தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 november 2012

கேணல் ரமேஸ் படுகொலை விவகாரம்: அமெரிக்க நீதிமன்றத்தில் மகிந்தவை விடாது துரத்தும் வழக்கு !


வத்சலாதேவி எதிர் மகிந்த ராஜபக்ச வழக்கு என வர்ணிக்கப்படும் கேணல் ரமேஸ் படுகொலையில், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை மேன்முறையீடு செய்வதற்கு அமெரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நியூயோர்க் மாநிலத்தின் தென் மாவட்டத்துக்கு உரிய ஐக்கிய அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றமானது, கேணல் ரமேசின் மனைவி வத்சலாதேவி அவர்கள், தனது மேன்முறையீட்டு வழக்கை அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றின் 2வது சுற்றில் நடாத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் வழக்கிற்கான செலவு எதைனையும் அவர் கொடுக்கத் தேவையில்லை எனவும் இந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரும், சட்டவாளருமாகிய வி.உருத்திரகுமாரன் அவர்கள் மனுதாராரின் சார்பில் இந்த வழக்கினை நடாத்துகின்றார்.
இராஜீகரீதியிலான சிறப்புரிமை பிரகாரம், ஓரு நாட்டின் அரசுத் தலைவருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றங்களில் விசாரிப்பதற்கெதிராக விலக்கினை சுட்டிக்காட்டும் பரிந்துரையினை, அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இவ்வழக்கு தொடர்பில் தனது நிலைப்பாட்டினை சமர்பித்திருந்த நிலையில், நியூயோர்க் மாவட்ட நீதிபதி றயோமி றீஸ் பூசுவர்ட் அவர்கள், கடந்த செப்ரெம்பர் மாதத்தில் வழக்கினை தள்ளுபடி செய்திருந்தார்.
இந்நிலையிலேயே, தற்போது நியூயோர்க் - ஐக்கிய அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றமானது, குறித்த வழக்கினை மேன்முறையீட்டு நீதிமன்றின் 2வது சுற்றில் நடாத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
சித்திரவதை, கொடுமை, மானிடத்துக்கு எதிரான குற்றச் செயல்கள் என்பவற்றை இழைத்தமைக்காகவும், வேண்டுமென்றே உளரீதியான அவலங்களையும் ஏற்படுத்தியமைக்காகவும் தொடுக்கப்பட்டுள்ள இந்த வழக்கில், வெளிநாட்டவர்க்கான குற்றங்கள் சட்ட விதிகளுக்கமையவும், சித்திரவதையினால் பாதிக்கப்படுபவர்களைப் பாதுகாக்கும் சட்டம், குடியுரிமை அரசியல் உரிமை பற்றிய அனைத்துலக உடன்படிக்கை, ஆயுத போராட்டங்களின் போது பின்பற்றப்பட வேண்டிய வழக்கிலுள்ள அனைத்துலக சட்டங்களுக்கு முரணாகவும் இழைக்கப்பட்ட இந்தக் குற்றங்களுக்காகவும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்விற்கு எதிராக இந்த வழக்கைத் தொடுக்கப்பட்டுள்ளது.
(1)அரசுத் தலைவருக்கு விதிவிலக்கு அளிப்பதற்குரிய சட்டவாக்க அதிகாரம் நிர்வாகத் துறைக்கு உள்ளதா?
(2)நீதித் துறைக்குரிய அதிகாரத்தை நிர்வாகத் துறைக்குக் கையளிப்பது அதிகாரப் பிரிவு எனும் கோட்பாட்டை மீறுவதாகாதா?
(3)அனைத்துலக மட்டத்தில் இடம் பெறும் பாரிய குற்றங்களான இன அழிப்பு , மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் என்பன அரசுத் தலைவருக்கான பாதுகாப்பு எனும் திரையைக் கிழித்தெறிய மாட்டாதா?
ஆகிய வாதங்கள் மனுதாரர் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.
'நீதித் துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய வாதங்கள் மனுதாராரின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளன' என மாவட்ட நீதிமன்றம் கருத்து வெளியிட்டுள்ளது.
இதேவேளை அரசுத் தலைவராக உள்ளவர்களுக்குக் கூட விதிவிலக்கு வழங்கக் கூடாது எனும் புதியதோர் நீதி முறைமை தோன்றி வருவது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும் எனவும் நீதிமன்றம் தனது கருத்தில் தெரிவித்துள்ளது.

http://news.lankasri.com/show-RUmqzBQUNUkw6.html

Geen opmerkingen:

Een reactie posten