தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 15 maart 2018

இலங்கையை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளியானது


இலங்கையின் நிலைமாறுகால நீதி நடப்பாடுகளை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழுவின் மூன்றாவது கள அறிக்கை வெளிவந்தது.
ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை மையப்படுத்தி சிறிலங்காவின் நிலைமாறுகால நீதி நடப்பாடுகளை இக்கண்காணிப்புக்குழு அவதானித்து அறிக்கையிட்டு வருகின்றது.
34 பக்கங்களைக் கொண்டதாக ஜெனீவாவில் வெளிவந்துள்ள இந்நிபுணர் குழுவின் மூன்றாவது கள அறிக்கையானது பாதிப்புற்றோரின் கோணத்திலிருந்து பொறுப்புக்கூறல் வழிமுறைகளது திறத்தின் மீது கவனம் குவிப்பதோடு, தற்சார்பான மதிப்பீட்டையும்,
முன்செல்வதற்கான பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது.
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 37ஆம் அமர்வு நடந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் வெளிவந்துள்ள இந்த அறிக்கை மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட இந்த சுயாதீன நிபுணர் குழுவில் ஆறு பன்னாட்டு வல்லுனர்கள் பங்காற்றுகின்றனர். வெளிவந்துள்ள அறிக்கையின் சாரம் பின்வருமாறு அமைகின்றது,

1. 2015 அக்டோபரில் ஐநா மனித உரிமைப் பேரவையின் 30/1 தீர்மானத்தைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் ஒரு விரிவான நிலைமாற்ற நீதிச் செயல்நிரலை ஏற்று உறுதியளித்தது. இவ்வாறான நடைபடிகளில் ஒன்று 21ஆம் நூற்றாண்டின் படுமோசமான குற்றங்கள் சிலவற்றைக் கையாள்வதற்கான பொறுப்புக் கூறல் பொறிமுறைகளைத் தோற்றுவிப்பதாகும்.
அதன் பிறகு சிறிலங்கா அரசாங்கம் இதயசுத்தியுடன் செயல்படவில்லை. அது பன்னாட்டு அரங்கில் ஏற்ற உறுதிகளைக் கைகழுவியுள்ளது, பாதிப்புற்றோருக்குச் செய்ய வேண்டிய சட்டக் கடப்பாடுகளை மீறியுள்ளது.
நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில் சிறிலங்கப் பாதுகாப்புப் படைகள் சித்திரவதை, பாலியல் வன்முறை உள்ளிட்ட கடுங்குற்றங்களைத் தொடர்ந்து செய்துள்ளன. தண்டிக்கப்படும் அச்சம் இல்லாமலே, இலங்கையை அதன் கடந்தகாலக்
குற்றங்களுக்குப் பொறுப்பாக்கத் அனைத்துலக சமூகம் தவறியதால் மீறல்கள் தொடர ஊக்கம அளித்துள்ளது. போலும்.
2. கடைசியாக 2017 நவம்பரில் கண்காணிப்புப் பொறுப்புக்கூறல் குழு அறிக்கையளித்த பின், சிறிலங்கா அரசாங்கம் கண்டுள்ள முன்னேற்றம் என்று எதுவுமே இல்லை.
கண்காணிப்புப் பொறுப்புக்கூறல் குழுவானது கண்காணிப்பும் அறிவுரையும் பரிந்துரைகளும் வழங்குகிறது.
அது பாதிப்புற்றோரின் கோணத்திலிருந்து பொறுப்புக்கூறல் வழிமுறைகளது திறத்தின் மீது கவனம் குவிக்கிறது. ஐநா சிறப்பு அறிக்கையாளர்களும் மனித உரிமை அமைப்புகளும் அளித்துள்ள மதிப்பீடுகள் நிலைமாற்ற நீதிச் செயல்நிரலைக் கடுமையாகக் குறைகூறிய போதிலும், கண்காணிப்புப் பொறுப்புக்கூறல் குழுவின் பார்வைகளும் பரிந்துரைகளும் அதனைச் செயலாக்க வழிகாட்டுகின்றன.
30/1 தீர்மானத்தைக் கால வரையறை செய்து ஒவ்வொன்றாகச் செயலாக்க வேண்டும் என்ற அழைப்புகளைச் செவிமடுக்கவே இல்லை. சீனத்தின் செல்வாக்கு பெருகி வருவதற்கு எதிர்வினையாக சிறிலங்கா அரசாங்கத்தோடு இருதரப்பு உறவுகளைப் பேணி வளர்ப்பதில்தான் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் மேலதிக அக்கறை கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
போர்க்குற்றங்களை ஆய்வு செய்ய எந்தச் சிறப்பு நீதிமன்றம் அமைத்தாலும் அதில் வெளிநாட்டு பங்கேற்பு இருக்காது என்ற இலங்கை அரசுத்தலைவர் சிறிசேனாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. எப்படி எப்போதும் இடம் நேரம் கேட்டு சர்வதேசத்தை ஏமாற்றலாம் என்று இலங்கை காட்டியிருப்பதாக நோக்கர்கள் வருந்துகின்றனர்.
3. இதற்கிடையில், அரசுகள் அரசியல் விளையாடிக் கொண்டிருக்க, பாதிப்புற்றவர்கள் தொகை தொடர்ந்து பெருகிச் செல்கிறது.
நம்பகமான நோக்கர்களின் பார்வையில், 'சிறிலங்கப் பாதுகாப்புப் படைகள் தமிழர்களைக் கடத்துவதும் துன்புறுத்தி வதைப்பதும் அமைப்புசார் குற்றங்களாகவே இருந்து வருகின்றன. நாட்டின் மிகப்பெரிய படைமுகாம் ஒன்றில் சித்திரவதைக் கூடங்கள் உள்ளன. ஆட்சியிலிருக்கும் கூட்டாளிகள் குடிவரவு மோசடியிலும் ஆள் கடத்தலிலும் பணம் பறிப்பதிலும் ஈடுபட்டுள்ளனர்.
கடந்தகாலச் சித்திரவதை பற்றிய நம்பகமான குற்றச்சாட்டுகளையோ தொடர்ந்து வரும் சித்திரவதை, பாலியல் முறைகேடு பற்றிய உறுதி செய்யப்பட்ட நேர்வுகளையோ இலங்கை அரசாங்கம் புலனாய்வு செய்யத் தவறியது குறித்து ஐநா சிறப்பு அறிக்கையாளர் பென் எமெர்சன் 'பேரச்சம்' தெரிவித்துள்ளார்.
சிறப்பு அறிக்கையாளர் 2017 ஜூலையில் இலங்கை சென்று திரும்பிய பின் 'தேசப் பாதுகாப்புக் காரணங்களின் பேரில் தளைப்படுத்திச் சிறைப்படுத்தியவர்கள் மீதான சித்திரவதைப் பயன்பாடு மிகப் பரவலாகவும் வாடிக்கையாகவும் இருந்துள்ளது, இன்றும் இருந்து வருகிறது' என்பதை உறுதி செய்தார்.
'அரசின் திறமிகு சித்திரவதை இயந்திரத்தின் தாக்குதலை தமிழ்ச் சமூகம் சந்தித்துள்ளது' என்று குறிப்பிட்டார். சித்திரவதைக்கு ஆளானவர்கள் பலரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) படித் தளைப்பட்டவர்கள்.
இந்தச் சட்டத்தை நீக்கம் அல்லது திருத்தம் செய்வதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்த போதும் எதுவும் செய்ய வில்லை. தற்போக்கான சிறைப்படுத்தல் பற்றிய ஐநா செயற்குழு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை 'நாற்பதாண்டுக்கும் மேலாக தற்போக்கான சிறைப்படுத்தலுக்கு முகாமையான உசாத் துணைகளில் ஒன்று' என்று கூறி உடனே அதனை நீக்கக் கோரியிருந்தது.
4. ஐநா பொதுச் செயலர் 2015ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் போர் தொடர்பான பாலியல் வன்செயல் என்பது இலங்கை உள்நாட்டுப் போரின் 'கவனிக்கப் பெறாத பெருஞ்சிக்கல்களில் ஒன்று' எனக் குறிப்பிட்டார்;.
ஆனால் 'ஆள்கடத்தலும் தற்போக்கான சிறைப்படுத்தலும் சித்திரவதையும் வன்புணர்வு உள்ளிட்ட பாலியல் வன்செயல்களும் போருக்குப் பிறகான காலத்தில் அதிகரித்துள்ளன என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.' கடுமையான மதிப்பீடுகள் ஒருபுறம் இருக்க, சற்றொப்ப கடந்த ஓராண்டு காலத்தில் பதுகாப்புப் படையினரின் பாலியல் வன்செயல் தொடர்வதை அரசுசாரா அமைப்புகள் ஆவணப்படுத்தியுள்ளன.
இராணுவத்தின் 'வல்லுறவு முகாம்கள்' பற்றிய அதிர்ச்சியளிக்கும் விவரங்கள் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பது பற்றிய ஐநா குழுவிடம் அறிக்கையிடப்பட்டன.
2017 நவம்பரில் அசோசியேட்டெட் பிரஸ் செய்த புலனாய்வில் '50க்கு மேற்பட்டவர்கள் அந்த ஆண்டே வல்லுறவு, சூடுவைத்தல் அல்லது சித்திரவதைக்கு ஆளானதாகக் கூறினர்.

வட மாகாண முதலமைச்சரும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான சி.வி. விக்னேஸ்வரன் தாம் இது போன்ற தகவலை வெளிச்சப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் கண்டுகொள்ளப்படுவதில்லை என்று முறையிட்டார்.
'பன்னாட்டுப் பொறிமுறை அமைந்திருக்குமானால் பிறரைத் துன்புறுத்தி இன்பங்காணும் இந்த இராணுவத்தினரை அச்சப்படுத்தித் தடைப்படுத்தப் பயன்பட்டிருக்கும்' என்றும் கருதுவதாகச் கூறியுள்ளார்.
பாலியல் வனமுறைகள் வாடிக்கையாக நடப்பது மட்டுமல்லாமல் தரப்படுத்தப்பட்டவையாகவும் உள்ளன என்பதை வைத்து, இவை தொடரும் இலங்கை அரசாங்கக் கொள்கையின் அங்கமே என்றும், இராணுவத் தளபதிகள் தமது கலக எதிர்ப்பு உத்தியின் பகுதியாகத் தங்கள் ஆட்களுக்கு ஆணையிட்டு, சிறைப்பட்டவர்களை வல்லுறவு செய்யச் சொல்கின்றனர் என்றும்கூட சிலர் கருதும் நிலை ஏற்பட்டுள்ளது.
5. 2017இன் முதல் மூன்று காலாண்டுகளில் இலங்கை மனித உரிமை ஆணையத்துக்கு 5614 முறையீடுகள் வந்தன. இவற்றில் 1174 காவல் துறையின் சட்டவிரோதக் காவல் மற்றும் சித்திரவதை தொடர்பானவை.
பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டும் தொல்லைப்படுத்திக் கொண்டும் அச்சுறுத்திக் கொண்டும் இருக்க, வடக்கிலுள்ள தமிழர்கள் பலரும் தாங்கள் கடத்தப்படலாம், தற்போக்காகச் சிறை வைக்கப்படலாம், துன்புறுத்தப்படலாம், சித்திரவதை செய்யப்படலாம், பாலியல் முறைகேடு செய்யப்படலாம், அல்லது கொல்லப்படலாம் என்று அஞ்சிக்கொண்டுள்ளனர்.
6. தீர்மானம் 30/1 குறித்து மனித உரிமைப் பேரவையின் 37ஆம் அமர்வுக்கு முன்னதாக வெளியான எழுத்து வடிவிலான அறிக்கையில் மனித உரிமைகளுக்கான ஐநா உயர் ஆணையர் 'அண்மைக் காலம் வரை, 2016, 2017இலும் கூட தொடர்ந்து நிகழும் ஆள்கடத்தல்கள், கொடுவதை, பாலியல் வன்செயல் குறித்து வெளிநாட்டு ஊடகங்களில் இடம்பெற்ற கடுங்குற்றச்சாட்டுகள் குறித்து ஆழ்ந்த கவலை' கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
'பன்னாட்டு மனித உரிமைச் சட்டம் அப்பட்டமாக மீறப்படும் முறைகேடுகளும் பன்னாட்டு மனித நேயச் சட்டத்தின் கடுமையான மீறல்களும் தண்டிக்கப்படாத நிலையைக் கையாள சிறிலங்கா ஆட்சியாளர்கள் தமக்கு வல்லமையோ விருப்பமோ இருப்பதாகக் காட்டவில்லை' என்ற சரியான முடிவுக்கே அவர் வந்துள்ளார்.
இவ்வாறு இலங்கையை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/statements/01/176872?ref=recommended3

Geen opmerkingen:

Een reactie posten