ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வுக் கூட்டத்தில் இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள வெற்று உறுதிமொழிகளை ஐநாவின் உறுப்பு நாடுகள் நம்புவதை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் அரசாங்கம் நாட்டில் முன்னெடுத்துள்ளதாக மனித உரிமைகள் பேரவையில் காட்டியுள்ள பல விடயங்களுக்கும் உண்மையில் இலங்கையில் நிலவும் களநிலைமைகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை தொடர்பான நிபுணர் யொலாண்டா பொஸ்டர் சுட்டிக்காட்டினார்.
திருகோணமலையில் நடந்த ஐந்து மாணவர்களின் படுகொலைகள், ஏ.சி.எஃப் நிறுவனத்தின் தன்னார்வத் தொண்டர்கள் மூதூரில் கொல்லப்பட்டமை உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பதை மனித உரிமை அமைப்புகள் ஐநாவின் உறுப்பு நாடுகளுக்கு நினைவூட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் இலங்கையில் நம்பிக்கைத் தரக்கூடிய எந்தவொரு விசாரணை பொறிமுறையும் கிடையாது என்றும் அவர் கூறினார்.
இலங்கை அரசு அதன் சொந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைக் கூட நிறைவேற்றுவதற்கு தவறிவருவதாக சுட்டிக்காட்டிய சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை தொடர்பான நிபுணர், இலங்கையில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் தெரிவித்தார்.
இலங்கையில் நீதித்துறைக்கூட பாதுகாப்புடன் இல்லை என்பதையே அண்மைக்காலமாக அங்கு நடந்துவரும் சம்பவங்கள் காட்டுவதாக கூறிய அவர், அப்படியென்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எந்தளவுக்கு பாதுகாப்பு இருக்கும் என்றும் கேள்வி எழுப்பினார்.
தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் விபரங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ளக் கூடிய விதத்தில் பெயர் பதிவு நடைமுறையொன்றை பேணுவதாக இலங்கை அரசு மனித உரிமைகள் கவுன்சிலின் மீளாய்வில் கூறியிருந்தாலும், உண்மையில் பல குடும்பங்கள் இன்னும் அங்கு தங்கள் உறவுகளைத் தேடிக்கொண்டிருப்பதாகவும் அப்படியொரு பதிவு பொறிமுறையே அங்கு இல்லை என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை கூறுகிறது.
மீள்குடியேற்றம் தொடர்பிலும் அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கூறுகின்ற நிலையில், இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கக்கூடிய நடைமுறை எதுவும் இன்னும் இல்லை என்பதற்கு தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் சபையின் இலங்கை தொடர்பான நிபுணர் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், இறுதிக்கட்டப் போரின்போது இலங்கையில் நடந்திருக்கின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் பற்றி ஆராய இராணுவ நீதிமன்றம் அமைத்துள்ளதாக அரசு கூறுவது பொருத்தமான நடவடிக்கை இல்லை என்றும், இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டை அதே இராணுவமே விசாரிப்பது எந்தளவுக்கு சரியான நடவடிக்கை என்று தாம் ஐநாவின் உறுப்பினர்களிடம் கேள்வி எழுப்பியிருப்பதாகவும் யொலாண்டா பொஸ்டர் கூறினார்.
ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் யூபிஆர் என்ற உலக நாடுகளின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பிலான மீளாய்வு கூட்டத்தில் சர்வதேச மன்னிப்புச் சபை, ஐசிஜே என்ற சர்வதேச ஜூரிகள் ஆணையம் மற்றும் ஏசிஎப் உள்ளிட்ட பல சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மனித உரிமை அமைப்புகளும் இலங்கை தொடர்பான விவகாரத்தில் முக்கிய பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten