தமிழர்களும், பல்கலைக்கழக மாணவர்களுமே வளர்த்து விட்டதாக படைத்தரப்பும் அரசும் கூறினாலும், சிங்களவர்களும், பிரேமதாஸ போன்ற அரசியல்வாதிகளும் சேர்ந்தே விடுதலைப் புலிகளை வளர்த்து விட்டனர். இவ்வாறு கணிதவியல் பேராசிரியர் எஸ்.சிறி சற்குணராஜா, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஹத்துருசிங்கவுக்கு நேரில் எடுத்துரைத்தார்.
பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் கைதானதைத் தொடர்ந்து முடங்கியுள்ள கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து ஆராய யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், துறைத் தலைவர்கள், கைது செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் ஆகியோரை யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஹத்துருசிங்க பலாலி படைத் தளத்தில் சந்தித்தார்.
அங்கு உரையாற்றிய மஹிந்த ஹத்துருசிங்க, முப்பது வருட கால அழிவுக்கு புலிகளும் அவர்களை உருவாக்கி வளர்த்துவிட்ட தமிழர்களும் பல்கலைக்கழக சமூகமுமே காரணம் என்று அடிக்கடி கூறிக்கொண்டிருந்தார்.
இதன் போது குறுக்கிட்டு தெளிவுபடுத்துகையிலேயே பேராசிரியர் சிறி சற்குணராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் அலட்சியப்படுத்தப்பட்டதன் விளைவாகவே புலிகள் தோன்றினர். இன்று மீண்டும் புலிகளை உருவாக்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது என்றால் அந்த அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதே அதற்குக் காரணம்.
நீங்கள் கூறுவது போன்று இத்தகைய அழிவுகளுக்கு தனியே புலிகளின் உருவாக்கம் மட்டுமே காரணம் அல்ல.
தமிழர்களின் அடிப்படை மூலப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தொடர்ந்தும் அலட்சியப்படுத்தப்பட்டதாலேயே புலிகள் உருவானார்கள்.
1981 ஆம் ஆண்டு நீங்கள் படையில் இணைந்தபோது அப்போது இராணுவத்தின் எண்ணிக்கை வெறும் 12ஆயிரம் மட்டுமே என்று கூறினீர்கள். அந்தக் காலத்தில் புலிகளின் எண்ணிக்கைகூட 20 பேர் வரையில் மட்டுமே.
அவ்வாறு சொற்ப எண்ணிக்கையாக இருந்த புலிகளை பெருக வைத்தமைக்கு காரணம் தமிழர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் மட்டுமல்ல, தொடர்ந்தும் அலட்சியப்படுத்தப்பட்ட மூலப் பிரச்சினையும், சிங்கள அரசியல்வாதிகளுமே காரணம்.
இந்திய இராணுவம் விடுதலைப் புலிகளை அழித்துவிடும் நிலையில் இருந்தபோது ஆயுதங்களை வழங்கி புலிகளின் அழிவைத் தடுத்தவர் அப்போதைய இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸ தான்.
இந்த நிலையில் தமிழ் மக்களும் பல்கலைக்கழக மாணவர்களுமே புலிகளை வளர்த்தார்கள் என்று சொல்வது என்ன நியாயம்?
படையினரால் கைது செய்யப்பட்ட விஞ்ஞானபீட மாணவனை நான் தனிப்பட்ட முறையிலும் என்னுடைய மாணவன் என்ற ரீதியிலும் நன்கறிவேன்.
குறித்த மாணவன் பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடையவன் என்று நீங்கள் கூறுவதை ஒரு போதும் நான் ஏற்கமாட்டேன். ஏனெனில் அவன் அப்படிப்பட்ட மாணவன் அல்லன் என்பது எனக்கு தெரியும்.
நீங்கள் (அரசும் இராணுவமும்) மூலப் பிரச்சினையைத் தீர்க்காமல் விளைவுக்கு மாத்திரம் அதனைக் காரணம் சொல்லி தீர்வு தேட நினைக்கிறீர்கள்.
ஆனால் மூலப் பிரச்சினையை தீர்க்காவிட்டால் அதனால் உண்டாகின்ற விளைவுகள் தொடரவே செய்யும் என்று பேராசிரியர் எஸ்.சிறி சற்குணராஜா இடித்துரைத்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten