தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 12 december 2012

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பத்திரிகை அறிக்கை‏!!


அண்மையில் கைதான பல்கலைக்கழக மாணவர்களில் நால்வர் தடுப்புக்காவலுக்காக வெலிகந்த- கந்தகடுவ புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமையானது அரசின் திட்டமிட்ட மாணவர்கள்மீதான ஒடுக்குமுறையேயென புளொட் கருதுவதுடன், ஜனநாயக உரிமைகளை மறுதலித்து எமது இனத்தின்மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறையின் தொடர்ச்சியாகவே இதனைக் காண்கின்றது.
யுத்தம் முடிவடைந்து விட்டது, இயல்புநிலையும் ஜனநாயகமும் மீளவும் வடக்கு கிழக்கில் நிலைநாட்டப்பட்டுள்ளது என கூறும் அரசு, பல்கலைக்கழக மாணவர்களை தடுப்பு முகாம்களுக்கு அனுப்புவதன் மூலம் மாணவர்கள் மத்தியில் ஒரு நிச்சயமற்ற தன்மையையும் பெற்றோர்கள் மத்தியில் ஒரு பதட்டமான நிலைமையையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
யுத்த சூழ்நிலைகளில் எவ்வளவோ இழப்புக்களுக்கும், கஸ்டங்களுக்கும், அர்ப்பணிப்புகளுக்கும் மத்தியில்தான் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் கல்விகற்பதற்கு சந்தர்ப்பத்தைப் பெற்றார்கள். இப்படியான அடக்குமுறைகள் மாணவர்களின் கல்வியினை பாழாக்கிவிடும்; சமுதாயத்தில் மேன்மைநிலையை எட்டமுடியாத சூழல் வலிந்து உருவாக்கப்பட்டால் மாணவர்கள்; விரக்திநிலைக்கே தள்ளப்படுவார்கள்.
உரிமைகளுக்கு குரல் கொடுப்பதையும், இயல்புநிலைகள் எதையும் பாதிக்காமல் தங்களுடைய விடுதிகளிலேயே மிக அமைதியாக உணர்வுகளை வெளிப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளையும் அரசு அடக்க முற்பட்டமையானது இன்று ஒரு பூதாகரமான பிரச்சினையாக உருவாகியிருக்கிறது.
எனவே, இந்த நிலைமைகளை நீடிக்க விடாமல், மாணவர்கள் தமது கல்விச் செயற்பாடுகளை தொடர்வதற்கு அனுமதியளித்து அவர்களை உடனடியாக விடுதலை செய்ய அரசு முன்வர வேண்டும்.
நன்றி,
தர்மலிங்கம் சித்தார்த்தன்,
தலைவர்,
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்,
11.12.2012.

Geen opmerkingen:

Een reactie posten