கடந்த 20ஆம் திகதி யாழ். குளப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.
இந்த படுகொலைக்கு கண்டித்து பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வடமாகாண ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பியிருந்தனர்.
குறித்த மகஜர் ஜனாதிபதியிடம் சேர்பிக்கப்பட்டதாக தெரிவித்து நேற்று முன்தினம் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
குறித்த கடிதம் சிங்கள மொழியில் இருப்பதாக தெரிவித்து திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், நேற்று தமிழ் மொழியில் ஆளுநரிடம் இருந்து மாணவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டமை யாவரும் அறிந்த விடயமே.
எனினும், ஆளுநரிடம் இருந்து மாணவர்களுக்கு அனுப்பப்பட்ட சிங்களம் மற்றும் தமிழ் மொழி கடிதங்களுக்கு இடையில் ஒரு உண்மை மறைக்கப்பட்டுள்ளமை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
ஒரே விடயத்துக்காக பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆளுநரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இரு வேறு கடிதங்களிலும், முகவரி மாறுபட்டுள்ளமை இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
முதலாவதாக சிங்கள மொழியில் அனுப்பப்பட்ட கடிதத்தில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலகம், கொழும்பு 01 என்று முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இரண்டாவது முறையாக தமிழ் மொழியில் அனுப்பட்ட கடிதத்தில் கௌரவ ரணில் விக்ரமசிங்க, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதம அமைச்சர், பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை, கொழும்பு 03 என முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மையில் மாணவர்கள் ஆளுனரிடம் கையளித்த கடிதம் யாருக்கு அனுப்பப்பட்டது. குறித்த விடயத்தில் ஏதேனும் குளறுபடிகள் உள்ளனவா..? அல்லது பல்கலைக்கழக மாணவர்கள் ஏமாற்றப்படுகின்றார்களா..?
பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரியிருக்கும் மாணவர்கள் விடயத்தில் பொறுப்பு வாய்ந்தவர்கள் அலட்சியத்துடன், செயற்படுவதையே இது எடுத்து காட்டுகின்றது.
எனவே, நீதிக்காக போராடும் இந்த விடயத்தில் மாணவர்களும், தமிழ் மக்களாகிய நாமும் அவதானத்துடனும், விழிப்புடனும் இருக்க வேண்டியது மட்டுமே உண்மை.
Geen opmerkingen:
Een reactie posten