தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 26 maart 2012

'சமூக சிற்பிகள்' அமைப்பு பதிவேற்றம் செய்த கதைகள்!- மதகுரு இராசதுரை கூறும் உண்மைக் கதை!


[ புதினப்பலகை ]
முள்ளிவாய்க்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை ‘சமூக சிற்பிகள்‘ அமைப்பினர் [The Social Architects -TSA]*  கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர். அதன் தமிழாக்கம் வருமாறு:
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 'போர் வலயமற்ற' பகுதியில் தாய் தந்தையரை இழந்த சிறுவர்களைப் பராமரிக்கும் விடுதியைச் சேர்ந்த சில எண்ணிக்கையான சிறார்களை பராமரிக்கும் பணியில் மதகுரு இராசதுரை அவர்கள் ஈடுபட்டிருந்தார்.

அவர் கூறுகின்ற வன்னிப்போர் அவலம்:
நாங்கள் கிளிநொச்சியை விட்டு இடம்பெயர்த்தப்படுவதற்கு முன்னர் தேவாலய வளாகத்தில் நான் ஆறு பதுங்குகுழிகளை அமைத்திருந்தேன். இதேபோல் வன்னி முழுவதிலும் பல பதுங்குகுழிகளை நாங்கள் அமைத்திருந்தோம். ஒவ்வொரு தடவையும் நாங்கள் இடம்பெயர்த்தப்படும் போதும் முதலில் பதுங்குகுழிகளை அமைப்பதே எமது பிரதான பணியாக இருந்தது.
கிளிநொச்சி வைத்தியசாலை மீது தாக்குதல் மேற்கொண்டிருந்த வேளையில், அங்கே நான் நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வந்தேன். மருத்துவமனைகளை குறிவைத்து தாக்குதல் நடாத்துவதானது யுத்த தந்திரோபாயமாகும்.
வன்னியில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், மக்கள் வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றபோதெல்லாம், இலங்கை இராணுவத்தினர் முதலில் வைத்தியசாலைகளைக் குறிவைத்தே தாக்குதல் நடாத்தினர்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், பல ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். ஆனால் அவர்களுக்கு கொடுப்பதற்குத் தேவையான மயக்க மருந்து இல்லாததால் அங்கு கடமையாற்றிய வைத்தியர்கள் மயக்க மருந்து வழங்காமலேயே காயமடைந்தவர்களின் உடல் உறுப்புக்களை வெட்டி அகற்ற வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
உண்மையில் இங்கு கடமையாற்றிய வைத்தியர்கள் 'இயந்திரங்கள்' போலவே செயற்பட்டனர். காயமடைந்த மக்கள் ஆகக் கூடியது ஒரு சில நிமிடங்களே சத்திரசிகிச்சை அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதன் பின்னர் காயமடைந்த பிற நோயாளிகளுக்கு தொடர்ந்து சத்திரசிகிச்சை வழங்கப்பட்டது.
உடையார்கட்டு என்ற இடத்தில் தஞ்சம் புகுந்திருந்த மக்கள் மீது 'பொசுபரசுக் குண்டுகள்' வீசப்பட்டன. இந்த வகைக் குண்டுகள் வீசப்பட்டதும் கறுப்பு நிறப் புகை வெளியேறும்.
அத்துடன் இந்தக் குண்டு எங்கு வீசப்படுகின்றதோ அங்கே உள்ள அனைத்தும் எரிந்து கருகிவிடும். இந்த வகைக் குண்டு வீசப்பட்டவுடன் அதன் சுவாலை 'தறப்பாளில்' பற்றி அதன் பகுதிகள் மக்கள் மீது விழுந்தவுடன் மக்கள் எரிகாயங்களுக்கு உள்ளாகினர்.
பொசுபரசுக் குண்டொன்று வீசப்பட்ட போது அதன் சுவாலைகள் வாழை இலைகள் மீது படர்ந்து பின் அங்கிருந்த மனிதர் ஒருவரின் உடலிலும் பற்றிக் கொண்டது. இதனால் மிக மோசமான முறையில் குறிப்பிட்ட மனிதர் எரிகாயங்களுக்கு உள்ளாகினார். இதனை நான் நேரில் பார்த்தேன்.
பொசுபரசுக் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகி மிக மோசமான எரிகாயங்களுக்கு உள்ளான பலர் யுத்த வலயத்திலிருந்து அகற்றப்பட்டு, கப்பல் மூலம் மேலதிக மருத்துவத்திற்காக கொண்டு செல்லப்பட்டனர்.
கொத்துக் குண்டுகள் முதலில் பரந்தன் பகுதியிலேயே வீசப்பட்டன. பல வகையான கொத்துக் குண்டுகளை இலங்கை இராணுவத்தினர் பயன்படுத்தினர். கொத்துக் குண்டொன்றின் பிரதான குண்டு வானில் வெடித்துச் சிதறி பல சிறிய துண்டுகளாக உடைகின்றது.
இரணைப்பாலை என்ற பிரதேசத்தில் வீசப்பட்ட கொத்துக் குண்டொன்று பல வர்ண நாடாக்களைக் கொண்டிருந்தது. இதனால் இவ்வகைக் குண்டானது சிறுவர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துக் கொண்டது.
சிறுவர்கள் பல வர்ண நிறங்களால் கவர்ச்சிமிக்க வகையில் உருவாக்கப்பட்டிருந்த இக் கொத்துக் குண்டின் பகுதிகளை தொட்ட போது அவை வெடித்துச் சிதறிய சம்பவங்களும் உண்டு.
ஜனவரி 25, 2009 அன்று ஒரு நிமிடத்தில் வெடித்த எறிகணைகள் எத்தனை என்பதை நாம் எண்ணிக்கொண்டோம். நாங்கள் ஐந்து மதகுருமார்கள், அருட்சகோதரிகளைக் கொண்ட ஒரு குழு, பெற்றோரை இழந்த பிள்ளைகள் ஆகியோர் ஒன்றாக பதுங்குகுழிக்குள் இருந்தோம்.
அந்த வேளையில் நாம் இருந்த பகுதியை நோக்கி பல் குழல் எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது ஒரு நிமிடத்தில் 60 குண்டுகள் வெடித்ததை நாம் அவதானித்தோம்.
நான் உண்மையில் மிகப் பயங்கரமான, கோரமான நாட்கள் சிலவற்றைப் பற்றி எடுத்துக் கூறவேண்டும். மே 17,2009 அன்று யுத்தம் முடிவுற்றதாக இலங்கை அரசாங்கத் தரப்பினர் வானொலிச் செய்திகள் மூலம் அறிவித்துக் கொண்டிருந்தனர்.
அத்துடன் இலங்கை இராணுவம் தொடர்ந்தும் எஞ்சியுள்ள புலி உறுப்பினர்களை தேடி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் இலங்கை அரசாங்கத் தரப்பு அறிவித்துக் கொண்டிருந்தது.
மிகக் கோரமான அந்த யுத்தத்தின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த பதுங்குகுழியில் எம்மில் ஐந்து மதகுருமார்கள், பெற்றோரை இழந்த 40 சிறார்கள் மற்றும் அருட்சகோதரிகள் சிலரும் தஞ்சம் புகுந்திருந்தோம். எம்மிடம் CDMA தொலைபேசி ஒன்றும், சற்றலைற் தொலைபேசி ஒன்றும் இருந்தன.
நாம் முதலில் எமது ஆயர் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டோம். பின்னர் இறுதி யுத்த நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்த பிரிகேடியர் சவேந்திர டீ சில்வாவுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டோம்.
சவேந்திர டீ சில்வா தற்போது ஐ.நாவுக்கான இலங்கைத் தூதராகக் கடமையாற்றுகிறார். வெள்ளைக் கொடிகளை உயர்த்திப் பிடித்தவாறு பதுங்குகுழிகளை விட்டு வெளியேறுமாறு பிரிகேடியர் எம்மைக் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் 2009 மே 17 பிற்பகல் வேளையில் வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு நாம் எமது பதுங்குகுழிகளை விட்டு வெளியேற முயற்சித்தோம். ஆனால் இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
யுத்த வலயத்தை விட்டு நாம் வெளியேறுவதற்கு முன்னர் இறுதி நான்கு நாட்களாக நாம் எதையும் சாப்பிடவுமில்லை. அத்துடன் நீர் கூட அருந்தவில்லை. யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் ஒரு பிஸ்கட்டைப் பெற்றுக் கொள்வதே மிகவும் கடினமாக இருந்தது.
கைவிடப்பட்ட பதுங்குகுழி ஒன்றில் விடுதலைப் புலிகளின் மிகவும் சக்தியை வழங்கவல்ல 10 உணவுப் பொதிகளை நாம் பெரும் போராட்டத்தின் பின் பெற்றுக் கொண்டோம். அப் பொதிகளை நாம் அறுபது பேரும் பகிர்ந்து உண்டோம்.
மே 17 இரவு, நான் கிட்டத்தட்ட 50 தடவைகள் வரை ஜெபமாலை செபம் செய்திருப்பேன். நாங்கள் கடற்கரைக்கு மிக அருகில் இருந்ததால் எமது பதுங்குகுழிகள் ஆழமற்றதாக காணப்பட்டன.
இந்த இரவு முழுவதும் இராணுவச் சிப்பாய்கள் பதுங்குகுழிகளுக்குள் கைக்குண்டுகளை வீசி மக்களைக் கொலை செய்தனர். அந்த இரவு என்னுடன் இருந்த பெற்றோரை இழந்த சிறார்கள் "பாதிரியாரே, நாம் இங்கே சாகப் போகின்றோம்" எனக் கூறினார்கள்.
அடுத்த நாட் காலை அதாவது மே 18, இராணுவ வீரர்கள் எம்மை நெருங்கி வந்துகொண்டிருந்த போது, நாம் இரண்டாவது தடவையாகவும் வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு பதுங்குகுழிகளை விட்டு வெளியேற முயற்சித்தோம்.
நாம் எம்மை அருட்சகோதரர்கள் என இனங் காண்பிப்பதற்காக அருட் சகோதர, சகோதரிகளின் அடையாளம் காட்டும் எமது வெள்ளைச் சீருடைகளை அணிந்திருந்தோம். மூன்று தடவைகள் நாம் வெளியேற முயற்சித்தோம்.
ஆனால் இந்த மூன்று தடவைகளும் இலங்கை இராணுவச் சிப்பாய்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். அவர்கள் கிட்டத்தட்ட 115 மீற்றர் தூரத்தில் நின்றவாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
இராணுவச் சிப்பாய்கள் எம்மை நோக்கி பெரிய குரலில் கத்தினார்கள், "நீங்கள் விடுதலைப் புலிகள், நாங்கள் உங்களைச் சுடப்போகிறோம்" என்றார்கள். அதன்பின்னர் அவர்கள் எம்மை வெளியே வருமாறு கட்டளையிட்டார்கள்.
அதனைத் தொடர்ந்து அருட்சகோதரிகள் மற்றும் பெற்றோரை இழந்த 40 சிறார்கள் ஆகியோருடன் நாம் வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு பதுங்குகுழிகளை விட்டு வெளியேறினோம். வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு முழங்கால்களில் இருக்குமாறு அவர்கள் எமக்கு கட்டளையிட்டனர்.
அதில் நின்ற இலங்கை இராணுவ வீரன் ஒருவன் சிங்கள மொழியில், "ஒவ்வொருவரையும் கொலை செய்யுமாறு எமது கட்டளைத் தளபதி எமக்கு கட்டளையிட்டுள்ளார்" எனக் கூறினான்.
எமது மேலாடைகளைக் களையுமாறு அவர்கள் எமக்கு கட்டளையிட்டனர். அதன் பின்னர் "நாம் அருட்சகோதரர்கள் எனவும் இவர்கள் சிறார்கள்" எனவும் வாதிட்டோம். அத்துடன் நாம் ஏற்கனவே பிரிகேடியருடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் குறிப்பிட்டோம்.
அதன் பின்னர் நாம் பிரிகேடியரிடம் தொடர்பு கொண்ட CDMA தொலைபேசி இலக்கத்தை அந்த இராணுவ வீரர்களிடம் கொடுத்தோம். உடனே அவர்கள் தொடர்பு கொண்டு நாம் ஏற்கனவே தொடர்பு கொண்ட விடயத்தை உறுதிப்படுத்திக் கொண்டனர்.
நாம் கிட்டத்தட்ட ஓரிரு மணித்தியாலங்கள் வரை இராணுவத்திடம் வாதாட்டம் மேற்கொண்டோம். எமக்கு முன் நின்ற அந்த இராணுவத்தினர் தமது முகத்தைச் சுற்றி கறுப்பு நிறத் துணியால் இறுகக் கட்டியிருந்தனர்.
கொலை செய்வதற்கு தருணம் பார்த்துக் காத்திருக்கும் மிருகங்கள் போல அவர்கள் காணப்பட்டனர். CDMA தொலைபேசியில் பிரிகேடியருடன் தொடர்பு கொண்ட பின்னரே எம்முடன் வாதாடிய குறித்த வீரனின் கோபம் தணிந்திருந்தது.
இது ஒருபுறமிருக்க, எம்மிலிருந்து சற்று தூரம் தள்ளி இராணுவ வீரர்களால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் மக்கள் சிலர் நிற்பதை நாம் கண்ணுற்றோம். இவர்கள் எம்மைப் போன்று இறுதி வரை பதுங்குகுழிகளுள் ஒழிந்திருந்தவர்கள் ஆவர். அந்த மக்களில் பலர் காயமடைந்திருந்தனர்.

இறுதியில், எம்மை அவ் இராணுவத்தினர் துருவித் துருவி சோதனை செய்தனர். எங்கள் ஒவ்வொருவரும் ஒரு கைப்பையை மட்டுமே எடுத்துச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இதில் நின்ற இராணுவ வீரன் ஒருவர் எமது அருட்சகோதரர்களில் ஒருவரை காலால் உதைத்தான். உடனே அவர் கீழே விழுந்துவிட்டார்.
அவர்கள் எம்மை இரு பிரிவுகளாகப் பிரித்தனர். ஒவ்வொரு குழுவிலும் 30 பேர் இருந்தோம். இதனால் நாம் கொஞ்சம் வேகமாக நகர முடிந்தது. வீதியோரங்களில் எரிந்து கொண்டிருந்த வாகனங்கள் மற்றும் அந்த வாகனங்களின் கீழ் இறந்தபடி கிடந்த மக்களின் உடலங்களைக் கடந்தவாறு நாம் சென்றுகொண்டிருந்தோம். நரகத்தைப் போன்று அந்த இடம் காட்சி தந்தது.
"நாங்கள் பிரபாகரனை, பொட்டு அம்மானை, ஏனைய எல்லாத் தலைவர்களையும் கொலை செய்துவிட்டோம். இப்போது நீங்கள் எமது அடிமைகள்" என சிரித்தவாறு கூறினார்கள்.
காயமடைந்த மக்களுக்கு உதவுமாறு நாம் சிறிலங்கா இராணுவத்திடம் கேட்டுக்கொண்டோம். அத்துடன் காலால் உதைக்கப்பட்ட குறித்த அருட்சகோதரருக்கும் உதவுமாறு கேட்டுக்கொண்டோம். அவர்கள் காயப்பட்ட மக்களை சாலம்பன் என்ற இடத்துக்கு கூட்டிச் சென்றார்கள்.
ஆனால் அவர்கள் இதய வருத்தமுடைய அந்த அருட்சகோதரனைத் தம்முடன் கூட்டிச் செல்லவில்லை. இதய வருத்தத்தால் அவதிப்பட்ட அந்த அருட்சகோதரனுக்கு எவ்வித மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படவில்லை. அவருக்கு அப்போது 38 வயதாகவே இருந்தது. அவரை அந்த இடத்திலேயே விட்டு விட்டு இராணுவத்தினர் வெளியேறினர்.
நாம் பின்னர் பேருந்து ஒன்றில் சாலம்பன் என்ற இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டோம். அவர்கள் எமது ஆடைகளைக் களைந்து எம்மை நிர்வாணப்படுத்திய பின்னரே சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன் பின்னர் அவர்கள் எம்மை மண்டபம் ஒன்றுக்குள் கொண்டு சென்றனர். அங்கே "நாங்கள் உங்களது தலைவர்களைக் கொன்றுவிட்டோம். ஆனால் அவர்களில் சிலர் தற்போதும் உயிருடன் உள்ளனர். உங்ளுக்குள்ளேயே அவர்கள் இருக்கிறார்கள்.
ஆகவே விடுதலைப் புலிகள் யாராவது இருந்தால் உடனடியாக எம்மிடம் வந்து உங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள்" என இராணுவத்தினர் அறிவித்தல் விடுத்தனர்.
ஆனால் தமது பெயரைப் பதிவதற்கு எவரும் முன்வரவில்லை. அதன் பின்னர் அருட்சகோதரர்கள் எல்லோரையும் விடுதலைப் புலிகள் என முத்திரை குத்திய அவர்கள் எமது பெயர்களைப் பலாத்காரமாக பதிவு செய்து கொண்டனர். இந்த நேரத்தில், "நாங்கள் மதகுருமார்கள்" என உறுதியாகக் கூறியதுடன் எமது அடையாள அட்டைகளையும் அவர்களிடம் காண்பித்தோம்.

கருணா குழுவைச் சேர்ந்த பலர் யுத்தத்தின் இறுதியில் எமது மக்களுடன் கலந்திருந்தனர். அவ்வாறு அங்கு இருந்தவர்களுள் ஒருவரை நான் முதலில் வன்னியில் சந்தித்திருந்தேன். இவர் என்னை மதகுரு என அடையாளப்படுத்திக் கொண்டார்.
நாம் நான்கு அருட்சகோதரர்களும் பிரிகேடியரைச் சந்திப்பதற்காக முள்ளிவாய்க்காலுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். எம்முடன் சேர்ந்து பயணித்த அந்தச் சிறார்களை அங்கேயே விட்டுவிட்டுச் செல்வதைத் தவிர எமக்கு வேறு வழி தெரியவில்லை.
நாம் அதே இடத்துக்கு திரும்பி வந்தபோது, எம்முடன் வந்த அந்தச் சிறார்கள் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டிருந்தனர். அத்துடன் புலிகள் உறுப்பினர்கள் என அவர்களின் பெயர்கள் பலாத்காரமாக பதியப்பட்டன.
இதன் பின்னர், நாம் செட்டிக்குளம் என்ற இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டோம். அந்த இடத்தை அடைவதற்காக நாம் இரு நாட்கள் வரை உணவின்றி பேருந்திலேயே தங்கியிருக்க வேண்டியிருந்தது.
நாங்கள் பேருந்தில் புதுக்குடியிருப்பு வீதியால் கூட்டிச் செல்லப்பட்ட போது, மணி பிற்பகல் 6.30 ஆக இருந்தது. புதுக்குடியிருப்புக்கு அருகிலுள்ள மந்துவில் என்ற இடத்தை நாம் கடந்து சென்ற போது மிகப் பயங்கரமான காட்சியைக் காணவேண்டியிருந்தது. கிட்டத்தட்ட 300 வரையான இறந்த நிர்வாணமாக்கப்பட்ட உடலங்களை இலங்கை இராணுவத்தினர் ஒன்றுகுவித்துக் கொண்டிருந்தனர்.

இதனை மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக அந்த உடலங்கள் குவிக்கப்பட்டிருந்த இடத்தில் 'ரியூப் லைற்றுக்கள்' பொருத்தப்பட்டிருந்தன. அத்துடன் இதனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த இராணுவ வீரர்கள் அந்த உடலங்களை படம் பிடித்தனர். பார்ப்பதற்கு அது ஒரு கொண்டாட்டம் போல் காணப்பட்டது. அங்கே குவிக்கப்பட்ட்டிருந்த அந்த மக்கள் அந்தப் பிரதேசத்தில் கொல்லப்பட்டிருப்பார்கள் என நான் கருதுகிறேன்.
நாம் மெனிக்பாம் முகாமில் குடியேற்றப்பட்டு முதல் ஒரு வாரமும் குடிப்பதற்கான நீரைப் பெற முடியவில்லை. பசி போக்க உணவு கிடைக்கவில்லை. மலசலகூடவசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. எமது முகாமுக்குள் வெளி ஆட்கள் வருவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இதனை 'விடுதலைப் புலிகளின் முகாம்' எனவும் 'வலயம் 04' எனவும் அழைத்தனர்.
எமது முகாமிலிருந்த மக்கள் கொலை செய்யப்படுவார்கள் என கருதப்பட்டது. எமது வாழ்வு ஆபத்தில் உள்ளதாக நாம் கருதினோம். எமது முகாமில் கிட்டத்தட்ட 40,000 பேர்வரை தங்கவைக்கப்பட்டனர். 16 பேர் படுத்து உறங்குவதற்காக சீனாத் தயாரிப்பான நீல நிறத் தறப்பாள் ஒன்று வழங்கப்பட்டது.
 இதனால் பெண்கள் கூடாரத்திற்குள்ளும், ஆண்கள் அதற்கு வெளியேயும் படுத்து உறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்கள் எம்மை மிருகங்கள் போல் நடாத்தினர்.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தளவில் இலங்கை அரசாங்கமும், இராணுவப் புலனாய்வுத் துறையும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர். யாழ்ப்பாண வீதிகளில் உள்ள விளம்பரப் பலகைகளில் 'ஒரு நாடு ஒரு மக்கள்' என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இத மக்களைப் பெரிதும் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
இலங்கை அரசாங்கப் படையினர் அக்கராயன், முறிகண்டி, வற்றாப்பளை ஆகிய மூன்று இடங்களிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். இவ்விடங்களில் சிங்கள மக்களுக்கான வீடுகள் கட்டப்படுகின்றன. வடக்கு மாகாணத்தின் மையமாக மாங்குளம் அமைக்கப்படவுள்ளது. இங்கு கிட்டத்தட்ட 300,000 மக்களைக் குடியேற்ற சிங்கள அரசாங்கம் திட்டமிடுகிறது.
ஒவ்வொரு பட்டினத்திலும் இன விகிதாசாரத்தை பேண அரசாங்கம் முயற்சிக்கிறது. இதனால் வடக்கில் உள்ள குடிசன பரம்பலில் மாற்றத்தைக் கொண்டு வர அரசாங்கம் திட்டமிடுகிறது. ஏற்கனவே நாவற்குழியில் சிங்களவர்கள் குடியேறுவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.
*The Social Architects -TSA are comprised of a diverse group of writers, intellectuals and working professionals. While most of TSA’s members hail from the country’s North and East, the group also includes other scholars and activists who have been working on issues related to Sri Lanka. TSA seeks to educate, to inform and to provide timely, thoughtful analysis on a range of topics.

Geen opmerkingen:

Een reactie posten