தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 4 maart 2018

இராணுவத்துக்கு அஞ்சும் அரசாங்கம்!


பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ விவகாரத்தில் விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல நடந்து கொண்ட இலங்கை அரசாங்கமும் இராணுவமும் இப்போது உண்மையை ஒப்புக் கொள்ளும் நிலைக்கு வந்திருக்கின்றன.
பிரித்தானியாவில் இருந்து திருப்பி அழைக்கப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ இப்போது சீனாவுக்குப் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில் பங்கெடுத்த போதும் அதிகம் பேசப்படாத பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஒரு சில நிமிட வீடியோ காட்சிகளால் அறியப்பட்ட நபராக மாறியிருந்தார்.
பெப்ரவரி 4ம் திகதி லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்த போது வெளியே புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அவர்களை நோக்கி கழுத்தை அறுத்து விடுவேன் என்பது போன்று சைகையில் எச்சரித்தார் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ.
அந்த வீடியோ காட்சி ஊடகங்களில் வெளியான பின்னர் சர்ச்சை வெடித்தது. பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகளும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களும் போர்க்கொடி உயர்த்த இலங்கை வெளிவிவகார அமைச்சு அவரைப் பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து பணி இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது.
ஆனால் அடுத்த நாளே அந்த உத்தரவை ரத்துச் செய்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அவரது அந்த முடிவுக்குச் சொல்லப்பட்ட காரணமும் உண்மையான காரணங்களும் வெவ்வேறானவை.
எத்தகைய சூழ்நிலையில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ அவ்வாறு நடந்து கொண்டார் என்று முழுமையாக அறிந்து கொள்ளாமல் அவர் மீது நடவடிக்கை எடுப்பது நியாயமற்றது. அதேவேளை விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி தரப்பில் கூறப்பட்டது.
எனினும் உண்மையான காரணம் அதுவல்ல. சில நாட்களில் நடக்கவிருந்த உள்ளூராட்சித் தேர்தலில் இந்த விவகாரத்தை மகிந்த அணி அரசியல் நலனுக்காக பயன்படுத்தி விடும் என்ற அச்சம் மைத்திரிபால சிறிசேனவுக்கு இருந்தது. அதனால் தேர்தல் முடியும் வரை இந்தச் சர்ச்சையை அமுக்கிவிட முடிவு செய்திருந்தார் அவர்.
அடுத்து பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ இடைநிறுத்தப்பட்டால் பிரித்தானியாவில் அவருக்கான இராஜதந்திர சிறப்புரிமைகள் இல்லாமல் போய்விடும். புலம்பெயர் தமிழ் மக்களை நோக்கி அச்சுறுத்தும் விதமாக பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக பிரித்தானிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த சூழலில் இராஜதந்திர பாதுகாப்பை இழந்தால் அவரை அவர்கள் கைது செய்து விடக்கூடும் என்ற அச்சமும் இருந்தது.
இதனால் தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் தொடருமாறு பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால் ஜனாதிபதியின் அந்த உத்தரவு நீண்ட நாட்களுக்கு செல்லுபடியானதாக இருக்கவில்லை.
உள்ளூராட்சித் தேர்தல்கள் முடிந்த பின்னர் கடந்த பெப்ரவரி 22ம் திகதி அவர் கொழும்புக்குத் திருப்பி அழைக்கப்பட்டார். அந்தச் செய்தி வெளியான போது இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து அதற்கோர் புதிய விளக்கம் கொடுத்திருந்தார்.
ன்ன நடந்தது என்று கேட்டறிந்து கலந்துரையாடுவதற்காகவே பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவர் மீது எந்த விசாரணையும் நடத்தப்பட மாட்டாது . அவருக்கு தண்டனையும் விதிக்கப்படாது. இது ஓர் இராஜதந்திர நடவடிக்கை என்று கூறியிருந்தார்.
கலந்துரையாடுவதற்காக என்ன நடந்தது என்று கேட்டறிந்து கொள்வதற்காகவே பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை திருப்பி அழைக்கப்பட்டார் என்று நியாயப்படுத்த முனைந்தார் அவர். ஆனால் உண்மை அதுவல்ல.
கொழும்பு திரும்பிய மறுநாள் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ வெளிவிவகார அமைச்சுக்குச் சென்றார். எனினும் வெளிவிவகார அமைச்சு செயலரை சந்திக்க அவர் அனுமதிக்கப்படவில்லை. இராணுவத் தளபதியைச் சந்தித்தால் போதும் என்று அவருக்குக் கூறப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.
எனினும் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்பதையே சைகையில் வெளிப்படுத்தினேன் என்று வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளிடம் தமது தரப்பு வாதத்தை அவர் முன்வைத்திருந்தார் என்றும் கூறப்படுகிறது.
அடுத்தகட்ட நாட்களில் இராணுவத் தளபதியையும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவினால் சந்திக்க முடியவில்லை. இராணுவத் தளபதி 24ம் திகதி வவுனியாவில் வெளியிட்டிருந்த கருத்து அதனை வெளிப்படுத்தியிருந்தது.
கொக்குவெளியில் 56வது டிவிஷன் தலைமையகத்துக்காக அமைக்கப்பட்ட 2 மாடிக் கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்ற இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது இராணுவத் தளபதி என்ற வகையில் எனது கடமை.
இன்னொரு நாட்டின் சட்டத்தின் கீழ் தனது கடமைகளை அவர் நிறைவேற்றும் போது அவரது பாதுகாப்பை நான் உறுதிப்படுத்துவது சாத்தியமில்லை. இந்த விடயங்கள் குறித்துப் பேசவே அவரை அழைத்தேன். கொழும்பு திரும்பியதும் அவரைச் சந்தித்து நான் பேசுவேன். அவர் நாட்டுக்குத் திருப்பி அழைக்கப்படவில்லை. ஏனென்றால் அவரது பதவிக்காலம் முடிந்து விட்டது. அவரது பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்துவது என்று நாங்கள் ஆராய்ந்து வருகிறோம் என்று கூறியிருந்தார்.
இதிலிருந்து பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மீண்டும் லண்டனுக்கு அனுப்பப்பட மாட்டார் என்பது உறுதியானது. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ நாடு திரும்பி இரண்டு நாட்களாகியும் இராணுவத் தளபதியைச் சந்திக்கவில்லை என்பதும் அவரைச் சந்தித்து பேசி ஒரு தீர்மானத்தை எடுக்க விரும்புகிறார் என்பதுவும் உறுதியானது.
இந்த நிலையில் கடந்த 26ம் திகதி இராணுவத் தலைமையகத்தில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை அழைத்துப் பேசிய இராணுவத் தளபதி என்ன நடந்தது என்ற விளக்கத்தைப் பெறுவதை விட அவரைச் சமாதானப் படுத்தி அனுப்புவதிலேயே குறியாக இருந்தார்.
மீண்டும் லண்டனுக்கு அனுப்பப்படும் வாய்ப்பு இல்லை என்பதை வெளிப்படுத்திய இராணுவத் தளபதி சீனாவில் ஐந்து மாத கால கற்கை நெறி ஒன்றுக்குச் சென்று வருவதற்கு வாய்ப்பளிப்பதாக கூறினார். அதனை பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
லண்டனில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குறைந்த பட்சம் ஒரு ஆண்டு, அதிக பட்சம் இரண்டு ஆண்டுகள் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்ற முடியும். அவர் கடந்த 2017 மே மாதம் தான் லண்டனில் இந்தப் பதவியை ஏற்றுக்கொண்டிருந்தார்.
எனவே இராணுவத் தளபதி வவுனியாவில் கூறியது போல பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் பதவிக்காலம் ஒன்பது மாதங்களில் முடிவடைவதற்கு ஒருபோதும் வாயப்பில்லை. பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் ஒருவரை அந்தப் பதவியில் இருந்து நீக்குவது ஓர் ஒழுக்காற்று நடவடிக்கை தான்.
ஆனால் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மீது ஒழுக்காற்று விசாரணை அல்லது துறைசார் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறுவதற்கு அரசாங்கத்துக்கோ இராணுவத் தலைமைக்கோ துணிச்சல் இல்லை!.
அது தமக்கெதிரான விமர்சனங்களை ஏற்படுத்தும் என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது. இராணுவத்தைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையும் ஒரு காரணம்.
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ லண்டனில் நடந்து கொண்ட முறை அரசாங்கத்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்றோ, அவரைக் குற்றவாளியாகக் கண்டு தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றோ கூற முடியாது.
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக அத்தகைய விசாரணை ஒன்றை முன்னெடுக்கவே அரசாங்கம் விரும்பவில்லை. இருந்தாலும் அவரை லண்டனில் இருந்து திருப்பி அழைக்க அரசாங்கம் முடிவு செய்தமைக்கு பிரித்தானிய அரசாங்கத்தின் அழுத்தமே காரணம்.
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ விவகாரம் குறித்து பிரித்தானிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். அதேவேளை பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அந்த நாட்டின் வெளிவிவகார இராஜாங்கச் செயலருக்கு கடிதங்களை எழுதினர்.
இந்தச் சூழலில் பிரித்தானியாவின் ஆசிய - பசுபிக் விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலர், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுடன் தொலைபேசியில் பேசியிருந்தார். அதன் தொடர்ச்சியாகவே பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை கொழும்புக்கு அழைக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தொடர்ந்தும் லண்டனில் பணியாற்றினால் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை தொடர வேண்டிய சூழல் பிரித்தானிய பொலிஸாருக்கு ஏற்படும். அதனால் அவரை வேண்டப்படாத நபராக அறிவித்து அவரது இராஜதந்திர சிறப்புரிமைகளை ரத்துச் செய்து விடக்கூடிய சூழல் இருந்தது.
அத்தகையதொரு நிலை ஏற்பட்டால் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல்கள் ஏற்படுவதுடன் இலங்கை அரசாங்கமும் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே தான் பிரித்தானியாவின் இராஜதந்திர அழுத்தங்களுக்கு கொழும்பு பணிய வேண்டிய நிலை ஏற்பட்டது.
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை அரசாங்கம் விருப்பத்துடன் கொழும்புக்குத் திருப்பி அழைக்கவில்லை. அதனால் தான் அவரை உடனடியாகவே சீனாவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு சீனா மிகப் பாதுகாப்பான நாடு. அங்கு அவருக்கு எதிராக யாரும் போர்க்கொடி உயர்த்த மாட்டார்கள். எனவே அவரை சீனாவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்த விவகாரத்தில் இருந்து சிங்கள மக்களையும் இராணுவத்தினரதும் கவனத்தை திசை திருப்ப முனைகிறது அரசாங்கம்.
ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் நல்லிணக்கம் பொறிமுறைக்கான ஆலோசனைச் செயலணி பற்றி விளக்கமளிக்கும் கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீரவுடன் முரண்பட்ட மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே இராணுவத் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இப்போது பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ லண்டனில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.
இராணுவ ஒழுக்கத்தை மீறுகின்ற அதிகாரிகளுக்கு அவர்கள் பணியாற்றும் இடங்களை மாற்றுவது தான் இந்த அரசாங்கத்தின் அதிகபட்ச தண்டனையாக உள்ளது.
அதற்கு அப்பால் செய்வதற்கு அரசாங்கம் அஞ்சுகிறது. அத்தகையதொரு நிலையில் தான் அரசாங்கத்தை இராணுவம் வைத்திருக்கிறது.

http://www.tamilwin.com/politics/01/176031?ref=ls_d_tamilwin

Geen opmerkingen:

Een reactie posten