இலங்கையில் நடந்த நான்காம் கட்ட போர் குறித்து, அவர் எழுதிய “still- Counting the Dead” என்ற ஆங்கில நூல், “ஈழம்- சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்” என்ற தலைப்பில் காலச்சுவடு பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில், நூலை கவிஞர் சேரன் வெளியிட, மூத்த பத்திரிகையாளர் சதானந்த மேனன் பெற்றுக் கொண்டார்.
இந்நூல் வெளியிட்டு விழாவில் நூலாசிரியரான பிரான்சிஸ் ஹாரிசன் உரையாற்றுகையில்:
இலங்கையில் போர் முடிந்து நான்கு ஆண்டுகளாகின்றன. ஆனால், போரில் இறந்தவர்கள் எத்தனை பேர், படுகாயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு, காணாமல் போனவர்கள் கதி என்ன என்பன போன்ற விவரங்கள் வெளியாகவே இல்லை.
போர் இறப்பு குறித்து, ஐ.நா. சபை வெளியிட்ட முதல் தகவலில், 40 ஆயிரம் பேர் எனக் கூறியுள்ளது. ஆனால், கடந்த வாரம் வெளியான ஐ.நா. சபையின் அறிக்கையில், ஒரு லட்சம் பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், 2006 முதல் 2010ம் ஆண்டு வரை ஒரு லட்சம் பேர் இலங்கையில் காணாமல் போனதாக தகவல் குறிப்பிட்டுள்ளது. இதுவரை இவர்கள் என்ன ஆனார்கள் என்றும் தெரியவில்லை.
இந்த உயிர் இழப்புகளும், மனித பாதிப்புகளும், 35 சதுர கிலோமீற்றர் பரப்பளவில், 130 நாட்களில் நடந்துள்ளன. இதுவரை எந்த நாட்டிலும் பயன்படுத்தப்படாத, கொடூரமான இரசாயன ஆயுதங்களை போரில் பயன்படுத்தியுள்ளனர்.
இலங்கை அரசு, எந்த புள்ளி விவரங்களையும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. புதிய இலங்கையை கட்டமைப்போம் எனக் கூறும் இலங்கை அரசு, குறைந்தபட்ச உண்மைகளைக் கூட ஏற்க மறுப்பதால், புதிய இலங்கையை கட்டமைப்போம் என்ற வாக்குறுதியை, உலக சமூகம் நம்ப மறுக்கிறது.
போரில் பாதிக்கப்பட்ட பலரை சந்தித்தேன். ஆனால், சிலரது விவரங்களையும், நேர்காணலை மட்டுமே நூலில் குறிப்பிட்டுள்ளேன்.
கொலைக்கும், தற்கொலைக்கும் அஞ்சாதவர்கள் விடுதலைப் விடுதலைப் புலிகள். குறிப்பாக, கடல் புலிகள் எதற்கும் நிலைகுலையக் கூடியவர்கள் அல்ல. ஆனால், அவர்களே போரில் நடந்த கொலைகளைப் பார்த்து நிலைகுலைந்து போய் உள்ளனர்.
போரின் விளைவுகளை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு, புனரமைப்புப் பணிகளைச் செய்ய, இலங்கை அரசு முன்வந்தால் தான், அமைதியான சமூகத்தை அந்நாட்டில் கட்டமைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten