அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருந்த தமிழ் குடும்பம் ஒன்று கடைசி நொடியில் விமானத்திலிருந்து இறக்கப்பட்டுள்ளனர்.
சட்டரீதியான நடவடிக்கையின் மூலம் வியத்தகு விதத்தில் அக்குடும்பம் நாடு கடத்தப்படுவதிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
‘நடேசலிங்கம்- பிரியா’ என்ற தம்பதியினரும் அவர்களின் இரண்டு குழந்தைகளுமே இதிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
பிரியாவின் இணைப்பு நுழைவு-விசா(Bridging Visa) காலாவதியான நிலையில், கடந்த மார்ச் 5ம் திகதி அதிகாலை குயின்ஸ்லாந்தில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2012இல் படகு வழியாக அவுஸ்திரேலியா வந்த நடேசலிங்கமும், 2013 இல் வந்த பிரியாவும் அவுஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டு, பிலோயலா (Biloela) என்ற நகரில் கடந்த நான்கு ஆண்டுகளாக வசித்து வந்துள்ளனர்.
இது தொடர்பாக, தமிழ் அகதிகள் கவுன்சிலின் பேச்சாளர் பென் ஹில்லர் கருத்துத் தெரிவிக்கையில்,
எல்லைப்படை எடுத்த நடவடிக்கை கொடூரமான, கண்டிக்கத்தக்க நடவடிக்கையாகும். அக்குடும்பத்தின் மனு மீண்டும் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.
தருணிகா மற்றும் கோபிகா அவுஸ்திரேலியாவிலேயே பிறந்தவர்கள். இதுவே அவர்களது இல்லம், அவர்கள் இலங்கைக்கு சென்றதோ அவர்களிடம இலங்கைக் குடியுரிமையோ கிடையாது.
இலங்கையிலிருந்து 2000ஆம் ஆண்டு வெளியேறிய பிரியா, கடந்த 5 ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் உள்ளார். அவர் இலங்கையைவிட்டு வெளியேறி 18 ஆண்டுகளாகிறது.
நடேசலிங்கமும் இலங்கையில் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கிறார் என அவர் தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஒரு வாரமாக அக்குடும்பம் சிறை வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களை விடுவிக்கக் கோரிய இணைய மனுவில் 62,000இற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
இம்மனுவை தயார் செய்த ஏஞ்சிலா பிரிடெரிக்ஸ், “குற்றவாளிகளைப் போல அவர்கள் கைவிலங்கிடப்பட்டிருந்தனர். கைக்குழந்தையைக் கூட அவர்களிடமிருந்து பிரித்திருந்தனர்.
அவுஸ்திரேலியா தன்னுடைய வரலாற்றிலிருந்து ஏதாவது கற்றுக்கொண்டுள்ளதா? அவுஸ்திரேலிய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன் எனக் கூறியிருக்கிறார்.
இக்குடும்பம் நாடுகடத்தப்படுவதிலிருந்து மீட்கப்பட்டதன் நினைவாக பிலோயலா நகரில் மெழுகுவர்த்தி ஏந்தி போராடும் நிகழ்வும் நடத்தப்படுகின்றது.
http://www.tamilwin.com/community/01/177148?ref=recommended2
Geen opmerkingen:
Een reactie posten