பதிவு இணையத்தளத்திற்குவந்த ஓர் வாசகரின் மனக்குமுறல் உள்ளிட்ட மின்னஞ்சல்.
பதிவும் சேர்ந்து மக்களை முட்டாள்களாக்கட்டும்!
--------------------------
தமிழ் அரசியல்வாதிகளின் அரசியல் வங்குரோத்து! சிறிலங்காவுக்கு ஆதரவாக மாறிய ஜெனீவா பிரகடனம்.
வணக்கம்!
முன்னர் எழுதிய கடிதத்தை தொடர்ந்து மீண்டும் எழுத வேண்டிய நிர்பந்தம் எழுந்துள்ளது. ஐ.நா வில் தற்போது அமெரிக்கா தனது தீர்மான நகலை சமர்ப்பித்துள்ளது. முன்னர் ஊடகங்களுக்கு கசிந்த நகலை விட மேலும் திருத்தங்களுடன் அது கையளிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்திலேயே TNA உட்பட உலகத்தாலும் தமிழர்களாலும் நிராகரிக்கப்பட்ட LLRC இன் அறிக்கையை அது வரவேற்கிறது. அதற்கு அங்கீகாரம் கொடுத்து உப்புச்சப்பற்ற 13 வது திருத்தச் சட்டத்துக்கும் குறைவான ஏற்கனவே நடைமுறையிலுள்ள மாகாண சபையை தீர்வாகவும் மறைமுகமாக பரிந்துரைக்க விழைகிறது.
ஏற்கனவே கசிய விடப்பட்ட அமெரிக்க மாதிரித் தீர்மானத்தில் இருந்த ஒரு சில சர்வதேச நியமங்களுக்குள் சிறிலங்காவை தள்ளிவிடக்கூடிய வார்த்தைப்பிரயோகங்களையும் நீர்த்துப்போகச் செய்து உண்மையிலேயே தமிழர்களுக்கு எதிரான ஒற்றையாட்சி ஸ்ரீலங்கா அரசைப் பாதுகாக்கும் ஒரு தீர்மானமாகவும், எதுவித சர்வதேச விசாரணை தொடர்பான எதிர்கால கோரிக்கைகளையும் அனைத்துலகப் பரப்பில் முடக்கி, இல்லாமல் செய்து விடக்கூடியதாகவும் இத்தீர்மானம் அமைகிறது.
ஏற்கனவே கசியவிடப்பட்ட மாதிரியில் குறித்திருந்த கால அவகாசம் குறித்த நிபந்தனையில் இருந்தும் ஸ்ரீலங்கா அரசை விடுவித்து, காலக்கெடுவை ஐ.நா சபையின் மனித உரிமை அமைப்புக்கு மாத்திரமே இந்த தீர்மானம் வழங்குகிறது. அதுவும் ஒரு வருடம் பின்தள்ளிப் போடப்பட்டுள்ளது.
அத்துடன் மூன்று விடயங்களை ஸ்ரீலங்கா அரசு செய்ய வேண்டுமெனக்கோருகிறது,
1 ) ஸ்ரீலங்கா அரசானது அனைத்து "ஸ்ரீலங்கன்" மக்களும் நீதியான சம அந்தஸ்துடன் வாழ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,
2 ) ஸ்ரீலங்கா அரசானது, LLRC அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதட்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளையும் பட்டியல் படுத்த வேண்டும்,
3 ) ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பும் ஏனைய இது தொடர்பான அமைப்புகளும் LLRC இல் கூறப்பட்ட நல்ல விடயங்களை நடை முறைப்படுத்துவதட்குத் தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் ஸ்ரீலங்கா அரசுக்கு வழங்கி உதவ முன்வரவேண்டும், எனவும் ஸ்ரீலங்கா அரசு இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இத்தீர்மானம் கூறுகிறது.
இது தமிழ் மக்களுக்கு ஆதரவான தீர்மானமா? அல்லது இனப்படுகொலை புரிந்த தமிழர்களது உரிமைகளை மறுத்து தமிழர் தாயகத்தை கபளீகரம் புரியும் சிறிலங்காவுக்கு ஆதரவான தீர்மானமா? மகிந்த சிந்தனையில் உருவான "LLRC " அறிக்கைக்கு சர்வதேச அங்கீகாரம் வழங்கி, இனப்படுகொலை குற்றச்சாட்டுகளில் இருந்து சிறிலங்காவை தப்ப வைக்கும் தீர்மானமல்லவா இது? மக்களே முடிவு செய்யுங்கள்.
இத்தீர்மானத்தை தமிழ் அமைப்புகள் ஏன் ஆதரித்தன? இவர்களது அரசில் வந்குரோதொத்து தனத்தயல்லவா இது காட்டியுள்ளது. உலக சமுதாயத்தின் முன் எமது கோரிக்கைகளை முன் வைக்கக் கிடைத்த அரிய சந்தர்ப்பத்தையும் இழக்கச்செய்தது மட்டுமள்ள, முள்ளிவாய்க்கால் படுகொலைகளைகளையும் அழிவுகளையும் நியாயப்படுத்தும் எதிரியின் பொறிமுறைக்கு அங்கீகாரம் பெற்றுக்கொடுத்தும், தொடர்ந்து நடக்கும் இனப்படுகொலைகளை, மறைமுகமாக அங்கீகரித்தும், தமிழர் நிலங்களை பறிப்பதை அங்கீகரித்தும் தமிழர் தலைமைகள் துரோகம் இழைத்துள்ளன.
ஆயுத பலமின்றி அரசியல், தார்மீக பலத்தை மட்டும் நம்பியிருந்த தமிழினத்தை தமது அரசியல் உறுதியற்ற, அடிவருடும் போக்குடன் ஆதரித்து அறிக்கைகள் விட்ட அமைப்புகளும் எதிர்த்து தமிழரது நிலைப்பாட்டை கூறாத அமைப்புகளும் உள்ளடங்கும் TNA , GTF , மக்களவைகள் , BTF , TGTE ,TGTE ஜனநாயக அணி போன்ற சகல தமிழ் அமைப்புகளும் அதல பாதாளத்தில் தள்ளி விட்டுள்ளன.
ஜனநாயகத்தை பேணும் மேற்கு நாடுகளிலே தமது நாட்டின் கொள்கைக்கோ மக்களின் விருப்புகளுக்கோ எதிரான இத்தகைய செயற்பாட்டில் அரசியல்வாதிகளோ கட்சிகளோ யாரும் ஈடுபட்டால் ஊடகங்கள் கொதித்து எழும். அவ்வரசியல்வாதிகள் மக்களுக்கு பதில் கூற முடியாமல் உடனேயே தமது பதவிகளை துறந்து வீடு செல்லவேண்டி வரும். ஆனால் உயிரையும் உடமைகளையும், இரத்தத்தையும் , சதையையும் கொடுத்து கட்டி வளர்த்த உரிமைப்போராட்டத்தை மிக இலகுவில் ஆதிக்கசக்திகளிடம் தாரைவார்த்து விட்டு ஒன்றுமே நடக்காதது போல் உலவும் அரசியல்வாதிகள் எம்மினத்தில் மட்டுமே உள்ளார்கள். மக்களிடம் இவர்கள் பகிரங்கமாக மன்னிப்புக்கேட்பது மட்டுமில்ல எதிரிக்கு தமது சாணக்கியத்தால் பலம் சேர்க்கும் நடவடிக்கைகளை விட்டு அரசியலை துறந்து ஒதுங்கி விடுதலே நல்லது. "உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரமாவது செய்யாமல் இரு" என்பது இதற்கு தகுந்த தமிழ்ப் பழமொழி.
தமிழர் அரசியலை இனி இளைய சமுதாயமே முன்னெடுக்க வேண்டும் எனும் யதார்த்தத்தை முள்ளிவாய்காலின் பின்னான இந்த 3 ஆண்டுகால தமிழர் அரசியல் செயல்பாடுகள் பட்டவர்த்தனமாக காட்டி நிற்கிறது. இதை உணர்ந்து இளையவர்கள் தமிழர் அரசியலை வழி நடத்த முன்வருவது காலத்தின் கட்டாயமாகி விட்டது.
இப்படிக்கு
பாமரத்தமிழன்
Geen opmerkingen:
Een reactie posten