தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா, சம்பந்தன் அரசிலில் அந்தர் பல்டி அடிப்பதில் கில்லாடி என்பதும், தனக்கான தேவைக்காக எதையும் கைவிடக் கூடியவர் என்பது அனைவரும் புரிந்தே வைத்துள்ளார்கள்.
வடக்கு – கிழக்கு என்ற பிரிவு வாதம் கூர்மைப்படுத்தப்பட்டுள்ள இன்றைய காலப் பகுதியில் கிழக்குடன் நெருக்கமான உறவுகளைத் தக்க வைத்துக்கொள்வது என்பது வடக்கிற்கு மிகப் பெரும் சவாலான விடயம். கருணாவினால் தூண்டப்பட்ட பிரதேசவாதம் எந்த அளவிற்குத் தமிழின அழிப்பிற்குத் துணையாக இருந்தது என்பதும், அதை நம்பிய கிழக்கு மக்கள் கிழக்கில் தம்மைத் தாமே ஆளும் மாகாண உரிமையை இழந்த வரலாறும் அதிக தூரம் சென்றுவிடவில்லை. ஆனாலும், சம்பந்தர் கூட்டமைப்பின் தலைவராகத் தொடர்வதற்கும் வடக்கின் ஒற்றுமை வேணவாவே காரணமாக இருக்கின்றது.
தற்போது, ஈழத் தமிழர்களது இறுதி நம்பிக்கையும் சம்பந்தனால் முற்றாகத் துடைத்தெறியப்பட்டுவிடுமோ என்ற அச்சமே மிகையாக உருவாகியுள்ளது. சம்பந்தரது நேற்றைய நாடாளுமன்ற உரை ஈழத் தமிழர்களது இருப்புக் குறித்த எதிர்கால நம்பிக்கையை முற்றாகச் சிதறடிக்கும் நோக்கத்தையே வெளிப்படுத்துகின்றது.
இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்ந்து கருத்துக்களைக் கவனமாகக் கையாண்ட சம்பந்தன் இன்று இவ்வளவு தரம் தாழ்ந்து நிலை குலைந்த வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதற்கு இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்க முடியும். ஒன்று, சம்பதனுக்கு கோடிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும், அது தவறானால், சம்பந்தனுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
இது கிட்டத்தட்ட, கருணாவை விடுதலைப் புலிகளிடமிருச்து சுவீகரித்த சிங்கள தேசத்தின் கணக்கிற்கு ஒத்ததாக இருக்கின்றது. இது ஒரு அபாயகரமான நிலை. தவறுகளை அறிந்தபோதே கருணாவைக் களைந்திருந்தால், முள்ளிவாய்க்காலில் தமிழினம் இத்தனை அழிவுகளைச் சந்தித்திருக்காது. இன்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் தலைவர் என்ற காரணத்தால், அவர் கூறிய கொடூரமான கருத்துக்களுக்குப் பொழிப்புரை, விளக்கவுரை கொடுப்பதன் மூலம் அவரை அதிலிருந்து தப்பிக்கொள்ள அனுமதித்தால் தமிழினம் இன்னொரு பேரவலத்தை எதிர்கொள்வது தவிர்க்க முடியாமல் போய்விடும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயருக்காகவோ, சம்பந்தன் என்ற அதன் தலைவருக்காகவோ என்று தமிழ் மக்கள் எல்லாக் கருத்துக்களையும், எல்லாத் தவறுகளையும் ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். விடுதலைப் புலிகள் தங்களது நம்பிக்கை மூலம் கட்டி எழுப்பப்பட்ட அரசியல் தளம் என்ற முகவரி மட்டுமே அதன் பலம். அது எப்போது, அந்த முகவரியை இழக்கத் துணிகின்றதோ, அப்போதே கூட்டமைப்பு என்ற கோட்டை முற்றாகச் சிதைந்துவிடும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இப்போதும் தேசிய சிந்தனையுள்ள உறுப்பினர்கள் நிறையவே இருக்கின்றார்கள். அவர்கள் இப்போதே சுதாகரித்துக்கொண்டால், சம்பந்தன் இல்லாத கூட்டமைப்பை மக்கள் பலம் சிதறிப்போவதற்கு முன்னதாகவே அதனை மீளமைத்துக் கொள்ளலாம்.
சீசரைக் கொன்றுதான் ரோம ராஜ்யத்தைக் காப்பாற்றலாம் என்றால், அதையும் செய்வதே அரசியல். சம்பந்தரை அகற்றினால்தான் தமிழீழ மக்களைக் காப்பாற்றலாம் என்ற நிலை உருவானால், அதைச் செய்வதற்கு கூட்டமைப்பின் அடுத்த கட்டத் தலைவர்கள் முன்வரவேண்டும்.
சம்பந்தர் அவர்களது இன்றைய நாடாளுமன்ற உரை வீடியோ பதிவாக வெளிவந்துள்ளது. இது, புலம்பெயர் தமிழர்களிடம் பெரும் கோபத்தை உருவாக்கப்போகின்றது. சம்பந்தரது கொடும்பாவி எரிக்கும் கொந்தளிப்புடன் புலம்பெயர் இளையோர் களம் இறங்கியுள்ளார்கள்.
வரலாற்றுத் தவறுகளால், நாம் இழந்தது போதும்! இனிமேலும் தவறுகளால் எம் இனம் கருவறுந்து போகாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை எஞ்சியிருக்கும் தலைவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சி. பாலச்சந்திரன் – ஊடகவியலாளர்
Geen opmerkingen:
Een reactie posten