இந்தக் கருத்துகளை அறிந்து கொள்வதும், ஆராய்ந்து பார்ப்பதும் ஒவ்வொருவரதும் கவனத்துக்கு உட்பட்டதாகும்.
ஒருபுறத்தில் இந்தத் தலைவர்கள் எந்தத் திசையை நோக்கிப் பயணிக்கின்றனர் என்பதையும் நோக்க முடிகிறது.
மறுபுறம் நாட்டு மக்கள் தலைவர்கள் தொடர்பில் கொண்டிருக்கும் நிலைப்பாடுகள் சரியானதுதான் என்பதையும் எண்ணிப்பார்க்க முடிகிறது.
முதலாவது கருத்தைச் சொல்லி இருப்பது நாட்டின் முதற் பிரஜையான ஜனாதிபதி.
அடுத்த கருத்தை வெளியிட்டிருப்பது இரண்டாவது பிரஜையான பிரதமர்.
அடுத்த கருத்தை முன்வைத்திருப்பது வடக்கு முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் ஆவார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கருத்தை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேசிய விளையாட்டு விழாவின் போது உரையாற்றுகையில் தெரிவித்திருக்கிறார்.
அவர் அங்கு கூறிய கருத்து விளையாட்டுத்துறை என்று வரும் போது மாவட்ட மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் வேறுபட்டு போட்டியில் களமிறங்கலாம்.
ஆனால் நாட்டின் அபிவிருத்தி என்று வரும் போது மாகாண ரீதியில் வேறுபட முடியாது. முழு நாடும் ஒன்றுபட்டே இயங்க வேண்டும்.
ஆங்கிலேயர்கள் தமது நிருவாகத்தை இலகுவாக்கிக் கொள்ளும் பொருட்டே அன்று எமது நாட்டை ஒன்பது மாகாணங்களாக வகுத்தனர்.
ஆனால் ஒரே நாடு என்ற அடிப்படையில் ஒரே பிரஜைகளாக ஒன்றுபட்டு சமூக, பொருளாதார செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
பிரிந்து பிளவுபட்டு நிற்பதால் நாட்டை முன்னேற்ற முடியாது. தலைவர்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இனவாதம், மதவாதம், பிரதேச வாதம். பேசுவோரும் அரசியல் புத்திஜீவிகளும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
தேசிய விளையாட்டு விழாவொன்று வடக்கில் அதாவது யாழ்ப்பாணத்தில் நடத்தியிருப்பது எமது நாட்டு வரலாற்றில் இதுவே முதற்தடவையே ஆகும்.
தேசிய மட்டத்திலான எந்தவொரு விழாவினையோ, நிகழ்வினையோ வடக்குக்கு கொண்டு செல்வதற்கு அன்றைய தலைமைகள் எண்ணிக் கூட பார்க்கவில்லை.
அது ஒன்றை தெளிவுபடுத்துகிறது. அன்றைய தலைவர்கள் அல்லது அரசு வடக்கு தொடர்பில் தவறான கோணத்திலேயே தமது பார்வையை செலுத்தினர்.
வடக்கு அரசியல் தவைர்கள் தேசிய வைபவங்களுக்கு அழைக்கப்படுவதில் புறந்தள்ளியே பாரக்கப்பட்டனர். இன்று அந்த நிலை முற்று முழுதாக மாறியுள்ளது.
இன்றைய அரசு அமைதி, சமாதானம், நல்லிணக்கம் போன்றவற்றை எழுத்துக்கு மட்டுப்படுத்தாமல் அவற்றை நடைமுறைச் சாத்தியமாக்குவதில் தீவிரம் காட்டி வருவதை காண முடிகிறது.
வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் இந்த நிகழ்வில் தமிழ் மொழியில் மாத்திரமன்றி சிங்கள மொழியிலும் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியூஸிலாந்து விஜயத்தை மேற்கொண்டிருந்த போது ஒக்லண்ட் நகரில் இலங்கையர்களை சந்தித்த போது தெரிவித்த கருத்தில் இலங்கையர் உலகில் எங்கு வாழ்ந்தாலும் இலங்கையர்கள் என்ற உணர்வுடன் எமது தனித்துவத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு, நாட்டின் அபிவிருத்திக்கும் உதவ வேண்டும். நாட்டின் முன்னேற்றம் தொடர்பில் நாம் கட்சி, மத, மொழி, இனம் என்பவற்றை புறமொதுக்கி அனைவரும் இலங்கையர்கள் என்ற உணர்வுடன் செயற்பட முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
கடந்த காலத்தில் நாட்டில் இடம்பெற்ற அரசியல் அச்சுறுத்தல்கள், போர்ச் சூழல் காரணமாக எமது மக்களில் கணிசமானோர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர்.
நாட்டுக்கு முக்கியமாக தேவைப்பட்ட புத்தி ஜீவிகள் பெருமளவில் வெளியேறி இருந்தனர்.
அரசியல் பழிவாங்கல்களும் இடம்பெற்றன. அந்த இருண்ட யுகத்திலிருந்த நாடு இன்று மீட்சி பெற்றுள்ளது.
நல்லாட்சியும் மலர்ந்துள்ளது. தவறான கண்கொண்டு யாரும் நோக்கப்படுவதில்லை.
எனவே நாட்டை விட்டும் வெளியேறிய சகலரையும் நாடு திரும்பி நாட்டின் முன்னேற்றம், சுபீட்சம் என்பவற்றுக்கான பங்களிப்புச் செய்யுமாறு பிரதமர் அழைப்பு விடுத்திருக்கிறார்.
ஜனாதிபதி, பிரதமர் இருவரதும் சிந்தனை, எண்ணங்களை நோக்கும் போது பிடிவாத அரசியல் ஜனநாயக நாட்டுக்கு சரிப்பட்டு வராத ஒன்று என்பது புரிந்து கொள்ளத் தக்கதாகவே உள்ளது.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ‘எழுக தமிழ்’ நிகழ்வில் ஆற்றிய உரை தொடர்பில் தெற்கில் விமர்சனங்கள் எழுந்த போதிலும் அரசு அது குறித்து தவறான எண்ணம் கொள்ளவில்லை.
ஜனநாயக ஆட்சியில் இவை சர்வ சாதாரணம். மக்களின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.
மக்கள் எதனையும் கேட்கலாம். ஆனால் எது அவசியமோ அதனையே அரசு வழங்க முடியும். அதற்காக எதனையும் கேட்க வேண்டாமெனக் கூற முடியாது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூட வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் இனவாத ரீதியில் செயற்பட முனையவில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த அரசின் பயணம் அரசியல் சாயம் பூசப்பட்டதொன்றல்ல. பச்சை, நீலம், சிவப்பு என்று எதுவும் கிடையாது.
நிறக் கலவையற்ற தூய்மையானதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்கி நாட்டை உன்னத நிலைக்கு கட்டியெழுப்புவதே அரசின் இலக்காகும்.
தடைக்கற்களை ஓரங்கட்டி சரியான பாதையில் நல்லாட்சிப் பயணம தொடர வேண்டும்.
உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அதே சமயத்தில் தேசத்தின் முன்னேற்றத்துக்கும் பங்களிப்புச் செய்ய வேண்டிய பொறுப்பு மக்களைச் சார்ந்திருக்கின்றது.
இதனைக் கவனத்தில் கொண்டு இனவாத முட்டுக்கட்டைகளை அகற்றி 'தேசம்' என்ற ஒரே சிந்தனையின் கீழ் ஒன்றுபட்டால் எமது பயண இலக்கை விரைவாக எட்ட முடியும்.
Geen opmerkingen:
Een reactie posten