நெடுந்தீவில் பாடசாலை மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஈ.பி.டி.பி உறுப்பினர் கிருபா என்பவர் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நெடுந்தீவில் பருவமடையாத பாடசாலை மாணவி கொடுரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதோடு மறைந்த ஊடகவியலாளர் நிமல்ராஜன் கொலை வழக்கின் மூன்றாவது சந்தேக நபருமாவார்.

நெடுந்தீவில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிள்ளையார் கோயிலுக்கு அருகிலுள்ள காணியொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யேசுதாஸன் லக்சிகா (வயது 12 ) என்ற மாணவியின் படுகொலையின் பிரதான சந்தேக நபரே இந்த கிருபா என்பவராவார்.
இவர் மிக அண்மையில் துப்பாக்கி முனையில் இரண்டு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதுடன் அவர்களது மார்புகளை கடித்த குற்றச்சாட்டில் ஊர்காவற்றுறைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
இதன்போது இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தி தினமும் பொலிஸ் நிலையத்தில் கையெழுத்து போடுகின்றார் என்பதோடு நெடுந்தீவில் ஈ.பி.டி.பி யின் மிகச் செல்வாக்கு மிக்க நபராகவும் இவர் விளங்குகின்றார்.
குறிப்பாக அண்மையில் பிரதமர் நெடுந்தீவிற்கு சென்ற சமயம் அவரிடமிருந்து உதவிப்பணம் பெற்றார் என்பதோடு அங்குள்ள வைத்தியசாலையின் வேலை ஒன்றை ரெண்டர் எடுத்து செய்யும் அளவிற்கு ஈ.பி.டி.பி யின் செல்வாக்கு மிக்கவராகவும் உள்ளார் என்று தெரியவருகின்றது.
இதேவேளை இவரை விடுதலை செய்யும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸாருக்கு கடும் நெருக்குதல்களை கொடுத்து வருவதாக தெரியவருகின்றது.
இரண்டாம் இணைப்பு
கிருபா மீது நடவடிக்கை எடுக்க கோரி நெடுந்தீவு மக்கள் ஆர்பாட்டம்
நெடுந்தீவில் பாடசாலை மாணவியை கொலை செய்த ஈ.பி.டி.பி யின் உறுப்பினர் கிருபாவை விடுவிக்காது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள கோரி நெடுந்தீவு மக்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
மாணவியின் கொலையின் பிரதான சந்தேகநபரான இவர் கொலை செய்தமைக்கான ஆதாரங்கள் காணப்பட்டபோதும் பொலிஸார் இவர் மீது குற்றப்பத்திரிகையை தயார் செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த தயங்குகின்றனர் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டினார்கள்.
குறிப்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவரை விடுவிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொதுமக்கள் இங்கு குற்றஞ்சாட்டியதோடு கிருபாவை கொலை செய்ய தங்களிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாரிடம் கோஷம் எழுப்பினார்கள்.
குறிப்பாக பொலிஸார் அவரை பாதுகாப்பாக நெடுந்தீவிலிருந்து அனுப்பி விட்டதாக மக்கள் கூச்சலிட்ட போது அவரை பொலிஸார் தாம் கைது செய்து வைத்திருப்பதாக தெரிவித்ததோடு பொது மக்களிடம் அவரை கொண்டு சென்று காட்டினார்கள்.
இதனால் இன்றைய தினம் நெடுந்தீவுக்கான படகுச் சேவை வர்த்தக சந்தை உள்ளிட்ட சகல நடவடிக்கைகளையும் பொது மக்கள் புறக்கணித்து கைவிட்டதோடு தமக்கு நீதி வேண்டும் என்று கூச்சலிட்டனர்.
இதனால் இன்றைய தினம் நெடுந்தீவில் கடும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதேவேளை இச்சம்பவம் அனைவரையும் பீதியில் உறைய வைத்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten