தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 23 november 2012

நவுறூ தீவில் உள்ள முகாம்கள் 'கொடூரமாகவும் தரக்குறைவாகவும்' இருக்கிறது: சர்வதேச மன்னிப்புச் சபை !!


நவுறூத் தீவில் தஞ்சக் கோரிக்கையாளர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள முகாமில் நிலைமைகள் மிக 'கொடூரமாகவும் தரக்குறைவாகவும்' காணப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் தஞ்சம்பெறும் நோக்குடன் படகுகள் மூலம் வந்தவர்களில் 386 ஆண்கள், அவர்களது தஞ்சக்கோரிக்கை பரிசீலனை முடியும் வரை இந்த நவுறூ முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தங்கியுள்ள கூடாரங்கள் ஆட்களால் நிரம்பி வழிகின்றன. வெப்பத்திற்கும் மழைக்கும் தாக்குப் பிடிக்காத இந்தக் கூடாரங்களில் எவருக்கும் தனிப்பட்ட அந்தரங்கத்துக்கான சுதந்திரமே இல்லை.
எவ்வளவு காலத்துக்கு இவ்வாறு தடுத்துவைக்கப்பட போகிறோம் என்பது தெரியாமலேயே அவர்கள் உளவியல் பாதிப்புகளுக்கு உள்ளாகிவருகின்றனர் என்று சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இந்த முகாம்களில் இருப்பவர்களின் தஞ்சக் கோரிக்கைகளை பரிசீலித்து முடிக்கும் வரை, அவர்கள் 5 ஆண்டுகள் வரையாவது அந்த முகாம்களிலேயே காத்திருக்க வேண்டும் என்று ஆளும் தொழிற்கட்சியும் எதிர்க்கட்சியும் கூறுகின்றன.
நவுறுத் தீவில் ஒவ்வொரு கூடாரத்திலும் 16 பேர் அல்லது 5 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அருகருகே மிக நெருக்கமான படுக்கைகளும் உடுதுணிகளை வைத்துக்கொள்ள பிளாஸ்டிக் கூடைகளும் வழங்கப்பட்டுள்ளன. 40 டிகிரி வரையான வெப்பத்துடன் காற்றிலும் அதிக ஈரலிப்புக் காணப்படுவதால் வெப்பம் கொளுத்துவதாக சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டுகிறது.
சர்வதேச மன்னிப்புச் சபையின் தூதுக்குழு அங்கு சென்றிருந்தபோது, நிலைமை இன்னும் மோசமாக இருந்துள்ளது. முகாமின் ஒருபகுதியில் மழை வௌ்ளம் புகுந்து கூடாரங்களும் படுக்கைகளும் நனைந்து இருந்திருக்கின்றன.
“குற்றவாளிகளுக்கு கொடுக்கின்ற கடுமையான தண்டனை போல் இது இருக்கிறது. அவுஸ்திரேலியாவில் குற்றவாளிகளுக்கு இதனைவிட நல்லதாகவே நடத்தப்படுகிறார்கள். ஒரு குற்றவாளிக்கு எவ்வளவு காலம் தான் சிறையில் இருக்கப் போகிறேன் என்பது தெரியும். இங்கு அது கூட எங்களுக்குத் தெரியாது” என்று நவுறூ முகாமில் உள்ள ஒருவர் சர்வதேச மன்னிப்புச் சபையிடம் தெரிவித்துள்ளார்.
தமது நிலைமையை முன்னிறுத்தி 9 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருவர் 40 நாட்களுக்கு மேலாக உணவு உண்ண மறுத்துவருகிறார் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது.
அபாயகரமான படகுப் பயணங்கள் மூலம் அவுஸ்திரேலியா நோக்கி வருவோரை தடுக்கும் நோக்குடன் பசிபிக் கொள்கையை அவுஸ்திரேலியா மீண்டும் கையில் எடுத்துள்ளது.
அவுஸ்திரேலிய மற்றும் நவ்றூ அரசுகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உரிமைகள் மீறப்பட்டுவருவதாக சர்வதேச மன்னிப்புச் சபையைச் சேர்ந்த டொக்டர் கிரஹாம் தோம் குறிப்பிட்டார்.
இந்த முகாமுக்கு ஆட்களை மாற்றுவதை அவுஸ்திரேலியா உடனடியாக நிறுத்தி, அந்த முகாமையே முழுமையாக மூடிவிடவேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள அரச தரப்பு பேச்சாளர் ஒருவர், சர்வதேச மன்னிப்புச் சபை இந்தக் கருத்தை முன்வைத்திருப்பது ஆச்சரியப்படத்தக்கது அல்ல. இந்த நவுறூ முகாமுக்கு முன்பிருந்தே குடியேறிகளை தடுத்துவைத்திருக்கின்ற வழக்கம் இருந்து வருகிறது என்று அவர் பதில் தெரிவித்துள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவும் தண்ணீரும் தரப்படுகிறது. மருத்துவ வசதியும் இருக்கிறது. தேவையானால் உளவியல் ஆற்றுப்படுத்தும் வசதிகளும் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
தஞ்சக்கோரிக்கை தொடர்பான விசாரணைகள் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கும் என்று அவுஸ்திரேலிய அரச பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய அரச, தனது நாட்டின் பெருநிலப் பரப்புக்கு வெளியே பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சில தீவுகளில் முகாம்களை திறந்து அங்கு தஞ்சக் கோரிக்கையாளர்களை தடுத்துவைத்து விசாரிக்கின்ற 'பசிபிக் சொலூஷன்' என்ற நடைமுறையை பல ஆண்டுகளாக கைக்கொண்டு வந்தது.
ஆனால் 2008-ம் ஆண்டில் அந்த கொள்கையை ரத்து செய்திருந்த நிலையில் இப்போது மீண்டும் அந்த முகாமைத் திறக்க கடந்த ஓகஸ்டில் அவுஸ்திரேலியா முடிவு செய்தது. இந்த வாரத்தின் ஆரம்பத்தில் பப்புவா நியூகினியில் உள்ள மானுஸ் தீவிலும் இன்னொரு முகாம் திறக்கப்பட்டுள்ளது.

http://news.lankasri.com/show-RUmqzBRXNUnx4.html

Geen opmerkingen:

Een reactie posten