எவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டாலும், இலங்கைக்கெதிராக அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்துள்ள பிரேணையை தோற்கடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் மகிந்தவின் திட்டமிடாத செயற்பாடுகளே என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு இலங்கைத் தூரக அலுவலகமொன்றில் அதிகாரிகளைச் சந்தித்த போதே வெளிவிவகார அமைச்சர் இதனை மிகவும் வெறுப்புடன் தெரிவித்துள்ளார். தான் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த போதிலும், ஜெனீவாவிற்கான இலங்கைக் குழுவின் தலைவராக அமைச்சர் மகிந்த சமரசிங்கவை நியமித்து தன்னை ஜனாதிபதி அவமதித்துள்ளதாகவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பு ஒபரோய் விடுதியில் ''வெய்டராக'' பணியாற்றிய மகிந்த சமரசிங்கவை, அக்காலத்தில் அநேகமானோர் ''பிஸ்சு மைக்கல்'' என்ற அடையாளப்படுத்துவதாகவும் ஜீ.எல். கூறியுள்ளார். அப்போது ''சார்'' என்று தன்னை அழைத்த ஒருவரை, தனக்கு தலைவராக நியமித்தது ஜனாதிபதி தன்னை அவமதிப்பதற்காக திட்டமிட்டு மேற்கொண்ட செயல் எனவும் ஜீ.எல். குறிப்பிட்டுள்ளார். பெருந்தோட்ட கைத்தொழில்துறையில் வர்த்தமானி அறிவித்தலையோ, மனித உரிமைகள் தொடர்பான எந்தவொரு பொறுப்பையோ அமைச்சர் மகிந்த சமரசிங்கவிற்கு வழங்காததால் ஜெனீவா மாநாட்டில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மகிந்த சமரசிங்கவை பெரிதாக பொருட்படுத்தவில்லை எனவும் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஜெனீவாவிற்கான இலங்கைத் தூதுவர் தமரா குணநாயகத்தின் தான்தோன்றித் தனமான செயற்பாடுகள், இலங்கை மீதான அழுத்தங்கள் அதிகரித்தன. தமரா குணநாயகம் மனநிலை சரியில்லாதவர் என்பதால் மருத்துவ அறிக்கைக்கு அமைய அவர் இதற்கு முன்னர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நபர் எனவும் ஜீ.எல்.பீரிஸ் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெனீவா பேரவையின் ஏராளமான பொறுப்புக்கள் இவ்வாறு மனநிலை சரியில்லாத ஒருவரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமரா குணநாயகம் குறித்து தான் பலதடவை ஜனாதிபதியிடம் எடுத்துக்கூறிய போதிலும், அவர் இதனைப் பொருட்படுத்தவில்லை எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மகிந்த ராஜபக்�ஷ எதிர்க்கட்சியில் இருந்தபோது, ஜெனீவா சென்ற சந்தர்ப்பத்தில் தமரா குணநாயகத்தின் வீட்டில் தங்கியிருந்தமையே இதனைப் பொருட்படுத்தாமைக்குக் காரணம் எனவும் ஜீ.எல்.குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனைச் சந்தித்திருந்தால் இவ்வாறான பிரேரணைத் தாக்கல் செய்யப்படுவதைத் தடுத்திருக்கலாம். இதுகுறித்து கலந்துரையாட வொஷிங்டன் வருமாறு ஹிலாரி கிளின்டன் அழைப்பு விடுத்திருந்தார். எனினும், செல்ல வேண்டாம் என ஜனாதிபதி உத்தரவிட்டார். இவையே தற்போது இந்தப் பிரச்சினை பூதாகரமாகியுள்ளதாக ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். குறைந்த பட்சம், ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேணை தொடர்பாக மகிந்த ராஜபக்�ஷ, அமெரிக்க ஜனாதிபதி அல்லது அமெரிக்க இராஜாங்கச் செயலாளருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு இவ்விடயத்தை சமரசம் செய்திருக்கலாம்.
எனினும், மகிந்த இதனையும் செய்யவில்லை. அத்துடன், தனக்கும் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவேண்டாம் என உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதியின் இவ்வாறான பிடிவாத செயற்பாடுகளினால் சர்வதேச அழுத்தங்களைக் குறைக்கவோ, பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவோ முடியாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten