பிரபாகரனின் மரணம்: கேள்வி எழுப்பும் புதிய ஆவணப்படம் - பிரித்தானிய நாளேடு!
"முதலாவது சூடு மேற்கொள்ளப்பட்ட பின்னர் சிறுவன் பாலச்சந்திரன் தரையில் விழுந்து கிடப்பதைப் பார்க்கும் போது – சுட்டவர் சிறுவனுக்கு மேலே நின்றவாறே தாக்குதல் நடத்தியுள்ளார். ஆகவே இது ஒரு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொலை என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை" இவ்வாறு சனல்4 வெளியிடவுள்ள புதிய காணொலி தொடர்பாக பிரித்தானியாவின் டெய்லி மெயில் நாளேட்டில் Claudia Joseph என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
12 வயதேயான சிறுவன் ஒருவன் தரையில் கிடக்கிறான், அவனது இடுப்பில் சுடப்பட்டுள்ளது, அவனது மார்பில் ஐந்து துப்பாக்கிச் சூட்டுத் துவாரங்கள் காணப்படுகின்றன.
இந்தச் சிறுவன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் பிரபாகரன் ஆவார்.
இச்சிறுவன் கொலை செய்யப்பட்ட, அதிர்ச்சி தரும் இக்காட்சியானது, இவ்வாரம் திரையிடப்படவுள்ள 'சிறிலங்காவின் கொலைக்களங்கள் – தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' என்ற புதிய ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிநாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக, ஜோன் ஸ்னோ தயாரித்த 'சிறிலங்காவின் கொலைக் களங்கள்' என்ற ஆவணப்படம் சனல்- 4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டு ஒரு ஆண்டின் பின்னர், சிறிலங்காத் தீவில் இடம்பெற்ற யுத்தகால மீறல்களின் மேலதிக பதிவுகள் மற்றும் காட்சிகளுடனும் 'சிறிலங்காவின் கொலைக்களங்கள் - தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' என்ற இந்த ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது.
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில், மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளுக்கு யார் பொறுப்பாளிகள் என்பதை ஆராய்ந்து, அவற்றுடன் தொடர்புபட்ட ஆனால் மறைக்கப்பட்ட, இன்னமும் வெளிவராத பல புதிய காட்சிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இவ் ஆவணப்படத்தில், இதன் தொகுப்பாளரான ஸ்னோ நான்கு விடயங்களை முக்கியப்படுத்தியுள்ளார்.
அதாவது யுத்தகால மீறல்களை நேரில் பார்த்த சாட்சியங்கள், அவை தொடர்பான ஒளிப்படங்கள், இவை தொடர்பாக வெளிவந்துள்ள ஆவணங்கள் மற்றும் அறிக்கைகள், கானொலிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி ஸ்னோ இப்புதிய ஆவணப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்புதிய ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள மிகப் பயங்கரமான காட்சிகளுள், துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகிய விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் 12 வயது நிரம்பிய மகனான பாலச்சந்திரன் பிரபாகரனின் இறந்த உடலமும் ஒன்றாகும்.
ஐந்து தடவைகள் வரை இந்தச் சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டுள்ளதை, டுன்டே பல்கலைக்கழகத்தின் தடயவியல் வல்லுனரான பேராசிரியர் டெறிக் பௌண்டர் உறுதிப்படுத்தியுள்ளார்.
"இந்தச் சிறுவனின் மார்பில் உள்ள பொட்டுப் போன்ற பகுதியில் பச்சை குத்தப்பட்டது போன்ற அடையாளம் காணப்படுகின்றது.
இதனால் இந்தச் சிறுவனின் மார்பிலிருந்து இரண்டு அல்லது மூன்று அல்லது அதற்குக் குறைவான அடி தூரத்திலேயே, சுடப்பட்ட துப்பாக்கியின் குழல்வாய் இருந்துள்ளது" என பேராசிரியர் டெறிக் பௌண்டர் உறுதிப்படுத்துகிறார்.
"இதனால் இந்தச் சிறுவன் தன்னை நோக்கி நீட்டப்பட்டிருந்த துப்பாக்கியைத் தொடும் நேரத்தில், இவன் மீது துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டிருக்கலாம்.
முதலாவது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்ட பின்னர் இந்தச் சிறுவன் பின்புறமாக விழுந்திருக்கலாம். அதன் பின்னர் அச்சிறுவன் மீது மேலும் இரு துப்பாக்கி வேட்டுக்கள் சுடப்பட்டிருக்கலாம்" எனவும் தடயவியல் வல்லுனரான பேராசிரியர் டெறிக் பௌண்டர் மேலும் தெரிவித்துள்ளார்.
"முதலாவது சூடு மேற்கொள்ளப்பட்ட பின்னர் இச்சிறுவன் தரையில் விழுந்து கிடப்பதைப் பார்க்கும் போது இவன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் இச்சிறுவனுக்கு மேலே நின்றவாறே தாக்குதலை நடத்தியுள்ளார்.
ஆகவே இது ஒரு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொலை என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை" எனவும் பேராசிரியர் மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது ஒருபுறமிருக்க, தற்போது வெளியிடப்படவுள்ள ஆவணப்படத்தில், இந்தச் சிறுவனின் தந்தையான வேலுப்பிள்ளை பிரபாகரன் தலையில் காயம்பட்ட நிலையில் இறந்து கிடப்பது போன்ற காட்சியும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது உண்மையில் உத்தியோகபூர்வமற்ற முறையில் கிடைக்கப் பெற்ற ஆவணக்காட்சியாகும்.
பிரபாகரனின் உடல் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட போது, அவரது தலை துணியொன்றினால் சுற்றிக் கட்டப்பட்டிருந்தது.
இந்தக் காட்சியும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், இதற்கப்பால் பிரபாகரன் முதலில் புலிகளின் சீருடையில் இறந்து கிடப்பது போன்றதொரு ஒளிப்படமும், பின்னர் நிர்வாணமான நிலையில் கிடப்பதைக் காண்பிக்கும் ஒளிப்படம் ஒன்றும், இறுதியில் இவரது உடலம் சேறு பூசப்பட்ட நிலையில் இருப்பதைக் காண்பிக்கும் ஒளிப்படமும் தற்போது திரையிடப்படவுள்ள 'சிறிலங்காவின் கொலைக்களங்கள் - தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்' என்ற புதிய ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
"இவரது தலையில் காணப்படும் காயத்தை நன்கு ஆராய்ந்து பார்க்கும் போது, விசை கூடிய [கனரக] துப்பாக்கி ஒன்றினால் சுடப்பட்ட அடையாளமாகவே இது காணப்படுகிறது" எனவும், இதனால் இவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதையும் பேராசிரியர் பௌண்டர் மீளவும் உறுதிப்படுத்துகிறார்.
"ஆயுதப் போர் நடைமுறைகளின் படி, தலையில் தனிச்சூட்டுக் காயம் ஒன்று அதிக விசையுடன் மேற்கொள்ளப்படுவதென்பது அசாதாரணமானது. இலக்கு வைக்கப்படும் குறிப்பிட்ட நபரொருவர், அசையா நிலையிலேயே இவ்வாறான தலைச்சூடொன்றை மேற்கொள்ள முடியும்" எனவும் பேராசிரியர் கருதுகிறார்.
சிறிலங்காவில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மீறல்களை அனைத்துலக சட்ட விதிமுறைகளுக்கேற்ப சிறிலங்கா வெளிக்கொண்டு வரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலருமான கோத்தபாய ராஜபக்ச மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி அமெரிக்கா தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ள நிலையிலேயே சனல் 4 தொலைக்காட்சி புதிய ஆவணப்படத்தை திரையிடவுள்ளது.
"சிறிலங்கா அரசாங்கப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட யுத்த மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான மீறல்களை வெளிக்கொண்டு வருவதற்கான புதிய சாட்சியங்களை இந்தத் தடயவியல் விசாரணையானது வெளிப்படுத்தி நிற்கின்றது" என ஸ்னோ தெரிவித்துள்ளார்.
"ஆனால் இவ் ஆவணப்படமானது சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட யுத்த கால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டிய நிலையிலுள்ள, அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியவர்கள் யாரென்பதையும் சுட்டிக்காட்டுகின்றது.
அத்துடன் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்குக் காரணமாக இருந்த இரத்தக் கறைபடிந்த இராணுவத் தாக்குதல்களை வழிநடாத்திய இரணுவத் தளபதிகள் தொடக்கம் நாட்டின் அதிபர் மற்றும் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலர் வரை அவர்கள் எவ்வகையில் பொறுப்புக் கூறவேண்டும் என்பதையும், உண்மையில் இவர்கள் மீது இன்னமும் சரியான, முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டும் விதமாக ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது" எனவும் ஸ்னோ மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த வகையில் இப் புதிய சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு உரிய விசாரணைகளை மேற்கொள்வதுடன், தமது வாழ்வை இழந்த பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு நீதியை வழங்க வேண்டிய முக்கிய பொறுப்பு ஐ.நா மற்றும் அனைத்துலக சமூகத்திற்குரியதாகும்.
இதேபோன்ற சிரியப் படுகொலைகள் தொடர்பாக நாம் ஆவணக் காட்சிகளைத் தயாரிக்கும் போது அது எமக்கான முக்கிய பணியாக உள்ளது" எனவும் ஸ்னோ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கைகள் கட்டப்பட்ட நிலையில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்கள், ஆடைகள் களையப்பட்டு தலையின் பின்புறமாகச் சுடப்பட்டவர்கள் போன்ற காட்சிகளை உள்ளடக்கிய கானொலியைப் பார்க்கும் போது, சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட ரீதியில் இனப்படுகொலை நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் என்பதை தெட்டத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும் என நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
"சிறிலங்கா இராணுவத்தின் அதியுச்ச அதிகாரத்தை அதிபர் ராஜபக்சவே கொண்டுள்ளார்" என அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஆசிய நிகழ்ச்சித் திட்ட இயக்குனர் சாம் சரீப் தெரிவித்துள்ளார்.
"ராஜபக்ச சிறிலங்கா இராணுவத்தின் பிரதம தளபதியாக உள்ளார். அத்துடன் பாதுகாப்புச் செயலரான கோத்தபாய ராஜபக்ச தான் எவ்வாறு இராணுவ மூலோபாயங்களை வகுப்பதில் பங்கேற்றுக் கொள்கிறேன் என்பதை பெருமையுடன் பகிரங்கப்படுத்தி வருகிறார்.
ஆகவே இந்நிலையில் இராணுவ அதிகாரபீடத்தை தம்வசம் வைத்திருக்கும் இவ்விருவரும் யுத்த மீறல்கள் தொடர்பிலும் பொறுப்புக் கூற வேண்டும்" எனவும் சாம் சரீப் மேலும் தெரிவித்துள்ளார்.
"ஆகவே யுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட எல்லா மீறல்களுக்கும் இவ்விருவருமே பதில் கூறவேண்டும். குருதி தோய்ந்த, எதிர்பார்க்கப்பட்ட படி இரத்த ஆறு ஒடக் காரணமாக இருந்த சிறிலங்காவின் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், இறுதி வாரங்களில் வழங்கப்பட்ட கட்டளைச் சங்கிலியை ஆராய்ந்து பார்த்தால், மேற்கொள்ளப்பட்ட மீறல்களுடன் அது ஏதோவொரு விதத்தில் காரணமாக அமைந்திருக்கும்" எனவும் அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஆசிய நிகழ்ச்சித் திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.
'பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களில் தஞ்சம் புகுந்திருந்த பொதுமக்கள் மீதும் மருத்துவமனைகள் மீதும் சிறிலங்கா அரசாங்கத்தால் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல்கள் தொடர்பாக ஐ.நா வால் வெளியிடப்பட்ட நம்பகமான அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களையும் ஸ்னோ தான் தொகுத்துள்ள புதிய ஆவணப்படத்தில் உள்ளடக்கியுள்ளார்.
அத்துடன் இறுதி யுத்தத்தின் போது அகப்பட்டுக் கொண்ட பொதுமக்கள் மீது உணவுத்தடையைப் போடுவதற்காகவே சிறிலங்கா அரசாங்கம் அந்த மக்களின் எண்ணிக்கையை குறைத்து அறிவித்ததாக கொழும்பிலிருந்த அமெரிக்கத் தூதரகத்தின் இரகசியத் தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
யுத்த வலயத்திற்குள் இருந்த பொதுமக்கள் திட்டமிட்ட ரீதியில் இலக்கு வைக்கப்பட்டிருந்ததாக ஐ.நா வால் ஆராயப்பட்ட செய்மதி மூலம் பெறப்பட்ட ஒளிப்படங்கள் உறுதிப்படுத்துகின்றன.
அதேவேளை, சனல் 4 தொலைக்காட்சி வெளியிடும் 'மிகக் கொடிய யுத்தக் குற்றங்களை' தாம் அடியோடு நிராகரிப்பதாக பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா உயர்ஆணையகம் தெரிவித்துள்ளது.
சனல் 4 தொலைக்காட்சி தொடர்ந்தும் சிறிலங்கா விவகாரம் தொடர்பில் போலியான, விரோதமான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும், சிறிலங்கா அரசாங்கத்தின் ஆட்சி பீடத்திலுள்ள உள்ளவர்களையும் இராணுவத் தளபதிகளையும் குற்றம்சாட்டும் பாணியில் தொடர்ந்தும் பொய்யான, ஏற்றுக் கொள்ள முடியாத சாட்சியங்களை முன்வைப்பதாகவும், சிறிலங்கா உயர் ஆணையகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சனல் 4 தொலைக்காட்சி 'சிறிலங்காவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்தத்துக்குப் பின்னரான அபிவிருத்தித் திட்டங்கள்' தொடர்பான தகவல்களை வெளியிடுவதை தவிர்த்து வருவதாகவும், இவ்வாறான நடவடிக்கை 'சிறிலங்காவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மிகப் பயனுள்ள, உறுதிப்பாடான மீளிணக்கப்பாட்டு முயற்சிக்கு' பங்கம் விளைவிப்பதாக அமையும் எனவும் உயர் ஆணையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten