அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட போதும் கூட அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தின் சில ஒழுங்கு விதிகளை சட்டபூர்வமற்ற முறையில் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் சோ்த்துள்ளது. இந்தச் சட்டத்தின் கீழேயே யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் புனர்வாழ்வு பெற முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று பிரபல சட்டத்தரணி கேவி தவராசா தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புனர்வாழ்வு முகாமுக்கு எந்தச் சட்டத்தின் கீழ் அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறித்து கொழும்பிலுள்ள வீரகேசரி வார வெளியீட்டிற்கு கருத்து வழங்குகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நடைமுறையிலிருக்கும் இந்த ஒழுங்கு விதிகள் நீக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒழுங்கு விதிகளிலும் பார்க்க பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பிரிவுகளைக் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஒழுங்கு விதியின்படி எவரேனும் ஒருவரைக் கைது செய்து அவரிடம் பலவந்தமாக ஆவணத்தில் கையொப்பம் பெற்று சரணடைந்தவர் எனக்கூறி புனர்வாழ்வு என்ற பெயரில் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பவும் முடியும்.
இவர்கள் எந்தச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டார்கள்? எந்தச் சட்டங்களின் கீழ் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்?
தீபம் ஏற்றினர், சுவரொட்டி ஒட்டினர் என்பவை குற்றங்கள் எனக்கருதி இந்த 11 மாணவர்களும் கைது செய்யப்பட்டிருந்தால் 11 மாணவர்களில் 7 பேர் விடுதலை செய்யப்பட்டது எந்தச் சட்டத்தின் கீழ்?
எஞ்சிய நான்கு மாணவர்களும் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்டது எந்தச் சட்டங்களின் கீழ்?
இவை குற்றங்களாக கருதப்பட்டாலும் இரண்டு வித நடவடிக்கைகள் இந்த மாணவர்கள் சார்பாக எடுக்கப்பட்டதேன்?
இந்த நியாயமான சந்தேகங்கள் இன்று யாழ். பல்கலைக்கழக சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் பவானந்தன், செயலாளர் தர்ஷானந்த், கலைபீட மாணவர் ஒன்றியத் தலைவர் ஜெனமேஜெயந்த், விஞ்ஞான பீட மாணவ ஒன்றிய உறுப்பினர் சொலமன் ஆகிய நால்வரும் 1721/ 5 விதியின் கீழ் வெலிக்கந்த புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த ஒழுங்கு விதிகளின் கீழ் மட்டுமே தன்னிச்சையாக சரணடைபவர்களை புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வளிக்கப்படும் போதே விசாரணைகளையும் நடத்தமுடியும்.
கடந்த 13ம் திகதி வெள்ளிக்கிழமை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவை யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினர் சந்தித்து மாணவர்களின் விடுதலை தொடர்பாக பேசியபோது மாணவர்கள் நால்வரும் விசாரணைகளுடனான புனர்வாழ்வுக்காலம் முடிவடைந்ததன் பின்னரே விடுவிக்கப்படுவர் என கோத்தபாய தெரிவித்துள்ளது 1721/ 5 ஒழுங்கு விதியின் கீழ் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டு விசாரணைகள் நடைபெறுகின்றமை உறுதிசெய்யப்பட்டுள்ளது எனலாம்.
2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட மாட்டாது என நாடாளுமன்றில் அறிவித்தார். இதற்கு நான்கு நாட்களின் பின் ஆகஸ்ட் 29ம் திகதி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 27ம் பரிரிவின் கீழ் ஜனாதிபதியால் அரசியலமைப்பு படியல்லாத பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான நான்கு ஒழுங்குவிதிகள் சோ்க்கப்பட்டன.
இந்த ஒழுங்கு விதிகளில் 1 இல. 1721/ 2 தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைத் தொடர்ந்து தடை செய்வதற்கும் 2 இல. 1721/ 3 ஒழுங்கு விதி அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட போதிலும் பல்வேறு அவசரகால ஒழுங்கு விதிகளை தொடர்வதற்கும் 3 இல. . 1721/ 4 ஒழுங்கு விதி அவசரகால ஒழுங்கு விதியின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களைத் தொடர்ந்தும் தடுத்து வைப்பதற்காகவும் 4 இல. 1721/ 5 ஒழுங்கு விதிகளின் கீழ் சரணடைந்தவர்களின் பராமரிப்பு புனர்வாழ்வின் கீழ் வைத்திருக்கவும் வழி செய்கின்றன.
2011ம் ஆகஸ்ட் 29ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒழுங்கு விதிகள் அனைத்தும் ஒரு புதிய சட்டவாக்கத்தின் விளைவைக் கொண்டிருக்கின்றன.
இவ்வொழுங்கு விதிகளின் வெளியீடுகள் என்பது அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டிருந்தும் கூட ஜனாதிபதியால் அவசரகாலச் சட்டத்தின் சில அத்தியாவசியமான படிகள் சட்டபூர்வமற்ற முறையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குள் உட்புகுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டமையேயாகும்.
நடைமுறையிலிருக்கும் இந்த ஒழுங்கு விதிகள் நீக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒழுங்கு விதிகளிலும் பார்க்க பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பிரிவுகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட இவ் ஒழுங்கு விதிகள் நிறைவேற்றுத்துறையின் அதிகாரத் துஷ்பிரயோகத்தின் தொடர்ச்சியே. இம்முறை எதுவித நியாயப்படுத்தல் கூடவின்றி கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டம் நாடப்பட்டுள்ளது. அதன் விளைவே நியாயப்படுத்த முடியாத இந்தக் கைதுகள்.
http://www.tamilwin.com/show-RUmqzCRXNVkp0.html
Geen opmerkingen:
Een reactie posten