உலக நாடுகளுக்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை போன்ற பெரு மன்றங்களுக்கும் தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது தட்டிக்கழிப்பதற்காகத் தாமதிப்பதை ஒரு தந்திரமாகக் கடைப்பிடிக்கிறது இலங்கை என்று தெரிவித்திருக்கிறார் ஸ் ரீபன் ராப்.
ஸ் ரீபன் ராப் ஒரு அமெரிக்க வழக்குரைஞர். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதி அலுவலகத்தில் போர்க்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்கத் தூதராகப் பணியாற்றியவர்.
தனது பதவிக் காலத்தில் இலங்கைக்கு வருகை தந்து வடக்கின் பல இடங்களுக்கும் நேரில் சென்றவர். யாழ்ப்பாணத்துக்கும் வருகை தந்துள்ளார்.
அந்தப் பயணத்தில் முல்லைத்தீவுக்குச் சென்ற அவர், இறுதிப் போர் நடைபெற்ற பகுதிகள் ஒன்றிலிருந்து எடுத்த படத்துடன், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இராணுவத்தின் செல் தாக்குதலில் கொல்லப்பட்ட இடம் என்ற விளக்கமும் அமெரிக்க தூதரக ருவிற்றரில் பதிவிடப்பட்டது.
இலங்கையில் போர்க்குற்றங்களே நிகழவில்லை என்று கொழும்பு அரசு மறுத்து வந்த நிலையில், போர்க்குற்றம் என்று ஆதாரப்படுத்தக்கூடிய வகையிலான பதிவை வெளிப்படையாகச் செய்யும் அளவுக்கு இலங்கைப் போர் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து மிகவும் பரிச்சயமானவர் ராப். அவரே கொழும்பு அரசு மீது இந்தக் குற்றச்சாட்டை தெரிவித்திருக்கிறார்.
கொழும்பில் மாறி மாறி வரும் ஆட்சியாளர்கள் அனைவருமே இப்படித்தான் காலத்தை இழுத்தடித்து இழுத்தடித்து, தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வைத் தராமல் கைகழுவுகிறார்கள் என்பதைத் தமிழர்கள் மீண்டும் மீண்டும் காட்டுக் கத்தலாகக் கத்தி வருகிறார்கள்.
சர்வதேச நாடுகள் கொழும்பு அரசு தொடர்பில் மென்மைப் போக்கைக் கடைப்பிடிக்க முனையும் போதெல்லாம் கால அவகாசம் கொடுக்காதீர்கள் இவர்கள் காலத்தை இழுத்தடிப்பதற்குத்தான் இப்படிக் கேட்கிறார்கள் என்று தமிழர்கள் தரப்பிலிருந்து ஐ.நாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் உரத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அவையெல்லாம் செவிடன் காதில் சங்கு ஊதியதைப் போன்றுதான் முடிந்திருக்கின்றன.
இப்போது அமெரிக்கர் ஒருவரே அதனை ஒத்துக்கொண்டு, பட்டு உணர்ந்து தெரிவித்திருக்கிறார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 37ஆவது கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் அதையொட்டி நடைபெற்ற பக்க நிகழ்வு ஒன்றில் அவர் உரையாற்றினார்.
பெரும் கொடுமைகளுக்கு பொறுப்புக்கூறலை வழங்குவதற்கு அனைத்துலக முறைமை எவ்வாறு தோல்வி கண்டது: சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிராக நீடிக்கும் சட்டவிரோத தடுத்து வைப்பு, சித்திரவதை, பாலியல் வன்முறைகள்’’ என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். அதிலேயே கொழும்பின் தந்திரத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.
தற்போது பதவியில் இருக்கும் மைத்திரி– – ரணில் அரசு, பதவியேற்ற பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை 2 வருடங்களுக்குள் செயற்படுத்தாமல் மீண்டும் 2 வருட கால அவகாசத்தை வழங்கிய போதே தமிழர்கள் தரப்பிலிருந்து அதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.
ஆனாலும் கொழும்பைத் தொடர்ந்தும் தமது பிடிக்குள் வைத்திருப்பது என்கிற காரணத்தைச் சொல்லிக்கொண்டு கால அவகாசம் வழங்கப்பட்டது.ஆனால், எதிர்பார்த்தபடியே அந்தக் கால அவகாசத்துக்குள்ளும் எதனையும் செய்யும் நோக்கம் கொழும்புக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது.
இந்த நிலையிலேயே காலத்தைத் தாமதிப்பதை ஒரு தந்திரமாக அரசு பயன்படுத்துகிறது என்கிற உண்மையை மேற்குலகத்தவரான ராப் கூறியிருக்கிறார்.
எனவே அவர் கூறியிருப்பதைப் போன்று ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கிய நாடுகள், இலங்கையைப் பொறுப்புக்கூற வைப்பதில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
அது இல்லாமல் இலங்கையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகள் கிஞ்சித்தும் நகரமாட்டா என்பது திண்ணம்.
இனியாவது உலகம் தமிழர்களின் வழிக்கு வர வேண்டும்.
- Uthayan
http://www.tamilwin.com/world/01/176975?ref=rightsidebar-lankasrinews
Geen opmerkingen:
Een reactie posten