் பணியாற்றினார்.
போரின்போது வடக்கு கிழக்கில் பணியாற்ற தான் அனுமதிக்கப்படவில்லை என்றும் தென்பகுதியிலேயே பணிக்கு அமர்த்தப்பட்டதாகவும் தனது நடமாட்டங்கள் புலனாய்வுப் பிரிவினரால் கண்காணிக்கப்பட்டதாகவும் கனடிய அதிகாரிகளிடம் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கொமடோர் குருபரன் இலங்கைக் கடற்படையில் மூன்றாம் நிலைப் பதவியை வகித்தவர். இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பதவியையே வகிப்பது வழக்கம்.
அவரையடுத்து ரியல் அட்மிரல் பதவியுள்ளது. அதற்கடுத்ததே இந்த கொமடோர் பதவி. போர்க்குற்றங்கள் எதிலும் ஈடுபட்டதற்கான சாட்சியங்கள் ஏதும் இல்லாத போதிலும் கொமடோர் குருபரனின் புகலிடக் கோரிக்கையை கனடா நிராகரித்ததற்கு காரணம், போர்க்குற்றங்களைச் செய்த கடற்படையில் உடந்தையாக இருந்தார் என்பதே.
இப்போது இலங்கை இராணுவத்தின் கப்டன் பிரியசாந்த எனப்படும் காலியைச் சோ்ந்த ரவீந்திர வடுதுர பண்டானகே என்ற அதிகாரியின் புகலிடக் கோரிக்கையையும் கனடா நிராகரித்துள்ளது.
இவரது புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கும் அதே காரணம் தான்.
தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் மீறல்களை இழைத்தது தனக்கு தெரியும் என்று கூறியுள்ள கப்டன் பிரியசாந்த அவை எதிலும் தொடர்புபடவில்லை என்று சாட்சியமளித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தின் மீது இவர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் பாரதூரமானவை. பொதுமக்களை சித்திரவதை செய்தது, தாக்கியது, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது என்பன அவற்றுட் சில.
அதைவிட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வீட்டில் குண்டு வைக்குமாறு கேணல் அத்தபத்து என்ற அதிகாரி தனக்கு உத்தரவிட்டதாகவும் அதை மறுத்ததால் கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் கப்டன் பிரியசாந்த சாட்சியமளித்துள்ளார். 
கொழும்பில் சுற்றிவளைப்பு தேடுதல்களில் தான் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அப்போதும் தமிழர்கள் துன்புறுத்தப்பட்டது தனக்குத் தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தவர் என்பதால் கப்டன் பிரியசாந்த புகலிடம் கோருவதற்கு தகுதியற்றவர் என்று கனடிய அகதிகள் சபை கூறியுள்ளது.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்கு குண்டு வைக்குமாறு கேட்கப்பட்டதால் இவர் நம்பகத்திற்குரிய அதிகாரியாக இருந்துள்ளார் என்றும், தமிழ் மக்க்ள மீதான இராணுவத்தின் மிருகத்தனமான செயல்களை அறிந்துள்ளார் என்பதாலும் இவர் புகலிடம் பெறத் தகுதியற்றவர் என்று கனடிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இலங்கையில் போரின் இறுதி சில ஆண்டுகளில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட பரந்தளவிலான திட்டமிட்ட தாக்குதல்கள் இடம்பெற்ற காலப்பகுதி முழுவதும் இவர் ஒரு கப்டனாக பணியாற்றியுள்ளார்.
இலங்கைப் படைகள் மனித குலத்துக்கு எதிரான எண்ணற்ற குற்றங்களைச் செய்துள்ளன என்று தான் கண்டறிந்துள்ளதாகவும் அகதிகள் குடிவரவுச் சபையின் உறுப்பினர் மைக்கல் மிவசைர் தனது தீர்ப்பில் எழுதியுள்ளார். சிங்க ரெஜிமென்டைச் சோ்ந்த இந்த அதிகாரி தான் ஒரு கிளர்ச்சி முறியடிப்பு பயிற்சி பெற்றவர் என்று கூறியபோதும் குற்றச்செயல்கள் எதிலும் ஈடுபடவில்லை என்று கூறியதைக் கனடா நம்பவில்லை.
அதேவேளை இலங்கைப் பாதுகாப்பு அமைச்சும் இவர் ஒரு மோசடியான அதிகாரி என்றே சான்றிதழ் கொடுத்துள்ளது.
2009 நவம்பரில் 10வது உலக Tr 10 சம்பியன் போட்டிகளுக்காக இலங்கை இராணுவ அணியின் பயிற்சியாளராகச் சென்றபோதே இவர் அடைக்கலம் கோரியதாக இராணுவத் தலைமையகம் கூறுகிறது.
1993ம் ஆண்டில் 2வது லெப். அதிகாரியாக இராணுவத்தில் சோ்க்கப்பட்ட கப்டன் பிரியசாந்த சர்ச்சைக்குரிய ஒரு அதிகாரியாகவே இருந்து வந்தார்.
பதவியுயர்வு பரீட்சைகளில் மோசடி செய்தும் ஏனைய செயற்பாடுகளின் மூலமுமே இவர் ஒரு அதிகாரியானார்.
அனுமதியின்றி விடுப்பில் செல்வது இவருடைய ஒரு வழக்கமான பழக்கம்.
நான்காவது கட்ட ஈழப் போரின் போது அவர் போர் நடந்த பிரதேசங்களுக்கு அண்மையில் எங்குமே அவர் பணியாற்றவில்லை.
2006ம் ஆண்டு தொடக்கம் 2009ல் தப்பிச் செல்லும் வரை கொழும்பைச் சுற்றிய பகுதிகளிலேயே பணியாற்றியுள்ளார்.
அதுவும் நிர்வாகப் பணிகளிலேயே பெரும்பாலும் இவர் ஈடுபடுத்தப்பட்டிருந்தாரே தவிர தேடுதல்கள் போன்ற இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.
பெரும்பாலான நேரங்களில் இவர் தற்காப்பு பயிற்றுனராகவே இருந்தார்.
தமிழ் அரசியல்வாதி ஒருவரின் வீட்டில் குண்டு வைக்குமாறு தனக்கு ஒரு கேணல் உத்தரவிட்டதாக இவர் கூறியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அப்படி எதுவும் நடக்கவேயில்லை.
கனடாவில் புகலிடம் பெறுவதற்காக அவர் அங்குள்ள அதிகாரிகளை முட்டாளாக்குவதற்காக எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார் எனக் கூறியுள்ளது பாதுகாப்பு அமைச்சு.
இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு கப்டன் பிரியசாந்தவின் குற்'றச்சாட்டுகளை நிராகரிக்க வேண்டிய நிலையில் உள்ளதால் அவர் போர் சார்ந்த எந்தக் குற்றச் செயல்களிலும் ஈடுபட்டவரல்ல என்று கூறவேணடியதாயிற்று. ஆனாலும் 16 ஆண்டுகள் இராணுவத்தில் இருந்த இந்த அதிகாரியை கனடா நம்பத் தயாராகவ இல்லை.
இப்போதுள்ள முக்கிய விவகாரம் என்னவென்றால் ஒட்டுமொத்த இலங்கைப் படையினருமே மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்தவர்கள் அல்லது அதற்குத் துணைபோனவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதுதான்.
வேறு எந்த நாடும் இந்தளவுக்கு இலங்கைப் படையினரை அடையாளப்படுத்திக் காட்டவில்லை.
அவ்வாறு அடையாளப் புடுத்தியிருந்தால் போரில் பங்கேற்ற மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஐநாவுக்கும், மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் ஜோ்மனி உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கும், மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா பிரித்தானியாவுக்கும், மேஜர் ஜெனரல் உதய பெரேரா மலேசியாவுக்கும் பிரதித் தூதுவர்களாகச் சென்றிருக்க முடியாது.
அட்மிரல் வசந்த கரன்னகொட ஜப்பானுக்கும், அட்மிரல் திஸர சமரசிங்க அவுஸ்திரேலியாவிலும் தூதுவர்களாகப் பதவியேற்றிருக்க முடியாது.
ஆனால் கனடாவின் பார்வை வித்தியாசமானது. ஏற்கனவே முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் லயனல் பலகல்லவை தூதுவராக இலங்கை நியமித்தபோது கனடா அதனை நிராகரித்திருந்தது.
போர்க் குற்றச்சாட்டுகள் விடயத்தில் இறுக்கமான நடவடிக்கையை வலியுறுத்தி வரும் கனடா அதில் தொடர்புபட்டவர்கள் என்று தான் சந்தேகிப்பவர்களுக்குப் புகலிடம் கொடுக்க மறுத்து வருவது ஆச்சரியமானதல்ல. கப்டன் பிரியசாந்த விடயத்திலும் அதுவே நடந்துள்ளது.
இவரது சாட்சியத்தை கனடா தீவிரமாக எடுத்துக் கொண்டாலும் அவரது புகலிடக் கோரிக்கையை ஏற்கவில்லை.
இந்தக் கட்டத்தில் இன்னொரு பிரச்சினையும் எழுப்ப்பப்படுகிறது.
கனடா இவ்வாறு கண்டிப்புடன் நடந்துகொண்டால் போர்க் குற்றங்கள் தொடர்பாக சாட்சியமளிக்க இலங்கை இராணுவ அதிகாரிகள் எப்படி முன்வருவார்கள் என்பதே அது.
தனக்கு பாதுகாப்பான சூழல் ஒன்று இருந்தால் மட்டுமே எந்தவொரு படை அதிகாரியும் வலிந்து சாட்சியமளிக்க முன்வருவார். போர்க் குற்றங்கள் குறித்து அறிந்திருந்தாலும் அல்லது அதில் தொடர்பு பட்டிருந்தாலும் அத்தகைய இராணுவ அதிகாரிகளுக்கு இலங்கையில் இருப்பதற்கு எந்தச் சிக்கலும் இல்லை.
வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று சாட்சியமளித்தாலும் தனக்குப் பாதுகாப்பு இல்லையென்றால் எவரும் வாயைத் திறக்க முன்வரப் போவதில்லை.
ஒருவகையில் இது இலங்கை அரசுக்கு நிம்மதியான விடயம் தான்.
போர்க்குற்றங்கள் தொடர்பாக சாட்சியமளித்து வெளிநாடுகளில் புகலிடம் தேட முனையும் படை அதிகாரிகளை இது தடுத்து விடும். அதேவேளை இதுபோன்ற சாட்சியங்கள் போர்க்குற்றங்கள் தொடர்பான நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற சர்வதேச அழுத்தங்களை மேலும் அதிகரிக்கவே செய்யும்.
வெளிநாடுகளில் அகதிகளாகப் புகலிடம் கோருவோர் அளிக்கும் சாட்சியங்கள் முக்கியமானவை.
அவை குறிப்பிட்ட நாடுகள் தொடர்பான தீர்மானங்களுக்கும் வழிவகுக்கின்றன.
முன்னர் இலங்கையிலிருந்து சென்ற தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தமது புகலிடக் கோரிக்கை மனுக்களில் தனியே இலங்கைப் படையினரை மட்டும் குற்றம் சுமத்தியதில்லை.
கட்டாய ஆட்சோ்ப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை விடுதலைப்புலிகள் மீதும் சுட்டிக்காட்டியே அவர்கள் புகலிடம் கோரினர். அவையெல்லாம் விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பாக பல நாடுகள் முத்திரை குத்தக் காரணமாக அமைந்தது என்ற கசப்பான உண்மையை பலரும் ஏற்கத் தயாராக இல்லை. இதுபோலத்தான் இலங்கைப் படையினருக்கும் நடந்துள்ளது.
புகலிடம் கோரியுள்ள இலங்கை இராணுவ அதிகாரிகளை ஏற்கவோ, அவர்களின் தரப்பு நியாயங்களை ஏற்கவோ கனடா தயாராக இல்லாது போனாலும், அவர்களின் சாட்சியங்களை வைத்து ஒட்டுமொத்த இலங்கைப் படையினரையும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்குத் துணை போனதாக எடைபோட்டு வைத்துள்ளது.
சுபத்ரா

Geen opmerkingen:

Een reactie posten