தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 november 2012

தேசிய மாவீரர் நாள் அறிக்கை 2012 :தமிழீழ விடுதலைப் புலிகள் !


எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,இன்று மாவீரர்நாள். தமிழீழத்தின் தேசியநாள். எங்கள் தங்கத் தலைவனின் மடியிலே, எமது விடுதலை இயக்கத்தின் முதல் மாவீரன் லெப்.சங்கர் தன்னுயிரைத் துறந்தநாள்.
எமது விடுதலை வானில் விண்மீன்களாய், நித்தமும் நீங்காதொளிரும் புனிதர்களாம் மாவீரர்களை, தம்முயிரை அர்ப்பணித்துத் தரணியிலே தமிழினத்தைத் தலைநிமிர வைத்த மானமறவர்களை, இவ்வுலகெங்கும் பரந்துள்ள தமிழரெல்லோரும் தம் நெஞ்சம் நெகிழக் கண்கள் பனிக்க மலர்தூவிச் சுடரேற்றி வழிபடும் திருநாள்.
உயிர் வாழும் ஆசையிலிருந்து பிறக்கும் அச்சமே மனிதர்களைக் கோழைகளாக மாற்றி விடுகிறது. ஆனால் வீரர்களின் நெஞ்சமெங்கும் கனன்று எரியும் விடுதலைத்தீயினால், அச்சமே அவர்களிடமிருந்து அச்சப்பட்டு ஓடிவிடுகிறது. அதனாலேயே நஞ்சைக் கழுத்தில் அணிந்து கொண்டு, உயிரைத் துச்சமென மதித்துப் போராடிய அம்மாவீரர்கள் சாவையும் வென்று, நம்மண்ணினதும்; நம்மினத்தினதும் வரலாறாகி நிலைத்து விட்டார்கள்.
விடுதலை என்பது ஒவ்வோர் உயிரினதும் பிறப்புரிமையாகும். இந்தப் பூவுலகிலுள்ள உயிரினங்கள் எல்லாவற்றினதும் வாழ்க்கையின் அடிநாதம் விடுதலை என்ற ஒற்றைச் சொல்லிலேயே பொதிந்திருக்கிறது. தமிழீழ மக்களாகியநாங்களும் இவ்வுலகம் முன்னெப்போதும் சந்தித்திராத கொடுந்துயரங்களையும் கடும் இழப்புக்களையும் தாங்கி எமதுதாயக விடுதலைக்காகவே பல்லாண்டுகளாகப் போராடி வருகின்றோம்.
நாம் உலகின் தொன்மை வாய்ந்த, ஆதி மொழியொன்றுக்குச் சொந்தமானவர்கள். பழம்பெருமை வாய்ந்த கலைபண்பாட்டு விழுமியங்களுக்கும், இலக்கியங்களுக்கும், அறிவியலுக்கும், நவீன உலகுக்கே முன்னுதாரணமான நாகரிகத்துக்கும் சொந்தமானவர்கள். நாம் அமைதியையும் சமாதானத்தையும் ஒற்றுமையையும் விரும்பும் ஒரு இனத்தவராகவே வாழ்ந்தோம். தொடர்ந்தும் அங்ஙனமே வாழ விரும்பினோம். ஆனால் ஆட்டுக்குட்டியின் உயிருக்கும் கருணை காட்ட வேண்டிப் போராடிய புத்த பெருமானின் போதனையைப் பின்பற்றுவதாகச் சொல்பவர்கள் எம்மை அமைதியாக வாழ விடவில்லை.
எம்மை மனிதர்களாகவே மதிக்கவில்லை. மனிதகுலம் முழுமையுமே தலைகுனியும் வண்ணம் ஆற்றொணாக் கொடுமைகளை எமக்கு இழைத்தார்கள். எமது அப்பாவி மக்களுக்கு எதிராக அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டார்கள். குழந்தைகள், பெண்கள் உட்படத் தமிழர் என அடையாளங் கண்ட அனைவரையும் கொன்றொழித்தார்கள். தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர். தமிழரின் சொத்துக்கள் யாவும் சூறையாடப்பட்டன. குடியேற்றங்கள் என்ற பெயரில் தமிழ் மக்களின் பாரம்பரியமான வாழ்விடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுத் திட்டமிட்ட முறையிற் சிங்களவர் குடியேற்றப்பட்டனர்.
ஒரே நாட்டில் ஒற்றுமையாக வாழ்வதற்கான எமது அமைதி முயற்சிகள் அனைத்தையும் சிங்களத் தலைமைகள் நிராகரித்தார்கள். ஒப்பந்தங்களைக் கிழித்துக் காற்றிலே பறக்க விட்டார்கள். எமது அறவழிப் போராட்டங்களை வன்முறையால் அடக்கினார்கள். போரை எம்மீது திணித்தார்கள். எம்மக்களின் அழுகுரலைக் கேட்கவும் அவலங்களைத் தீர்க்கவும் யாருமே முன்வராத நிலையில், சிங்கள அரசை எதிர்த்துப் போராடுவதைத் தவிர வேறு எந்தத் தெரிவும் எம்முன்னே இருக்கவில்லை.
நாம் ஒடுக்கப்பட்ட தமிழினத்தின் விடுதலைப் போராளிகள். எமது விடுதலைப் போராட்டத்துக்கு எமது மக்களிடமிருந்து மட்டுமே எமக்கு உதவி கிட்டியது. சிங்களப் பேரினவாதத்தின் ஆக்கிரமிப்புப்படை பாரிய படைபலத்துடனும் அளவற்ற ஆயுதபலத்துடனும் மூர்க்கத்துடன் நகர்ந்து வந்தது. அப்படையைக் குறைந்த அளவிலான படைவலுவோடு நாம் எதிர்கொள்ள வேண்டி வந்தபோது அதற்கேற்ற வகையிலேயே எமது போர்க்கள உத்திகளை வகுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
எதிரியிடம் இல்லாத புதியதொரு பலத்துடன் போர்முனைக்குச் செல்லும் படையணியே போர்க்களத்தை வெற்றி கொள்ள முடியும். சாவுக்கு அஞ்சாத வீரமறவர்களின் மனத்துணிவும் அர்ப்பணிப்புமே எமது எதிரியிடம் இல்லாத பெரும்பலமாக எம்மிடம் இருந்தது. ஒடுக்கப்பட்ட எமதினத்தின் பலமானதொரு ஆயுதமாகவே தற்கொடைப் போராளிகள் உருவாக்கம் பெற்றார்கள். அவர்கள் எதிரியிடமிருந்து எமது மண்ணையும் மக்களையும் காப்பாற்றும் எமதினத்தின் தற்காப்புக் கேடயங்களாகவே தம்மை உருவாக்கிக் கொண்டார்கள். அவர்களின் போராட்ட வடிவத்தை எதிர்கொள்ளும் திராணியற்ற சிறிலங்கா அரசானது, பயங்கரவாதத்துக்கு எதிராக மேற்குலகம் தொடுத்திருந்த போரிற்தானும் ஓடிச்சென்று அணிசேர்ந்து கொண்டு, உலகத்தின் கண்களுக்கு நம்மைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்தது.
நாம் சிறிலங்காவின் அரச பயங்கரவாதத்துக்கு எதிராகவே நீண்ட காலமாகப் போராடுகிறோம். நாம் பயங்கரவாதிகள் அல்லர். நாம் யாருக்கும் அச்சுறுத்தல் விடுப்பவர்களோ யாருக்கும் எதிரானவர்களோ அல்லர். நாம் நமது இனத்தின் விடுதலைக்காக மட்டுமே போராடுகிறோம். தமிழீழம் விடுதலை அடைந்து சுதந்திர நாடாகி உலக அரங்கிற் சிறிலங்காவுடனும் உலகநாடுகள் அனைத்துடனும் கைகோர்த்து நிற்கவே விரும்புகிறது.
எமது மக்களும் சுதந்திரத் தமிழீழநாட்டின் மக்களாக இந்தத் தீவிற் சிங்களவர்களோடும் ஏனைய இனத்தவரோடும் உலகமக்கள் அனைவரோடும் நட்புடன் ஒன்றுகூடி அமைதியாக வாழ்வதையே விரும்புகிறார்கள். இதை இந்தத் தருணத்தில் நாம் உலகத்துக்குத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எம்மினிய மக்களே, முள்ளிவாய்க்காலின் பின்னே மூன்றரை ஆண்டுகள் கழிந்தோடி விட்டன. பாரம்பரியமாகத் தொன்றுதொட்டு நாம் வாழ்ந்த வாழ்விடங்களை, எமது மரபுவழித் தாயக நிலங்களை எம்மக்களிடமிருந்து பறித்து, அவற்றைக் கையகப்படுத்தி, வரலாற்றையே மாற்றும் முயற்சியிற் சிங்கள அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. சிங்களக் குடியேற்றங்களும், படைமுகாம்களும், அரசமரத்தைக் காணுமிடமெங்கும் விகாரைகளும், சிங்கள இராணுவத்தினருக்குத் தமிழ்ப் பிரதேசங்களிற் குடியிருப்புக்களும் என நமது அன்னைமண் அன்றாடம் பறிபோய்க் கொண்டிருக்கிறது.
பொருளாதார வகையில் நன்மைகிட்டக் கூடிய நம்மக்களின் பாரம்பரியமான வாழ்விடங்களை ஆக்கிரமித்து விட்டு, மீள்குடியேற்றம் என்ற பெயரில் அவர்களைக் காட்டுப் பகுதிகளிலும் வனாந்தரங்களிலும் சிங்களஅரசு குடியேற்றி வருகிறது. இது தவிரவும் தமிழீழப் பகுதியெங்கணும் ஆங்காங்கே பரவலாக எமது மக்களின் பல ஏக்கர் கணக்கிலான வாழ்விடங்களை ஆக்கிரமித்துப் படைமுகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழீழப் பகுதி முழுமையுமே ஒரு திறந்தவெளிச் சிறையாக மாற்றப்பட்டிருக்கிறது. இலட்சக்கணக்கான சிங்களப்படையினர் அங்கே காவலுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
அனைத்துத் தமிழ்மக்களும் படையினரின் முழுமையான கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டுள்ளனர். படையினரின் பிரசன்னத்தைக் குறைத்துக் காட்டுவதற்காகவும், புலனாய்வு நோக்கங் கருதியும் தமிழீழப் பகுதிகளிலுள்ள பெரும்பாலான படையினர் தற்போது சீருடை தரிக்காமற் சாதாரண உடையிலேயே நடமாடுகின்றனர். இவை அனைத்துக்கும் மேலாக நிர்வாக அலகுகளை மாற்றித் தமிழ்ப் பிரதேசங்களையே இல்லாதாக்கும் திட்டங்களும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
தமிழீழப் பகுதியைச் சூழ்ந்துள்ள கடல்மடியிற் தொழில் செய்வதையே வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த எமது உறவுகளின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. அவ்விடங்களில் எல்லாம் சிங்களவர்கள் மட்டுமே மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழீழப் பகுதிகளின் பெரும்பாலான வர்த்தக முயற்சிகள் யாவும் சிங்களவர்களாற் கைப்பற்றப்பட்டுள்ளன.
இனவழிப்பின் ஓர் அங்கமாகச் சிங்கள இராணுவத்தினரும் சிங்களத் தொழிலாளர்களும் தமிழ்ப் பெண்களைத் திட்டமிட்டுத் திருமணம் செய்கின்றனர். பதின்வயதுத் தமிழ்ச் சிறுவர்களைப் போதைப்பாவனை மற்றும் பாலியல்ஒழுக்கக் கேடுகளை நோக்கிச் சிங்களப் படையினர் வழிநடத்துகின்றனர். இளைஞர்களை இலக்கு வைத்து அவர்களைப் பண்பாட்டுச் சீரழிவுகளுக்கு உட்படுத்தித் தமிழ் இளையோரிடமுள்ள நாட்டுப்பற்றை இல்லாதொழிக்கப் பேரினவாத அரசு திட்டமிட்டுச் செயலாற்றுகிறது.
இவையனைத்தும் சிங்கள அரசாற் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையிற் சர்வதேச சமுகமோ எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும் பாராமுகமாக, வாய்மூடி மௌனமாக இருக்கின்றது. விடுதலை வேண்டிப் போராடிய எங்களுக்குப் பயங்கரவாத முத்திரை குத்தினார்கள். சிங்கள அரசுக்குத் துணையாகத் தமது நாடுகளில் எமதமைப்புக்குத் தடை விதித்தார்கள்.  சிங்கள அரசுக்கு ஆயுதங்களையும் பில்லியன் கணக்கிற் கடனுதவிகளையும் வழங்கி எம்மனைவரையும் கையறு நிலைக்குத் தள்ளினார்கள்.
இவ்வாறாக எமது விடுதலைப் போராட்டத்தைப் பின்னடைய வைத்த உலகநாடுகள், இந்த மூன்றரை ஆண்டுகளில் அவல நிலையிலுள்ள எமது மக்களின் உரிமைகளை மீட்டுக் கொடுக்கவோ அவர்கள் தத்தமது வாழ்விடங்களில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவோ எந்த முயற்சியையும் செய்யவில்லை. மனித உரிமைகள் பற்றிப் பேசுவோரெல்லாம் சிங்கள அரச பயங்கரவாதத்தின் கோரமுகத்தைத் தோலுரித்துக் காட்டிய பிறகும் பாதிக்கப்பட்ட எம்மக்களுக்கு இந்த உலகத்திடமிருந்து இன்னும் நீதி கிடைக்கவில்லை.
தன்னாட்சி உரிமை கோரிப் பல்லாண்டுகளாகப் போராடிவரும் எமது மக்கள் அதற்குக் குறைவான எந்தத் தீர்வையும்ஏற்கத் தயாராக இல்லை. தாம் இன்னலிற் சிக்கியுள்ள இன்றைய நிலையைப் பயன்படுத்தி அரைகுறைத் தீர்வொன்றை யாராவது தமது தலையிற் திணிப்பதையும் அவர்கள் விரும்பவில்லை. தங்களுக்கான தீர்வைத் தாங்களே தீர்மானிக்க வேண்டும் என்றே அவர்கள் விரும்புகிறார்கள். தாங்கள் விரும்பும் நீதியான ஒரு தீர்வையே இந்த உலகம் தமக்குத் தரவேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.
உலகம் எமது மக்களின் நியாயமான விருப்புக்களையும் அவர்களின் கனத்த மௌனத்தின் பின்னுள்ள அர்த்தங்களையும் சரியாகப் புரிந்து கொள்ள முன்வர வேண்டும். தமிழ் மக்கள் படும் துயரங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவர்களுக்கு நியாயமான தீர்வை வழங்க வேண்டும். தொடர்ந்தும் அவர்களுக்கான நீதி மறுக்கப்படுமேயானால், அவர்கள் தங்கள் மௌனத்தைக் கலைத்துத் தங்களுடைய வழியில் விடுதலையை வென்றெடுக்க முற்படுவார்கள். அதன் பின்னர் அவர்களது நியாயங்களைப் புரிந்து கொண்டு அம்மக்களே தமது வழியில், விடுதலையை வென்றெடுக்க அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டிய தார்மீகக் கடமையும் பொறுப்பும் உலகநாடுகளுக்கு உள்ளது.
இவ்விடத்தில், எமது மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளை உலகம் அறியச் செய்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் ஊடகங்களுக்கும் எமது விடுதலைக்காகக் குரல் கொடுத்துவரும் வெளிநாட்டவர் அனைவருக்கும் எமது நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்பார்ந்த எமது நண்பர்களே, இளையோரே, சிங்களப் பேரினவாத அரசு நம்மீது ஏவிவிட்டுள்ள சதிச் செயல்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு நாம் வெறுமனே கைகட்டிக் கொண்டிருக்க முடியாது. தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க நாம் நமது ஆற்றலைப் பெருக்க வேண்டும். தமிழரின் தாயகத்தைப் பறித்தெடுத்துத் தமது நாட்டை முன்னேற்றி விடலாம் என்று சிங்களப் பேரினவாதிகள் மனப்பால் குடிக்கின்றனர்.
தமிழர்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்தித் தமது அடிவருடிகளாக்கி, அவர்களை அடக்கி ஆண்டு விடலாம் என்று கனவு காணும் சிங்கள அரசியற் தலைமைகளுக்குத் தமிழர்கள் தமது இலட்சிய உறுதியை உணர்த்த வேண்டும். அதற்குத் தமிழ் மக்களாகிய நாங்கள் அனைவரும் நம்முன்னே உள்ள அனைத்து வழிகளிலும் தளராது தொடர்ந்தும் போராட வேண்டும். உலகம் எமது குரலுக்குச் செவிசாய்த்து எமது விடுதலைக்கு உதவும் காலம் விரைவில் வரும். அதுநாள் வரை நாம் எமது போராட்டத்தின் நியாயங்களை உலகத்தின் மனசாட்சியை உலுப்பும் வண்ணம் ஓயாது உரத்துக் கூற வேண்டும்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புக்களையும் துயரங்களையும் எண்ணி எம்மால் முடியுமா என்று நாம் கலங்க வேண்டியதில்லை. துணிவும் தன்னம்பிக்கையும் அறிவுத்திறனும் இருந்தால் எப்படியான நிலைமையையும் எமக்குச் சாதகமாக மாற்றி எம்மாற் போராட முடியும். அதனையே அடக்குமுறையிலிருந்து விடுபடப் போராடி விடுதலை பெற்ற நாடுகளின் போராட்ட வரலாறுகள் நம்பிக்கை தரும் முன்னுதாரணங்களாகி நம்முன்னே உணர்த்தி நிற்கின்றன.
எம் உயிரினும் மேலான உறவுகளே, தனது கைக்கூலிகளான தமிழர்கள் சிலரை வைத்துச் சிங்கள அரசாற் திட்டமிட்டு நடாத்தப்படும் சதிவலைகளுக்குள் வீழ்ந்துவிடாமல் விழிப்புடன் இருந்து எமது இலக்கை வென்றெடுக்க எமக்கு என்றும் உறுதுணையாக இருக்கவேண்டுகிறோம்.
காலம் இடும் கட்டளையை ஏற்று, மாவீரர்கள் நடந்த வழியிற் தொடர்ந்து போராடுவதன் மூலமே நாம் நமது விடுதலையை வென்றெடுக்க வேண்டியவர்களாக உள்ளோம்.
மாவீரர் நாளாகிய இன்று எமது மக்களையும் மாவீரர்களையும் மனங்களில் நிறுத்தி எமது தேசியத்தலைவரின் வழிகாட்டலின்படி எமது விடுதலையை வென்றெடுக்கும் வரை அனைவரும் சேர்ந்து அயர்வின்றி உழைப்போம், தளராது போராடுவோம் என்று உறுதி கூறுவோம்.
'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

தமிழீழ தேசிய மாவீரர் நாள் அறிக்கை : விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் (ஒலி வடிவம்)
[ செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர் 2012, 02:28.20 PM GMT ]
பெயருக்காகவோ புகழுக்காகவோ அல்லது போர்மீது கொண்ட பற்றுதலாலோ எமது மாவீரர்கள் களமாடவில்லை என இன்றைய மாவீரர் நாள் செய்தியில் விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் அறிக்கை விடுத்துள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தினால் வாசிக்கப்பட்ட மாவீரர் நாள் அறிக்கையினை செவிமெடுக்க....


தமிழீழ மாவீரர் நாள் - 2012
தலைமைச் செயலகம்,                                                                                
தமிழீழ விடுதலைப் புலிகள்,
த/செ/ஊ/அ/07/12
தமிழீழம்.
27/11/ 2012.         
 அன்பிற்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,
இன்று மாவீரர் நாள்.
எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்தியாய் விளங்கிய நாயகர்களைப் பூசிக்கும் புனிதநாள். எம்மண்ணை ஆக்கிரமித்து எமது மக்களைக் கொன்றொழிக்கப் படையெடுத்த எதிரிப்படைகளை எதிர்த்துக் களமாடி, தங்கள் உயிரையும் உடலையும் எமக்காய் ஈந்த உத்தமர்களின் நினைவுநாள்.
உலக வரலாறு கண்டிராத பல தியாகங்களையும் சாதனைகளையும் தமிழீழ விடுதலைப் போராட்டம் கண்டிருக்கிறதென்றால் அந்த அற்புதங்களை நிகழ்த்தியவர்கள் எமது மாவீரர்களே.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வீரத்தின் உச்சத்துக்குக் கொண்டு சென்ற பெருமை இந்த வீரப் புதல்வர்களையே சாரும். அவர்களது அர்ப்பணிப்பாலேயே எமது போராட்டம் உலக அரங்கில் கவனயீர்ப்பைப் பெற்றுள்ளது.
அந்நிய வல்லாதிக்கச் சக்திகளின் துணையோடு எமது மண்மீது பெரும் படையெடுப்பைச் செய்த எதிரியின் முன்னால் மனவலிமையோடு போர்புரிந்த இந்த மாவீரச் செல்வங்களை நெஞ்சில் நிறுத்தி, நெய்விளக்கேற்றி வழிபடும் இத்திருநாள், தமிழர்களின் எழுச்சி நாளாகும்.
பெயருக்காகவோ புகழுக்காகவோ அல்லது போர்மீது கொண்ட பற்றுதலாலோ எமது மாவீரர்கள் களமாடவில்லை. எமது மொழியின், இனத்தின், பண்பாட்டு விழுமியங்களின் மீதான அடக்குமுறைகளுக்கெதிராகவே இவர்கள் போராடப் புறப்பட்டார்கள். எம் மண்மீதும் மக்கள்மீதும் கட்டவிழ்த்து விடப்பட்ட சிங்கள இனவெறி அடக்குமுறைக்கெதிராகவே ஆயுதமேந்திக் களமாடினார்கள்.
இந்த மாவீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களும் அவர்களது குடும்பத்தினரும் என்றும் பெருமைக்குரியவர்களே. எமது தேசம் தலைவணங்கி மதிப்பளிக்க வேண்டியவர்களாகவே எமது தேசப்புதல்வர்களின் குடும்பத்தினர் உள்ளார்கள்.
நீதியின் அடிப்படையில் தொடங்கப்பட்டு வளர்ச்சிபெற்ற எமது போராட்டம் ஆயுதவழியில் பரிணமித்தது காலத்தின் கட்டாயத்தாலாகும். வேறு தெரிவுகளற்ற நிலையிலேயே இறுதி வழிமுறையாக ஆயுதவழியை எமது மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். உலகில் நடைபெற்ற, நடந்துகொண்டிருக்கும் அனைத்து ஆயுதவழி விடுதலைப் போராட்டங்களுக்குமுள்ள நியாயத்தன்மை எமது போராட்டத்துக்குமுண்டு.
தர்மத்தின் துணையோடும் எமது மக்களின் பேராதரவோடும் மாவீரர்களின் அதியுட்ச அர்ப்பணிப்போடும் வீறுநடைபோட்டு வளர்ச்சியடைந்து வந்த எமது விடுதலைப் போராட்டம் உலக அரங்கில் முதன்மைக் கவனத்தை ஈர்த்தது. எமது தாயகப்பரப்பின் கணிசமான நிலங்களை மீட்டு மிகப்பலம் பொருந்திய நிலையில் பன்னாட்டுச் சமூகத்தின் அழைப்பையேற்று பேச்சுவார்த்தைக்குச் சென்றோம். நோர்வேயின் அனுசரணையுடன் நடைபெற்ற பேச்சுக்களில் எந்தவித முன்னேற்றமுமில்லையென்ற நிலையிலும்கூட அமைதிவழியில் தீர்வையெட்டும் எமது அவாவை வெளிப்படுத்தி பொறுமைகாத்து வந்தோம்.
நீண்ட இழுத்தடிப்புக்களின் மத்தியில், எமது இயக்கத்தையும் போராட்டத்தையும் பலவீனப்படுத்த எடுத்த முயற்சிகளுக்கு மத்தியில், தமிழருக்கு எதிரான போருக்கு சிறிலங்கா அரசு தன்னைத் தயார்ப்படுத்தி வந்த நிலையில் நாம் தொடர்ந்தும் சகிப்புத்தன்மையோடு அமைதியாகவிருந்தோம். ஆனால் எமது பொறுமைக்கும் விட்டுக்கொடுப்புக்கும் பலனின்றி எமது மக்கள்மேல் கொடிய போர் தொடுக்கப்பட்டது.
வல்லாதிக்க சக்திகளின் துணையுடன் எமது மண்ணை வல்வளைத்து, மக்களைத் துரத்தியடித்து தொடுக்கப்பட்ட போரில் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கிலென்று எமது மக்களின் உயிர்கள் கோரமாகப் பலிகொள்ளப்பட்டுக் கொண்டிருந்த வேளையிலும் நாம் தற்காப்புப் போர்முறையை மட்டும் கையாண்டுகொண்டு போர்நிறுத்தத்தைக் கோரிக்கொண்டிருந்தோம். புலம்பெயர்ந்து வாழும் எமது தமிழ்மக்கள் ஒட்டுமொத்தமாக உலகின் முற்றத்திலிறங்கி எமது மக்களைக் காக்க வேண்டி அர்ப்பணிப்பான போராட்டங்களை நடாத்திக் கொண்டிருந்தார்கள்.
ஆனாலும் பல்வேறுபட்ட சக்திகளின் உறுதுணையுடன் முன்னெடுக்கப்பட்ட எமது மக்கள் மீதான கொடியபோர் முள்ளிவாய்க்கால் பேரழிவையே எமது மக்களுக்குத் தந்தது. உலகமே பார்த்திருக்க மிகப்பெரிய மானுட அழிவை எமது மக்கள் சந்தித்தனர்.
போர் முடிவடைந்துவிட்டதாகச் சொல்லப்படும் இந்த மூன்றரை ஆண்டுகளில் தமிழ்மக்களின் நிலை மிகமிகப் பாரதூரமானளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழரின் தாயகக் கோட்பாட்டைச் சிதைக்கும்வகையில் பல்வேறு காய்நகர்த்தல்களை சிங்கள தேசம் செய்துகொண்டிருக்கின்றது. தமிழர்களைப் பல்வேறு வழிகளில் அவர்களின் பூர்வீக வதிவிடங்களிலிருந்து வெளியேற்றி வரும் அதேவேளை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை அவ்விடங்களில் நிறுவி வருகின்றது. பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட சிங்கள ஆக்கிரமிப்புக்கள் எமது நிலங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழரின் வளங்கள் சுரண்டப்படுகின்றன. குறிப்பாக தென்தமிழீழத்தில் திட்டமிட்ட வகையில் தமிழ்மக்களின் இனவிகிதாசாரம் குறைக்கப்பட்டு வருகின்றது. இனிவரும் தேர்தல்களில் தமிழர்களுக்குரிய அரசியற் பிரதிநிதித்துவம் அற்றுப்போகும் நிலையே எமது தென்தமிழீழத்தில் காணப்படுகின்றது.
தாயகக் கோட்பாட்டைச் சிதைக்கும் உச்சகட்டமாக கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடாத்தியுள்ளது சிங்கள அரசு. ‘வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழரின் தாயகம்’ என்ற தமிழ்மக்களின் கோட்பாட்டை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், தனித் தேசத்துக்கு உரித்துடைய எமது அரசியல் உரிமையை மாகாணசபைக்குக் கீழிறக்கி அரைகுறைவழியில் ஒரு தீர்வைத் திணிப்பதுமே சிங்கள தேசத்தின் கனவாக கடந்த காலங்களில் இருந்து வந்துள்ளது.
போர் முடிந்ததாகக் கூறி மூன்றரை ஆண்டுகளான பின்பும்கூட இன்னமும் எமது மக்கள் சிறிலங்காப் படையினரால் சூழப்பட்டுள்ளார்கள். தொடர்ச்சியான இராணுவச் சூழலிற்குள்ளேயே எமது மக்கள் தமது அன்றாட வாழ்வைக் கழிக்கின்றார்கள். மக்களுக்கான சிவில் நிர்வாகம் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளது. சிறிலங்காப் படையினரின் அல்லது அவர்களோடு சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்களின் தலையீடுகளின்றி சிவில் நிர்வாகம் இயங்கமுடியாத நிலையே இன்றும் காணப்படுகின்றது.
எனினும் இந்த அடக்குமுறைக்குள்ளும் கொடுமைகளுக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கும்போதும் எமது மக்களின் தாயகவிடுதலைக்கான தாகம் இன்னும் தணியவில்லை. உலக வரலாற்றின் மிகப்பெரும் மனித அவலத்தைச் சுமந்தபடி இருப்புக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு சமூகமாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள எமது மக்கள் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தமது விடுதலைத் தாகத்தை வெளிப்படுத்தியபடியேதான் இருக்கிறார்கள். தமது நிலப்பறிப்பை, தம்மீதான அடக்குமுறையை, சிறைக்கைதிகள் மீதான கொலைவெறித் தாக்குதல்களைக் கண்டித்து தமது போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்.
அன்பார்ந்த புலம்பெயர் உறவுகளே,
தீவிர அடக்குமுறைக்குள்ளாகியிருக்கும் தாயகத் தமிழர்களின் செயற்பாடுகளும் போராட்ட முன்னெடுப்புக்களும் மட்டுப்படுத்தப்பட்டவை என்பதை நாமனைவரும் அறிவோம். இந்நிலையில் உலக அரங்கில் காத்திரமாகப் போராட வேண்டிய பொறுப்பு உங்களையே சார்ந்துள்ளது. தாயகத்தில் வாழும் எமது மக்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் எமது விடுதலை வேட்கையை உலகெங்கும் பறைசாற்றி அதற்குரிய ஆதரவுகளைத் திரட்டும் வேலைத்திட்டமும் புலம்பெயர்ந்த எமது மக்களிடமே உள்ளது. குறிப்பாக இளைய சமுதாயம் இச்செயற்பாட்டில் முன்னின்று உழைக்க வேண்டும்.
அனைத்து இன மக்களிடமும் எமது போராட்டத்தைக் கொண்டு சென்று அவர்களின் ஆதரவைத் திரட்டுவதோடு அரசமட்டங்களிலும் நிறுவனங்களிடத்திலும் தீவிரமாகப் பணியாற்ற வேண்டிய தேவையுள்ளது. பல்வேறு தேவைகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் மக்கள் அமைப்புக்கள் எமது இறுதி இலக்கில் ஒன்றுபட்ட கருத்தோடு பணியாற்றுவதோடு, எமது மக்கள் ஒன்றுதிரண்ட சக்தியாகப் பணியாற்ற வேண்டியது அவசியமாகின்றது. பல்வேறுபட்டளவில் திட்டமிடப்படும் போராட்டங்கள், கவனயீர்ப்பு நிகழ்வுகளில் கலந்துகொண்டு எமக்குரிய உரிமைக்குரலை வலுவடையச் செய்ய வேண்டும்.
தாயக மக்களின் பாதுகாப்பு மட்டுமன்றி அவர்களின் வாழ்வியல் மேம்பாடும் புலம்பெயர்ந்த தமிழர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. பல்வேறு வழிகளிலும் தாயகமக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான செயற்பாடுகள் நடைபெற்றே வருகின்றன. அவற்றைத் தொடர்ந்தும் மேம்படுத்திச் செய்துகொண்டிருக்க வேண்டுமென்பதே எமது வேண்டுகோளாகும்.
அன்பார்ந்த தமிழக உறவுகளே,
எமது போராட்டம் முளைவிட்ட காலத்திலிருந்தே எமது தாங்கு சக்தியாகத் திகழ்ந்து வந்தது தமிழகம். அன்று மட்டுமன்றி என்றுமே எமக்குரிய பக்கபலமாகத் திகழவேண்டிய பொறுப்பு தமிழகத்துக்கே உண்டு. உள்நாட்டு அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் ஈழப் போராட்டத்தின்பால் நீங்கள் காட்டிக்கொண்டிருக்கும் கரிசனை அளப்பரியது.
எமது தாயக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருக்கும் நிலையில் எமது தாயக மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டவல்ல அண்மையில் இருப்பவர்கள் நீங்கள்தான். எமது மக்கள் அபயக்குரல் எழுப்புவதும் முதலில் உங்களிடம்தான். எமது மக்களின் பாதுகாப்பு பெருமளவில் உங்களையே சார்ந்துள்ளது. கடந்த காலங்களைப் போலவே தொடர்ந்தும் எமது மக்களுக்கான கேடயமாக விளங்குவீர்கள் என்ற நம்பிக்கை எமது மக்களுக்குண்டு.
இன்றைய நிலையில் தமிழகத்தைத் தாண்டி எமது ஈழப்போராட்டத்தின் நியாயத்தையும் அரசியல் வேட்கையையும் இந்தியப் பிராந்தியமெங்கும் பரப்ப வேண்டிய தேவை மிக அவசியமாகவும் அவசரமாகவும் உள்ள பணியாகும். மிகச் சிலர் இப்பணியில் ஈடுபட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனாலும் ஒட்டுமொத்த ஈழ ஆதரவு அமைப்புக்களும் தலைவர்களும் இக்குறிக்கோளோடு தீவிரமாகச் செயற்பட வேண்டுமென்பதே எமது அவாவாகும்.
அன்பான தமிழ்பேசும் மக்களே,
பன்னாட்டுச் சமூகத்தின் மத்தியில் எமக்கான விடுதலைப் போராட்டத்தை முழுவீச்சுடன் முன்னெடுக்க வேண்டிய காலகட்டத்தில் தமிழர்களாகிய நாம் நிற்கின்றோம். அரசுகள் தமக்குரிய பிராந்திய - பொருளாதார நலன்களின் அடிப்படையிலேயே சிந்தித்துச் செயற்படுகின்றன. எமது மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பையும் எமது மக்கள் அன்றாடம் அனுபவித்துக்கொண்டிருக்கும் துன்பங்களையும் தமது அரசியல் நலன்களுக்கே உலகநாடுகள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. சிறிலங்கா அரசு மீது அழுத்தம் கொடுத்து தமது வழிக்குக் கொண்டுவரும் ஒரு பகடைக்காயாகவே எமது மக்களின் அவலம் அரசுகளால் பயன்படுத்தப்படுகின்றது.
இன்றைய நிலையில் மனிதவுரிமை மீறல் பற்றியும் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு, அபிவிருத்தி பற்றியுமே பன்னாட்டுச் சமூகம் பேசிக்கொண்டிருக்கிறது. மாறாக எமது இனவிடுதலைக்கான போராட்டம் பற்றியோ எமது இனத்துக்கான நியாயமான அரசியல் தீர்வு பற்றியோ கரிசனையோடு அணுகும் சக்திகள் எவையுமே தென்படவில்லை. பன்னாட்டுச் சமூகத்தின் இந்தப் பாராமுகப்போக்கு எமது மக்களுக்கு ஆழ்ந்த வேதனையை அளிக்கின்றது.
சிறிலங்கா அரசால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பிலும் காலங்காலமாக தொடர்ந்துகொண்டிருக்கும் இனவழிப்புத் தொடர்பிலுங்கூட அனைத்துலகச் சமூகம் மெளனம் காப்பதையே ஓர் உத்தியாகக் கையாள்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் பாராமுகமும், பன்னாட்டு சமூகத்தின் ஒருபக்கச் சார்பான அணுகுமுறைகளும் எமது மக்களின் விடுதலைப்போராட்டத்தினை அழிக்க முயன்ற சிங்கள அரசுக்கு ஊக்கியாக அமைந்தது. எமது விடுதலைப்போராட்டத்தினை பயங்கரவாதக் கண்கொண்டு பார்த்ததன் விளைவே தமிழ் மக்களின் படுகொலைக்குக் காரணமாக அமைந்தது என்பதனை பன்னாட்டுச் சமூகம் இப்போது வெளிப்படையாகவே ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளது.
போர் நடைபெற்றபோது ஐக்கிய நாடுகளிடம் தமிழ் மக்கள் விடுத்த வேண்டுகோள்கள், எமது அமைப்புக்களின் வேண்டுகோள்கள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, சிறிலங்கா அரசாங்கத்தின் அழுத்தங்களுக்கு அடி பணிந்ததாலேயே ஆயிரக்கணக்கான எமது மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதனை ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக ஆய்வு அறிக்கை கூறுகின்றது. இந்தத் தவறினை ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலரும் அண்மையில் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த ஏற்றுக்கொள்ளலும், புரிந்துணர்ந்து கொண்டதும் எமது மக்களுக்கு நியாயத்தினையும் உரிமையினையும் பெற்றுக்கொடுக்க வழிகோல வேண்டுமே தவிர அவை தொடர்ந்தும்  கண்டிப்புக்களையும், கால அவகாசத்தினையும் வழங்கும் கருவிகளாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.
மேலும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தொடர்ந்தும் தடைசெய்யப்பட்ட அமைப்பாக வைத்திருப்பதன் மூலம் உலக அரங்கில் தமிழ்மக்களின் போராட்டம் தொடர்பில் சமநிலையற்ற தன்மையையே பன்னாட்டுச் சமூகம் பேணிவருகின்றது. எம்மீதான தடையை அகற்றி நாம் வெளிப்படையாக இயங்கி எமது அரசியற் பணிகளைச் செய்யக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் தமிழ்மக்கள் தொடர்பில் நியாயத்தன்மையோடு உலகம் அணுகுவதை உறுதிப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றோம்.
அன்பான உலகத்தமிழ் உறவுகளே,
ஐக்கிய  நாடுகள் சபையின் உள்ளக அறிக்கைகளும், பன்னாட்டு ஊடகங்களின் போர்க்குற்ற ஆதாரங்களும் நியாயமான முறையில் சிந்திக்கும் எவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கும். அவர்களின் மனச்சாட்சிகளை உறுத்தும். ஆனால் இந்த  ஆவணங்கள் உலக வல்லரசுகளின் முன்னிலையில் பெறுமதியற்றவையாகவே இன்னமும் உள்ளன. 
உண்மைகள் எப்போதும் உக்கிப்போகாது, மனிதாபிமான சிந்தனைகள் மரணித்துப்போகாது, மானிட விழுமியங்களை மதிக்கும் சமூகங்களின் மூலம் எம்மக்களுக்கு இழைக்கபப்ட்ட  அநீதிகளை முழுமையாக உலகம் ஒருநாள் ஏற்றுக்கொள்ளும். முன்றரை ஆண்டுகளாக அமைதி காத்துவந்த ஐக்கிய நாடுகள் சபை இப்போது தமது தவறை உணர்ந்ததுபோல், இனப்படுகொலைக்கு ஆதரவு கொடுத்த நாடுகளும், அமைதி காத்த நாடுகளும் எம்மக்களின் நியாயமான போராட்டத்தினை உணர்வார்கள். அதுவரை உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடவேண்டும்.
சிங்கள அரசானது ஒருபோதும் ஈழத்தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது. இதுவரை காலமும் தமிழர்களுக்கான எந்தவொரு நியாயமான தீர்வுத்திட்டத்தையும் வழங்க சிறிலங்கா அரசு முன்வரவில்லை. மாறாக, சிறிலங்காவை தனிச்சிங்கள நாடாக மாற்றும் ஒரு திட்டத்தையே நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றது.
இலங்கைத்தீவில் தமிழரும் சிங்களவரும் சேர்ந்து வாழ முடியாதென்ற நிலை முன்னெப்போதையும்விட மேலும் வலுவடைந்துள்ள இன்றைய நிலையில், தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.
அன்பான தமிழீழ மக்களே,
எமது விடுதலைப் போராட்டப் பயணத்தில் சாவுகளையும், அழிவுகளையும், இடைவிடாத துன்பங்களையும் கண்டு நாம் சோர்ந்துவிடப் போவதில்லை. இரத்தமும் சதையும் கலந்து எமது விடுதலைப் போராட்டத்தைச் செதுக்கிய மாவீரர்களின் இலட்சிய உறுதி என்றும் எம்மை வழிநடாத்தும்.
இலட்சியத்தில் ஒன்றுபட்டு அடக்குமுறைக்கெதிராகப் போராடும் மக்களை சாவுகளும் துன்பங்களும் அடக்குமுறைகளும் சோர்வடையச் செய்துவிடாது. இந்த வரலாற்று நியதிக்கமைய, தமிழினத்தின் விடுதலை வேட்கையை தமது வீரத்தாலும் அர்ப்பணிப்பாலும் பறைசாற்றிச் சென்ற அந்த வீரமறவர்களை நினைவுகூரும் இந்நாளில், தமிழீழ விடுதலையென்ற எமது சத்திய இலட்சியத்துக்காகத் தொடர்ந்தும் போராட உறுதி கொள்வோமாக.
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தினால் வெளியிடப்பட்ட 9 பக்கங்கள் அடங்கிய மாவீர அறிக்கையினை முழுமையாக வாசிக்க.....
இங்கே அழுத்தவும்

Geen opmerkingen:

Een reactie posten