விக்கிலீக்ஸ் இணையம் மூலம் வெளியான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தகவல் பரிமாற்ற குறிப்புகளில் இருந்து இந்த விவகாரம் அம்பலமாகியுள்ளது.
சிறிலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த போரில் பொதுமக்கள் பலியாவது குறித்துக் இந்திய அரசு கவலை தெரிவித்தது.
ஆனாலும் புலிகளுக்கு எதிரான நடவடிக்கையை சிறிலங்கா அரசு தொடர்வதை இந்தியா எதிர்க்கவில்லை.
2009 ஜனவரி மாதம் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை அவரது மாளிகையில் சந்தித்த அப்போதைய இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மனிதஉரிமைகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதைத் தவிர, வேறு எந்த நோக்கத்துடனும் தான் கொழும்பு வரவில்லை என்று கூறியதாக, அமெரிக்கத் தூதுவரிடம் இந்தியத் தூதரக அதிகாரி தெரிவித்தார்.
போர் தொடர்வதை இந்தியா எதிர்க்கவில்லை என்று அவர் வெளியிட்ட அறிக்கை மூலமே தெளிவாகியிருக்கிறது.
பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கையில், 23 ஆண்டு மோதலுக்குப் பிறகு, சிறிலங்காப் படைகள் பெறுகின்ற வெற்றியானது சிறிலங்காவின் வடக்கிலும் ஏனைய பகுதிகளிலும் இயல்பு நிலையையை நிலை நாட்டுவதற்காக அரசியல் ரீதியாக ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்று கூறியிருந்தார்.
மத்திய அரசின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவின் நெருக்குதலால் 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மட்டும், போரைத் தாற்காலிகமாக நிறுத்துமாறு சிறிலங்கா அரசை வலியுறுத்துவதற்காக முயற்சிகளை இந்தியா மேற்கொண்டது.
அதன் பிறகு வேறெந்த தருணத்திலும் சிறிலங்காவில் போர் தொடர்வதை இந்தியா தடுக்கவில்லை.
2009 ஏப்ரல் 15ம் நாள் அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவரை, அப்போதைய இந்திய வெளியுறவுச் செயலரும், தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சிவசங்கர் மேனன் சந்தித்தபோது, மோதலுக்குத் தீர்வு காண்பதற்காக ஐ.நா. சபை தனது பிரதிநிதியை அனுப்புவதை சிறிலங்கா அரசாங்கம் விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், விடுதலைப் புலிகளுடன் நேரடிப் பேச்சுக்களில் ஈடுபடுவதற்கும், போர்நிறுத்தத்துக்கும் சிறிலங்கா அரசு தயாராக இல்லை என்றும் சிவசங்கர் மேனன் கூறியுள்ளார்.
அனைத்துலக நாடுகளின் கோரிக்கைகள் அனைத்தையும் புறக்கணிக்காமல், குறைந்தபட்சம், விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள் அல்லாத மற்றவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்துப் பரிசீலிக்குமாறு சிறிலங்கா அரசுக்கு இந்தியா யோசனை கூறியதாகவும் சிவசங்கர் மேனன் அமெரி்க்க அதிகாரியிடம் கூறியிருக்கிறார்.
அதேவேளை, புலிகளின் முக்கிய தலைவர்கள் யார், ஏனைய தலைவர்கள் யார் என்பதை எப்படி அடையாளம் காண்பது என்ற கேள்வியும் எழுந்ததாக மேனன் கூறியிருக்கிறார்.
பேச்சுக்களுக்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ள அதேவேளை, விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்தும் முரண்பட்ட தகவல்கள் வருவதாகவும், பிரபாகரனுக்காகப் பேசவல்லவர் யார் என்று தெரியவில்லை என்றும், நிலைமையை அவர் உணர்ந்திருக்கிறாரா என்பது தெரியவில்லை என்றும் சிவசங்கர் மேனன் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் தெரிவிக்கிறது.
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் பேச்சுக்களுக்கு இந்தியா முன்முயற்சி எடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் சிவசங்கர் மேனன் கூறியுள்ளார்.
2009 மே 6, 7ம் நாட்களில், சிறிலங்காவுக்கான பிரித்தானியாவின் சிறப்புத் தூதுவர் டெஸ் பிறவுண் இந்திய வெளிவிவகாரச் செயலர் சிவசங்கர் மேனன் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை ஆகியோரைச் சந்தித்தார்.
அப்போது, சிறிலங்கா இராணுவம் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கும் நிலையில் உள்ளதால், போரை நிறுத்துவதற்கான சாத்தியங்கள் இப்போது இல்லை என்று இந்திய அதிகாரிகள் இருவரும் கூறினார்.
அப்பாவி மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவலம் குறித்து இந்திய அதிகாரிகள் கவலை தெரிவித்தாலும், போருக்குப் பிறகு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சம்மதிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் இருந்ததாக பிரித்தானிய சிறப்புத் தூதுவர் டெஸ் பிறவண் அமெரிக்கத் தூதரக அதிகாரியிடம் தெரிவித்திருக்கிறார்.
அத்துடன் ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்ட நிகழ்ச்சி நிரலில், சிறிலங்கா பிரச்சினையையும் சேர்த்து, அறிக்கை வெளியிட்டால்- சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா. குரல் கொடுத்தால்- அது எதிர்விளைவுகளைத் தான் ஏற்படுத்தும் என்று பிரித்தானிய சிறப்புத் தூதுவரிடம் சிவசங்கர் மேனனும், எம்.கே.நாராயணனும் கூறியுள்ளனர்.
ஐ.நா பாதுகாப்பு சபை அல்லது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை மூலம் அழுத்தம் கொடுப்பதை விட, இராஜாங்க ரீதியான நடவடிக்கைகளே பயனுள்ளதாக இருக்கும் என்று சிவசங்கர் மேனன் அமெரிக்கத் தூதரக அதிகாரியிடம் கூறியதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ள்து.
Geen opmerkingen:
Een reactie posten