[ விகடன் ]
சிங்களப் பேரினவாத அரசு நிகழ்த்திய கூட்டுக் கொலைகளின் கோர முகத்தை 'சனல் 4’ வெளியிட்ட வீடியோ பதிவுகள் அம்பலப்படுத்தி உலகின் இதயத்தை அதிர வைத்திருக்கின்றன. இந்த நிலையில், நந்திக் கடலோரம் நடந்த ஈவிரக்கமற்ற இன அழிப்புக்கு, சுரேன் கார்த்திகேசு என்ற பத்திரிகையாளரும் ஒரு சாட்சியமாக விளங்குகிறார்...
இலங்கையில் வெளியான 'ஈழ நாதம்’ பத்திரிகையின் நிருபரும் புகைப்படக்காரருமான இவர், ஏழு வருடங்கள் வன்னிப் பகுதியில் பத்திரிகையாளராக இருந்தவர். இனவாத யுத்தம் மேலும் மேலும் தமிழ் உயிர்களைப் பலிகொண்ட கொடூரங்களை, தொடர்ந்து செய்திகளாகவும் புகைப்படங்களாகவும் பதிவுசெய்தவர். 2009 ஏப்ரல் மாதத்தில் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் நடந்தபோது, குண்டுவீச்சில் சிக்கி மோசமாகக் காயப்பட்டு மரணத்தில் இருந்து மீண்டு வந்த சுரேன் இப்போது கனடாவில் இருக்கிறார்.
2008 நவம்பர் 29, நள்ளிரவு 1.30 மணிக்கு எல்லோரும் நித்திரையில் இருந்தோம். தர்மபுரம் என்ற இடத்தில் தொண்டு நிறுவனம் ஒன்றால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட முகாம் அது. மன்னார் முதல் கிளிநொச்சி வரையிலான மக்கள் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தனர். அந்த நள்ளிரவில் திடீர் என முகாமில் கிபீர் தாக்கியது.
பெரும் புகையும் தீயும் சூழ்ந்துகொள்ள... யார் செத்தது என்றுகூட யாருக்கும் தெரியாத நிலை. இரவு 2 மணிக்கு கமராவைத் தூக்கிக்கொண்டு தர்மபுரம் வைத்தியசாலைக்கு ஓடுகிறேன். மக்கள் இரத்தம் வடிய ஓடி வந்தார்கள். வைத்தியசாலை வரையிலும் வந்து வாசலில் செத்து விழுந்தவர்கள் பலர். அந்தத் தாக்குதலில் மட்டும் 30-க்கும் அதிகமானோர் இறந்துபோனார்கள்.
அதன் பிறகு நாங்கள் ஓடிக்கொண்டேதான் இருந்தோம். மரணம் எங்களைத் துரத்தியபடியே இருந்தது.
பொதுவாக, ஈழத்தில் யாரேனும் இறந்தால், சில சடங்குகள் செய்துதான் புதைப்போம். அந்த இடத்தில் யாரும் நடக்கக்கூட மாட்டார்கள். ஆனால், இறுதிக் கட்டத்தில் ஒதுங்க ஒரு நிழலின்றி, ஆட்களைப் புதைத்த இடத்தின் மேலேயே தரப்பாள் அமைத்துத் தங்கினோம்.
2009 ஏப்ரல் 25-ம் தேதி வலைஞர்மடம் என்ற இடத்தில் நான் தாக்குதலில் சிக்கினேன். நெஞ்சில் குண்டுச் சிதறல்கள் துளைத்தன. சிகிச்சைக்காக முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் இருந்தபோது, அங்கும் குண்டு போட்டார்கள். உயிர் பிழைக்க மருத்துவமனைக்கு வந்தவர்கள் உடல் சிதறிச் செத்தார்கள்.
சாவதைவிட காயம்பட்டு உயிரோடு இருப்பதுதான் கொடுமை. சரியான மருத்துவ வசதிகளோ, உணவோ இல்லாமல் எல்லோரும் நடைப்பிணங்களாக இருந்த நிலையில்... யார் யாரைப் பராமரிப்பது? கடுங்காயம் அடைந்த பலர் ஆங்காங்கே கைவிடப்பட்டு அநாதரவாகக் கிடந்ததை இப்போது நினைத்தாலும் மனம் கனக்கிறது.
அவர்கள் இரத்தம் வெளியேறி செத்திருப்பதைத் தவிர வேறு வழி இல்லை. சாலையின் இருபுறமும் ஆங்காங்கே பிணங்கள் கிடக்கும். சுதந்திரபுரம் சந்திக்கு அருகில் கிடந்த ஒரு தாயையும் மகளையும் நானே எரியூட்டினேன்.
நாட்கள் செல்லச் செல்ல, உணவுக்கும் தண்ணீருக்கும் பெரும் தட்டுப்பாடு. தொண்டு நிறுவனங்கள் கஞ்சி கொடுப்பார்கள். 12 மணி கஞ்சிக்கு 10 மணிக்கே போய் நிற்க வேண்டும். அந்த வரிசையிலும் ஷெல் விழும். அதில் ஐந்தாறு பேர் செத்தால் தூக்கி ஓரமாகப் போட்டுவிட்டு, மீதி ஆட்கள் வரிசையில் நிற்பார்கள். செத்தவர்கள் சாக, இருப்பவர்கள் பிழைக்கப் போராடினோம்.
ஒரு கிலோ மிளகாய் 12,000 ரூபாய், சீனி 6,000 ரூபாய், பால்மா பாக்கெட் 4,000 ரூபாய்... என்ன செய்ய முடியும்? கொஞ்ச நாட்களில் அந்தப் பொருட்களும் கிடைக்கவில்லை. பல நாட்களாக எல்லோரும் பட்டினி கிடந்தோம்.
தேங்கிக்கிடக்கும் மழை நீர்க் குட்டையில் இருந்த தண்ணீரை எடுத்து வடிகட்டிக் குடிப்போம். 10 நாட்கள் தொடர்ந்தாற்போல பதுங்குகுழிக்குள் இருந்த அனுபவம் பலருக்கு உண்டு. பதுங்குக் குழியே வாழ்வானது. நடுச்சாமத்தில், தூங்குபவர்களை எழுப்பிவிட்டு மீதி உள்ளவர்கள் தூங்குவார்கள்.
2009 ஏப்ரல் வரையில் செல்போன் தொடர்பு இருந்தது. மே மாதம் தொடக்கத்தில் அதுவும் அற்றுப்போனது.
மே 18-ம் தேதி 'பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார்’ என அறிவிக்கப்பட்டபோது, எல்லோரும் கைவிடப்பட்டதைப் போல உணர்ந்தனர். 'தோற்றுவிட்டோம்’ என்ற உணர்வு எல்லோருக்கும் வந்து விட்டது.
அந்தச் செய்தி வெளியான நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தடுப்பு முகாமில் இருந்தனர். அங்கு நீண்ட வரிசையில் வெயிலில் சாப்பாட்டுக்காகத் தட்டேந்தி நிற்கையில் பலர் கரகரவெனக் கண்ணீர்விட்டு அழுதார்கள். அதன் பிறகான முகாம் நாட்களில் பலருக்கு மனச் சிதைவு நோய் வந்துவிட்டது.
நான் முகாமில் இருந்து வெளியேறி, விமானம் மூலம் தாய்லாந்து வந்தேன், அங்கே இருந்து 492 பேர் ஒரு கப்பல் மூலமாக மூன்று மாதக் கடல் பயணத்துக்குப் பிறகு கனடா வந்து சேர்ந்தோம்.
போர் எங்களைச் சிதைத்துவிட்டது. எங்களை என்றால், எங்கள் மகிழ்ச்சியை, எங்கள் போராட்டத்தை, எங்கள் மண்ணை, எங்கள் மக்களை, எங்கள் உறவுகளை, எங்கள் உடலை, எங்கள் உயிரை!''
Geen opmerkingen:
Een reactie posten