அனைத்தும், சர்வதேச சதியுடன் கூடிய ஒரு மோசடியின் பின்னணியில் அரங்கேறுகின்றது. துரோகம் மூலம் இவை மூடிமறைக்கப்படுகின்றது. பலருக்கு பல கேள்விகள், பல சந்தேகங்கள். இதை சுயவிசாரணை செய்ய யாரும் தயாராகவில்லை. என்னசெய்வது, ஏது செய்வது என்று தெரியாத, திரிசங்கு நிலை.
தமிழ் மக்கள் முன் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடம், இயல்பாக எம்முன் ஒரு இனந்தெரியாத சூனியத்தை உருவாக்குகின்றது. எங்கும் இனந்தெரியாத சோகம், அவலமாகின்றது. நடந்ததை நம்பாமல் இருக்க முனைகின்றது. மக்கள் நடைப்பிணமாக, அஞ்சலி கூட செலுத்த முடியாது, அவர்கள் அரசியல் அனாதையாகி நிற்கின்றனர்.
இந்த நிலையில் படுகொலையுடன் கூடிய இந்தச் சதி என்பது உண்மையானது. யுத்த முனையில் இருக்காத மூன்றாம் தரப்புகளின் கூட்டுச்சதி தான், புலித் தலைவர்களின் மொத்த மரணம். இந்த மரணத்தின் பின், எதிர்பாராதா வண்ணம் வெளிவரும் காட்சிகள். எப்படி இது நடந்தது, என்ற அதிர்ச்சி. இதனால் இறந்தது 'எங்கள்" தலைவரல்ல என்று கூறுமளவுக்கு, நம்ப முடியாத அதிர்ச்சிகள்.
அப்படியாயின் நடந்தது என்ன? இந்தப் பின்னணியை கூர்ந்து நோக்குவதன் மூலம், இதைத் தெளிவாக நாம் இனம் காணமுடியும். எமது அனுமானங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், சில புலித் தலைவர்கள் இன்னமும் படுகொலை செய்யப்படாமல் தம் சித்திரவதைக் கூடங்களில் வைத்து வதைக்கும் வாய்ப்புகள் நிறையவேயுள்ளது.
இந்த நிலையில் புலித் தலைவர் பிரபாகரன் இன்னமும் மரணிக்கவில்லை என்ற புலிச் செய்திக்கும், இரண்டு அரசியல் அடிப்படைகள் உள்ளது
1. புலித் தலைவர் இன்றும் புலிகளை நம்பும் தமிழ் மக்களின் போராட்டத்துக்கான ஒரு அரசியல் குறியீடு. இந்த அடையாளம் அவர்களுக்கு தொடர்ந்து அவசியமானதாக உள்ளது. மரணிக்கவில்லை என்ற மானசீகவாதம், அவர்களின் செயலுக்கான அரசியல் நம்பிக்கை. அதாவது கடவுள் இருப்பதாக நம்பும் பக்தன், தன் சமூக துயரங்களுக்;கு இதன் மூலம் தீர்வை நாடுவது போன்றது இது.
2. புலித் தலைவர் பெயரில் எந்தத் துரோகத்தையும் செய்ய விரும்புபவர்களுக்கு, அவரை உயிருடன் இருப்பதாக காட்டுவது அவசியமாகின்றது. அதாவது கடவுள் உள்ளதாக காட்டி ஏமாற்றிப் பிழைக்கும் பூசாரி போன்றது இது.
இப்படி பிரபாகரன் இருப்பது பற்றிய பிரமை நீடிப்பது கூட அரசியலாக உள்ளது. பிரபாகரனுக்கு என்ன நடந்தது? புலித் தளபதிகளுக்கு என்ன நடந்தது? எமது அனுமானத்தின் மையமான விடையம் இது. இதற்கு புலியின் சர்வதேச பொறுப்பாளர் பத்மநாதனின் அறிக்கை பல தகவலைத் தருகின்றது. மக்களை நம்பாத அவர்கள் வழியில், அவர்கள் அழிக்கபப்பட்டார்கள்.
17.05.2009 பத்மநாதன் வழங்கிய பேட்டியில் ......
"..அதனால் தான் நாம் எமது ஆயுதங்களை அமைதியாக்கி சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வருகிறோம்… விடுதலைப் புலிகளின் அச்சமற்ற தன்மையையும், தங்கள் கொள்கை மீதுள்ள முடிவில்லாத கடமையுணர்ச்சியையும், அதன் மீது எம்மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் எவரும் சந்தேகப்படமுடியாது. ……. எமது அழைப்பை எமது பிள்ளைகள் எந்தவொரு கேள்வியுமில்லாமல் மரணத்துக்கு பயமற்று எடுத்துள்ளார்கள். எமது போராட்டம் எம்மக்களுக்காகவே என்பதை நாம் மறந்துவிடவில்லை என்றும் இப்போதைய நிலமையில், இந்த யுத்தத்தை சிறிலங்கா இராணுவம் எம்மக்களைக் கொன்றுகுவிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகப் பாவிக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்….. மிகத் துணிச்சலோடு நாங்கள் எழுந்து நின்று எமது ஆயுதங்களை அமைதியாக்குகிறோம், எமது மக்களைக் காப்பாற்றுமாறு தொடர்ந்து சர்வதேசச் சமுதாயத்துடன் கேட்டுக்கொள்வதை விட வேறு தெரிவு எங்களுக்கு இல்லை"
இப்படிக் கூறித்தான், சரணடைவு நடக்கின்றது. இந்த அறிக்கை பல தகவலைத் தருகின்றது.
"ஆயுதங்களை அமைதியாக்கி சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வருகிறோம்" என்று ஆயுதத்தை கீழே வைத்து, புலிகள் சரணடைந்ததை இது தெளிவாக்குகின்றது. அவரின் மற்றைய பேட்டிகள் இதை உறுதி செய்கின்றது.
இந்த இடத்தில் புதினம் செய்தி இதற்கு எற்ப "அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனும் சமாதான செயலகப் பொறுப்பாளர் சீ.புலித்தேவனும் கடந்த திங்கட்கிழமை (18.05.09) அதிகாலை 5:45 நிமிடம் வரை செய்மதி தொலைபேசி ஊடாக வெளித் தொடர்பில் இருந்தனர்.
அப்போது, சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து விடுமாறு அவர்கள் இருவரும் வற்புறுத்தலாக அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருடன் நேரடியாக ஆலோசிக்கப்பட்ட பின்பே மூன்றாம் தரப்பு ஒன்றினால் இந்த அறிவுறுத்தல் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
இதன்பின்னர், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் முன்னேறி வந்த சிறிலங்கா படையினரிடம் அவர்கள் இருவரும் சரணடைந்தனர்". இது புலிகளால் ஒத்துக்கொண்டுள்ள சதியில் ஒரு பக்கம். பத்மநாதன் கூறுவதை மீளப் பார்ப்போம்.
"விடுதலைப் புலிகளின் அச்சமற்ற தன்மையையும், தங்கள் கொள்கை மீதுள்ள முடிவில்லாத கடமையுணர்ச்சியையும், அதன் மீது எம்மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் எவரும் சந்தேகப்படமுடியாது" என்பதன் மூலம், இந்த சரணடைவை நியாயப்படுத்துகின்றார். நாங்கள் இதன் பின்னும் தொடர்ந்து போராடுவோம் என்கின்றார். இப்படி புலிகள் சரணடைந்த முடிவை "எமது அழைப்பை எமது பிள்ளைகள் எந்தவொரு கேள்வியுமில்லாமல் மரணத்துக்கு பயமற்று எடுத்துள்ளார்கள்." என்பதன் மூலம், 'எமது அழைப்பை" என்று குறிப்பிடும் அழைப்பை எடுத்த மூன்றாம் தரப்பின் நிலையை, அவர்கள் எந்தக் கேள்வியுமின்றி ஏற்றதை எடுத்துக் காட்டுகின்றது. அதே நேரம் அவர் கூறுகின்றார் "எமது போராட்டம் எம்மக்களுக்காகவே என்பதை நாம் மறந்துவிடவில்லை" என்று. தம்செயலை இப்படி நியாயப்படுத்துகின்றார். இப்படிக் கூறியபடி 'சிறிலங்கா இராணுவம் எம்மக்களைக் கொன்றுகுவிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகப் பாவிக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்….." என்கின்றார். அதையே கடந்த ஐந்து மாதமாக செய்தவர்கள், தம் சரணடைவை நியாயப்படுத்த அவர்களும் காரணமாய் இருந்ததால் விழைந்த அந்த மனிதஅவலத்தையே காரணமாக தூக்கி வைக்கின்றனர். முந்தைய தமது நடவடிக்கைக்கு முரணாக, தமது சரணடைவை இதன் மூலம் நியாயப்படுத்துகின்றார். அனைத்தும் மக்களுக்காகத்தான் இந்த முடிவு என்று கூறி 'மிகத் துணிச்சலோடு நாங்கள் எழுந்து நின்று எமது ஆயுதங்களை அமைதியாக்குகிறோம்" என்கின்றார். இப்படி சரணடைவை முன்வைத்ததுடன், அதை மூன்றாம் தரப்பின் சதிகாரரிடம் ஒப்படைக்கின்றார். அதை அவர் "எமது மக்களைக் காப்பாற்றுமாறு தொடர்ந்து சர்வதேசச் சமுதாயத்துடன் கேட்டுக்கொள்வதை விட வேறு தெரிவு எங்களுக்கு இல்லை" என்று கூறித்தான், இந்த சரணடைவு நடந்திருக்கின்றது.
இப்படி இரகசியமாக மக்களுக்கு அறிவிக்காது பத்மநாதன் ஊடாக சரணடைந்தவர்களைத் தான், இந்த பாசிச அரசு திட்டமிட்டு படுகொலை செய்கின்றது.
இதன் பின் நடந்தது என்ன? அதை அவரே மற்றொரு பேட்டியில் தெளிவாக்குகின்றார். தமிழ்நெற்றுக்கு பத்மநாதன் வழங்கிய பேட்டியில் ...
"எமது அமைப்பின் பல மூத்த உறுப்பினர்களும் தலைவர்களும் உயிழந்திருக்கின்றனர் அல்லது துரோகத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உண்மை."
இப்படி "வஞ்சகமான" முறையில் இது நடந்தது என்கின்றனர். இது தான் உண்மையில் நடந்தது. புலித் தலைவர்கள் மூன்றாம் தரப்பின் உறுதிப்பாட்டுடன் சரணடைந்தனர் என்பதும், பின் ஒவ்வொருவராக கொல்லப்படுகினறனர் என்பதே உண்மை.
இதையும் நாம் அவரின் பேட்டியிலேயே காணமுடியும்.
"எங்களின் முடிவை நாம் சர்வதேசத்துக்குக் கூறியிருந்தும், சிறிலங்காவின் தாக்குதல்களை நிறுத்தச் சொல்லிக் கேட்டிருந்தும், கொழும்பானது அதைப் பொருட்படுத்தாது இது தான் முடிவென்று இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்தது. எங்களுக்கு கிடைத்த தகவலின்படி சரணடைந்து வெள்ளைக் கொடியைத் தாங்கிச் சென்ற போராளிகளையும் தலைவர்களையும் சர்வதேச மரபைப் பொருட்படுத்தாது இரக்கமில்லாமல் கொன்றுள்ளது."
இப்படி சரணடவை அடிப்படையாக கொண்ட சர்சதேச மூன்றாம் தரப்பின் சதிதான், இந்த 'வெள்ளைக் கொடி" கதையையே நடத்தி முடித்திருக்கின்றது. தமது இந்த படுகொலைக்கான சதிகளை மூன்றாம் தரப்புடன் இணைந்து, இலங்கை அரசு கையாண்டது அம்பலமாகின்றது.
அவர் தன் பேட்டியில் தமிழ்நெற் பேட்டியில் ....
"சர்வதேசச் சமூகமும் சிறிலங்காவுக்கு எதிராக ஒரு திடமான நிலையை எடுத்து சிறிலங்காவை ஒரு முறையான முடிவை எடுக்கச் சொல்லி ஊக்குவிக்கவில்லை. நடந்த நிகழ்வுகளையிட்டு நாங்கள் மிகவும் துக்கத்திலுள்ளோம்"
என்கின்றார்.
சர்வதேச சமூகம் தம்மை ஏமாற்றி விட்டதைத்தான் இப்படிக் குறிப்பிடுகின்றார்.
இனி நாம் இதை அரசு தரப்பு தகவல்கள் ஊடாக சரிபார்க்க முடியும்.
இதனால் அரச தகவல் முன்னுக்கு பின் முரணாக வருகின்றது. செய்தி பல முறை திருத்தப்படுகின்றது. கைதைத் தொடர்ந்து எடுத்த முடிவுகள், மூன்றாம் தரப்பின் வேண்டுகோளுக்கு அமைய மீள கையாளப்படுகின்றது. பொதுவாகவிருந்த செய்தி வழங்கும் இராணுவ முறை தகவல்கள் பின் மறுக்கப்படுகின்து. இந்த குழப்பம், இந்த படுகொலைச் சதியை அம்பலப்படுத்துகின்றது.
"இதனை மறுத்திருக்கும் இலங்கை அரசாங்கம், புலிகளின் முக்கியஸ்தர்கள் சரணடைய முற்பட்டபோது அவர்கள் புலி உறுப்பினர்களாலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது. இதில் இலங்கை அரசாங்கம் சார்பில் வெளிவிவகார அமைச்சர் பாலித கொஹண பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார்.
நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் சரணடைய விரும்புவதாக வடபகுதியில் பணியாற்றிய சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களிலிருந்தும், வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடமிருந்தும் ஞாயிற்றுக்கிழமை மாலை தனக்குப் பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றதாக பாலித கொஹண பிரித்தானிய ஊடகமொன்றிடம் கூறினார்.
“இதற்கு ஒரே வழிதான் உண்டு. இராணுவ முறைப்படி கையில் வெள்ளைக் கொடியுடன் பயமுறுத்தாத வகையில் மெதுவாக வந்து சரணடையவேண்டும் என நான் கூறியிருந்தேன்”
என்று கொஹண தெரிவித்தார்.
அவ்வாறு அவர்கள் சரணடைந்தால் உயிர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது தானே என நோர்வே அமைச்சர் இறுதியாகத் தனக்கு அனுப்பிய குறுஞ்செய்தியையும் பாலித கொஹண அந்த ஊடகத்திடம் காண்பித்துள்ளார்."
கொலை செய்தவர்கள் குற்றத்தை புலிகள் மேல் சுமத்துகின்றனர்.
16-17.05.2009 அன்று ஜனாதிபதி சர்வதேச நாடொன்றில் வைத்து ஆற்றிய உரையில், நாட்டில் பயங்கரவாத பிரச்சனை முடிந்துவிட்டதாக மகிழ்ச்சியுடன் அறிவித்தார். அத்துடன் தன் பயணத்தை திடீரென நிறுத்தி நாடு திரும்பினார். 17.05.2009 அன்று எல்லாக் கொலைகாரர்களும் புடை சூழ, மகிழ்ச்சியாக மண்ணை முத்தமிட்டார். இந்த நிகழ்வு நடக்கும் போது, புலித்தலைவர்கள் கதை (அதாவது சரணடைந்தவர்கள் கைது செய்யப்பட்டு விட்டனர்.) முடிந்துவிட்டது. அந்த பின்னணியில் தான் இந்த ஆர்ப்பாட்டம், மகிழ்ச்சி என அனைத்தும்; நடந்தேறியது. இந்த புலியின் தலைமையின் கதை முடிந்ததையும், அமைச்சர்களாக உள்ள டக்கிளஸ் மற்றும் கருணா சார்பு இணையங்கள் செய்தியாக கொண்டு வருகின்றது. இதில் சரணடைவு பற்றிய குறிப்புகளும் உள்ளது.
இக்காலத்தில் தான் பத்மநாதன், மூன்றாம் தரப்பு சரணடைவுக்கான முழுமுயற்சியில் இருந்தவர். இதில் சரணடைவு என்ற மூன்றாம் தரப்பின் தலையீடுகள் ஊடாகத்தான், புலித்தலைவர்கள் நயவஞ்சகமாக ஏமாற்றப்பட்டு கைதானார்கள்.
17.05.2009 மக்கள் முழுமையாக வெளியேறியதாக அரசு அறிவித்தது. புலிகள் தம் சரணடைவுக்கு நல்லெண்ண அறிகுறியாக மக்களை விடுவித்தனர். இந்த நிகழ்வுக்கு முன் மக்கள் உயிர் இழப்பை தவிர்க்க, ஆயுதத்தை கைவிட்டுவிட்டதான பத்மநாதனின் கூற்று வெளிவருகின்றது. இவை அனைத்தும் மூன்றாந் தரப்பின் சதிக்கு உட்பட்ட ஒன்றுதான். அடுத்த சம்பவத்தைப் பாருங்கள்;. இராணுவத்தை சேர்ந்த ஏழு கைதிகளை, புலியிடமிருந்து தாம் மீட்டதாக இதே நாள் அரசு அறிவிக்கின்றது. உண்மையில் புலிகள் சரணைடைய முன் அவர்கள் நல்லெண்ணமாக விடுவித்த கைதிகளைத்தான், தாங்கள் மீட்டதாக அரசு கதை விடுகின்றது.
இப்படி புலிகள் முன்னைய நிலைக்கு மாறாக எதிர்மறையில் பிறிதான ஒரு நகர்வு நடக்கின்றது. இந்த அடிப்படையில் அரசின் முன்னுக்குப் பின் முரணாக செய்திகள், இவற்றை மேலும் உறுதி செய்கின்றது. இந்தக் கூட்டுச்சதியை அவர்களின் ஒன்றுக்கொன்று முரணான செய்திகள் அம்பலமாக்குகின்றது. புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது 'இன்று காலை" (19.05.2009) தான் என்றும், அதை கருணா அன்றைய பிபிசி தமிழ் சேவையில் பலதரம் உறுதி செய்கின்றார். 18ம் திகதியே பிரபாகரன் கொல்லப்பட்டதாக அரசதரப்பில் இருந்து வெளியிட்ட செய்தி, பின் 19ம் திகதி காலையே கொல்லப்பட்டதென்ற செய்தியும் சரி, தொடர்ந்து டிஎன்ஏ மூலம் உறுதி செய்துள்ளதாக கூறுவதன் மூலம், இதன் முழுச் சதியும் மொத்தத்தில் அம்பலமாகின்றது.
டிஎன்ஏ மருத்துவ அத்தாட்சியை கோரிய இந்தியாவுக்கு, றோ மூலம் நடந்தேறிய இந்தப் படுகொலைக்கு பின் அவை அவசியமாக இருக்கவில்லை.
ஏமாற்றி சரணடைய வைத்தவர்கள் மேல், படுகொலை, அவர்களின் உடலங்கள் என்று நாடகமே அரங்கேறுகின்றது. இப்படி சரணடைந்தவர்கள் மீதான விசாரணை என்பது, இலங்கை மற்றும் இந்திய அரசு நடத்திய அனைத்துக் குற்றங்கள் மேலான விசாரணையாக மாறும். அத்துடன் இதுவே அரசியல் போராட்டமாக மாறும். அதைத் தவிர்க்க, இந்திய இலங்கை அரசுகள் சேர்ந்து இந்த படுகொலை செய்து அழிப்பதை தெரிவு செய்தது. இதனால் எவரும் உயிருடன் பிடிபடவில்லை என்றால், எவரையும் உயிருடன் விட்டுவைக்க அவர்கள் தயாராகவில்லை. விசித்திரமான உண்மைகள். தமக்கு தேவையான தகவல் சார்ந்த விசாரணையின் பின், தொடர்ச்சியாக படுகொலைகள் அரங்கேறுகின்றது.
இங்கு பாருங்கள் 17.05.2009 அன்று எப்போதும் இல்லாத வகையில், திடீரென சூசையின் பேட்டி வெளிவருகின்றது. இதற்கு முன் சூசை குடும்பம், தப்பிச் சென்ற போது அவர்கள் கைதானதாக செய்தி வருகின்றது. ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த இந்த நிகழ்ச்சி, பலத்த சந்தேகத்தைக் கொண்டு வருகின்றது. இதில் சூசை குடும்பம் தான் கவுரமாக உலகறிய இன்று தப்பியுள்ளது. பிரபாகரன் குடும்பம் கொல்லப்பட்டதாக மற்றொரு செய்தியும், அதை மறுக்கும் அரசு செய்தியும் கூட வெளிவருகின்றது. சந்தேகங்கள் பல, இந்த திரைமறைவு படுகொலை நாடகத்தில், ஒழுங்கின்மையால் இவை கசிகின்றது.
இந்த இடத்தில் சூசையின் பேட்டியில் (17.05.2009) .....
"மக்கள் பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கும் அனைத்து மக்களையும் ஜெனீவாவில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துடன் நேரடியாக செல்வராஜா பத்மநாதனூடாகத் தொடர்பு கொண்டு வெளியேற்றுமாறு கேட்டிருந்தோம்."
என்கின்றார்.
இங்கு பத்மநாதன் என்ற நபர் ஊடாக சூசை ஒரு செய்தி. அதே நேரம் அவர் குடும்பம் பாதுகாப்பாக வெளியேறுகின்றது. இந்தப் படுகொலையின் பின், அரசு ஒரே மர்மமான சதியை அரங்கேற்றுகின்றது. தமக்கு துணையாக நின்றவர்களைக் கூட கொல்லுகின்றது. எல்லாம் முடிந்ததாக கூறி நாடு திரும்பிய ஜனாதிபதி, ஆயுதத்துக்கு ஓய்வுகொடுத்ததாக கூறிய பத்மநாதன், இதை தொடர்ந்து சூசையின் முரணான பேட்டி, இவை எல்லாம் இந்தச் சதியின் முடிச்சுகள்.
இப்படி சரணடைவுக்கு பின்னான நிகழ்வைத்தான் பத்மநாதன் "வஞ்சகமான" "துரோகத்தமான" முறையில் கொல்லப்பட்டதாக கூறுகின்றார். உண்மையில் இது நடந்தது. புலித்தலைவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்ற வாக்குறுதியின் பெயரில், சரணடைய வைத்தபின் அவர்கள் திட்டமிட்டவகையில் படுகொலை செய்யப்பட்டார்கள். பத்மநாதன் கூறுகின்றார்
"எமது அமைப்பின் பல மூத்த உறுப்பினர்களும் தலைவர்களும் உயிரிழந்திருக்கின்றனர் அல்லது துரோகத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உண்மை."
இந்த கூற்று, அவர் மூலம் அழகாக நடந்தேறிய ஒரு சதியின் பின்னணியில் படுகொலைகளாக அரங்கேறியுள்ளதை எடுத்துக் காட்டுகின்றது.
இதில் அவர் அறியாமலே இதற்கு அவர் துணை போயிருக்கின்றார் அல்லது அவரும் சேர்ந்து சதியில் ஈடுபட்டிருக்கின்றார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த இடத்தில் பத்மநாதன் கருத்துக்கள் பல சந்தேகத்தை தருகின்றது.
"இந்நேரத்தில், இலங்கைத் தமிழரின் எதிர்காலத்துக்காக, விடுதலைப் புலிகளானது இந்தியாவுடன் சேர்ந்து செயற்படத் தயாராக உள்ளது"
என்கின்றார். எப்படி? கொலைகாரர்களுடன் சேர்ந்து!?
மேலும் அவர்
"ஈழத்தமிழர்களின் நலனுக்கும் எதிர்காலத்துக்கும் எமது நாட்டிலும் வெளிநாடுகளிலும் பாடுபடும் ஒவ்வொரு தமிழனினதும், அரசியல் கட்சிகளினதும் பங்கை நாம் மிகவும் போற்றுகின்றோம்… இவர்களும் இதே கொள்கைகளை மதிக்கிறார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். இந்த நேரத்தில், அவர்கள் முன்வந்து எம்மோடு சேர்ந்து செயற்படுவார்கள் என்று நாங்கள் நேர்மையாக நம்புகின்றோம்."
முன்பு துரோகியாக காட்டியவர்களை, அதாவது தாம் அல்லாதவர்களுடனான சேர்ந்த திடீர் அரசியலை முன்வைக்கின்றார். நேற்று வரை, இன்றுவரை கூட மாறாத நிலையில், மர்மமனிதனான பத்மநாதன் புலிகளின் கடந்தகால கொள்கைக்கு முரணாக இப்படி கருத்துரைக்கின்றார். நீடிக்கப் போகும் சதிவேலைகளின் அழைப்பா இது.
பல மர்மங்கள், சதிகளுடன் கூடிய மோசடிகள் மூலம் தான், இந்தப் படுகொலை அரங்கேறியுள்ளது என்பது மட்டும் திண்ணம். காலம் நிச்சயமாக பதிலளிக்கும்.
1. சரணடைந்தவர்களையும், அவர் சார்ந்த குடும்பத்தையும் திட்டமிட்டு கொல்லுகின்ற பாசிசம் மன்னிக்க முடியாத பாரிய குற்றம். இது இலங்கை சட்டங்கள் அனைத்தையும் மறுத்து, அதை மீறுகின்றது. ஒரு சதிகார இரகசியக் குழுவின் அதிகாரத்தின் கீழ் ஒரு நாடும், முழு உலகமும் கொலைகாரக் பாசிசக் கும்பலால் ஏமாற்றப்படுகின்றது.
2. மறுபக்கத்தில் அங்கு சிக்கிய மக்களையும், அவர்களின் கதியையும் உலகுக்கு மூடிமறைத்து மற்றொரு படுகொலையை அரங்கேற்றுகின்றது.
மக்களை அடிமைப்படுத்தி அடக்கியாளும் பாசிசம் கொக்கரிக்கின்றது. சதிகள் மூலம், ஊடகங்கள் மூலம், பிரச்சாரங்கள் மூலம், தமக்கு எதிரான அனைவரையும் மிரட்டுகின்றது. இதுதான் உனக்கும் நடக்கும் என்று உலகுக்கு மிரட்டுகின்றது.
பி.இரயாகரன்
20.05.2009
Geen opmerkingen:
Een reactie posten