பல்கலை மாணவர்கள் மீதான தாக்குதல்: போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தது த.தே.ம.மு!!
பல்கலை மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து எதிர்வரும் 4.12.2012 செவ்வாய்க்கிழமை கண்டனப் போராட்டம் ஒன்றினை நடாத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளதாக பரிஸ்தமிழ்.கொம்முக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் யாழ் பல்கலைக்கழக வளாகத்தின் முன் அமைதியான முறையில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலை மாணவர்கள் மீது சிறீலங்கா இராணுவத்தினரும் சிறீலங்கா காவற்துறையினரும் இணைந்து கண்மூடித்தனமான தாக்குதலை நடாத்தியுள்ளனர். அத்தாக்குதலில் 10ற்கு மேற்பட்ட மாணவர்களும் மாணவிகளும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாவீரர் நாளான நேற்று முன்தினம் பல்கலை விடுதியில் மாணவர்கள் சுடர் ஏற்றக் கூடும் என்ற காரணத்தைக் காட்டி அவர்களை மிரட்டும் செயலில் இராணுவம், பொலிஸ் ஈடுபட்டனர். யாழ் பல்கலைக்கழகத்தின் ஆண்கள் விடுதிக்குள்ளும் பெண்கள் விடுதிக்குள்ளும் கதவுகளை உடைத்து பலாத்காரமாக உள்நுழைந்த சிறிலங்கா இராணுவத்தினர் மாணவர்களதும் மாணவிகளதும் தலைகளில் துப்பாக்கிகளை வைத்துக் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து இன்று மாணவர்கள் அமைதியான முறையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்ட வேளையில் அவ்விடத்தில் குவிக்கப்பட்டிருந்த இராணுவத்தினரும் பொலீசாரும் துப்பாக்கிகளாலும் இரும்புக் கேபிள்களாலும் கட்டைகளாலும் மாணவர்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இராணுவத்தினரும் பொலீசாரும் மேற்கொண்ட இந்த தாக்குதலை தமிழத் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிப்பதுடன் இச் சம்பவத்தைக் கண்டித்து எதிர்வரும் 04-12-2012 காலை 11.00 மணி தொடக்கம் 12.00 மணிவரை யாழ் பஸ்நிலையத்திற்கு முன்பாக உள்ள சோமசுந்தரப் புலவர் சிலையருகில் கண்டனப் போராட்டம் ஒன்றினை நடாத்துவதென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளதுடன், அதில் அனைத்து தரப்பினரையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten