இதற்கு இப்போதைக்கு தெளிவான பதிலைக் கூறுவது யார்? என்பதில் மிகப்பெரிய கேள்விக்குறியே உருவாகியுள்ளது. அந்தவகையில் வடகிழக்கு மக்களின் அன்றாட வாழ்வில் அத்தியவசியமான ஓர் பகுதியாக மாறிவிட்டது போராட்டம்.
உள்நாட்டுப் போரை விடுதலைப்புலிகளுடன் நடத்துகின்றோம் என புது வேக ஆக்ரோசம் கொண்டு ஓர் யுத்த நாடகத்தையே இலங்கையின் அரசு (கள்) மேற்கொண்டது.
அந்த யுத்தத்தால் எத்தனை இழப்புகள், வடக்கு கிழக்கு மக்களின் உயிர், உடைமை, உறையுள் என அனைத்துமே அழிக்கப்பட்டன. இருப்பிடங்கள் தேச பாதுகாப்பு என்ற பெயருக்குள் உள்ளடக்கப்பட்டு, பிடுங்கப்பட்டு இராணுவ முகாம்களாக்கப்பட்டன.
இவை அனைத்துமே அறிந்த விடயமே. ஆயினும் இன்றுடன் யுத்தம் நிறைவு பெற்று 8 ஆண்டுகளையும் கடந்து நிற்கின்றது இலங்கை.
ஆனால் இன்றும் ஏன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை? ஏன் அவர்கள் ஒதுக்கப்படுகின்றார்கள்?
இந்த நிலையில் காணாமல் போனோரின் உறவுகளின் ஆர்ப்பாட்டம், படையினரால் பிடுங்கப்பட்ட காணிவிடுவிப்பு போராட்டம் என யுத்த நிறைவு தொட்டு இன்று வரை இவை எதற்கும் தீர்வுகள் கொடுக்கப்படவில்லை.
ஆனாலும் ஓர் கண்துடைப்பு மிக நன்றாகவே இந்த தமிழர்கள் பிரச்சினையில் இடம் பெறுகின்றது. அதாவது இப்போதைய அரசு கடந்தகால அரசை குறை கூறுகின்றது.
அதேபோல் போல் கடந்த ஆட்சி யுத்தம் மட்டுமே முடிவுக்கு கொண்டு வந்தோம்? அபிவிருத்தியை ஏற்படுத்த ஆயத்தமாகின்றோம் என ஒருவர் மாறி ஒருவரை குறை கூறிக் கொண்டு இருக்கின்றார்களே தவிர.,
தமிழர்களுக்கு சாதாரண தீர்ப்புகள், தீர்வுகள் இன்றுரை வழங்கிவைக்கப்படவில்லை. இது அனைவருக்கும் தெரியும் தெரிந்தும் தெரியாததுபோல் ஓர் நடிப்பு நாடகங்களும் நடைபெற்றவாறே இருக்கின்றன.
காரணம் அரசியல், பதவி, அதிகாரம் போன்ற தனிப்பட்ட சுய இலாப நோக்குப் பார்வைகள் என்பதும் வெளிப்படை.
தமிழர்கள் வாழும் பிரதேசம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களுக்கு அரசு காட்டும் அபிவிருத்தி முனைப்பு தமிழர்களுக்கு காட்டப்படவில்லை என்பது வெளிப்படையாக தெரிகின்றது.
உதாரணமான சலாவ ஆயுத முகாம் வெடிப்பின் பின்னர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகுந்த நிவாரணங்கள், வீடமைப்பு போன்ற விடயங்கள் அசுர வேகத்தில் அரங்கேற்றப்பட்டன.
இவ்வாறாக வடகிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஏற்பட்ட அனர்த்தங்களுக்கு அரசுகள் பொறுப்பேற்றுக் கொண்டு. பாதிப்புகளுக்கு தீர்வுகள் கொடுக்கப்பட்டன.
ஆனால் அரசினால் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தினால் தமிழ்மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மட்டும் அரசு(கள்) ஏன் பொறுப்பு கூற முன்வரவில்லை?
தமிழ் மக்களின் உணர்வு பூர்வமான போராட்டங்களும் கூட கேலிக்கூத்தாக பார்க்கப்படும் நிலையே இலங்கையில் காணப்படுகின்றது.
அப்படிப் பார்க்கும் போது இன்று வரைக்கும் ஆட்சியாளர்களுக்கு வடக்கும், கிழக்கும் பிரச்சினைக்கு உரிய பகுதிகளே. வடக்கிற்கு ஒரு நீதி தெற்கிற்கு ஓர் நீதி இது மட்டும் தெளிவு.
ஆனால் வாக்குறுதிகளுக்கு மட்டும் எதுவித பஞ்சமும் இல்லை. நல்லிணக்கம், ஒற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற மாயை சித்தரிக்கப்பட்டு கொண்டு வரும் அதேவேளை.,
தமிழர்களை மறைமுகமாக ஒடுக்கும் ஓர் செயலே இன்று வரை நடைபெற்று கொண்டு வருகின்றது. இப்போதும் தொடரும் பாரபட்ச நீதி இதனை வெளிப்படையாக காட்டி விடுகின்றது.
இவை ஒரு புறம் இருக்கட்டும் யுத்தம் முடிந்து இத்தனை ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயம் மட்டும் ஏன் சர்ச்சைக்கு உரிய விடயமாக உள்ளது?
இப்போதும் வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டங்களுக்கு அல்லது, காணி விடுவிப்பு போராட்டங்களுக்கு அரசு பாராமுகமே.
தெற்கில் ஏற்படுத்தப்பட்ட கொலைகளுக்கும், கடத்தல்களுக்கும் தீர்வு தேட இப்போதைய அரசு காட்டும் முனைப்பினை ஏன் வடகிழக்கு மக்களின் பிரச்சினைகளில் காட்டவில்லை?
அப்படியானால் இது அனைத்து ஆட்சியாளர்களும் இணைந்து நடத்திக் கொண்டு வரும் ஓர் அரசியல் ஆட்டமே என்று மட்டுமே எண்ணத் தோன்றுகின்றது.
அதாவது இலங்கை அரசு இன்று வரையிலும் யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது.
விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டனர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டனர் என்பது அனைத்துமே ஓர் போலி நாடகம் தானா? அப்படியே இலங்கை கூறும் வகையில் யுத்தம் நிறைவு செய்யப்பட்டது என்றால்?
ஏன் வடக்கில் இராணுவ வசம் உள்ள காணிகள் விடுவிக்கப்படவில்லை? பாதுகாப்பு நிமித்தம் என்றால், 8 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னருமா தேசிய பாதுகாப்பு வலுப்படுத்தப்படவில்லை என்ற கேள்வி எழுகின்றது.
இதற்கு, யுத்தம் நிறைவு செய்யப்பட்டதை அரசு ஒத்துக்கொள்ளவில்லை, அல்லது தமிழர்கள் ஓர் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதில் ஆட்சியாளர்கள் தீவிர அக்கறைக் காட்டி வருகின்றார்கள் என்ற இரு வகைக் காரணங்களே இருக்கலாம் எனலாம்.
அதேபோல் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு அப்படி என்னதான் நடந்தது இன்று வரை இழுத்தடித்துக் கொண்டு வர? என்பதும் சிக்கலான கேள்விதான்.
இதற்கு அரசு எப்படி விடை கூறுவது என்று தெரியாமல் விழித்து நிற்கின்றது என்பதே உண்மை. இதனையே அமைச்சர் ராஜித அண்மையில் தெளிவாக கூறினார்.,
“காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பல சிக்கல்கள் உள்ளன. இவர்கள் இருக்கின்றார்கள் என கூறவும் முடியாது, இறந்து விட்டார்கள் என்று கூறவும் முடியாது., என.
ஆக இந்த விடயத்திற்கு அரசு எப்போது பதில் கூறும் என்பது தெரியாநிலையே தொடருகின்றது. காணாமல் போனோர் அலுவலகம் முதல் அனைத்துமே வெறும் கண்துடைப்பிற்காக செய்யப்பட்டு வரும் திட்டங்களே.
அதாவது தமிழர்களை மட்டுமல்ல சர்வதேசத்தையும் ஏமாற்றும் செயலே நடைபெற்றுக் கொண்டு வருகின்றது எனலாம்.
அதாவது, யுத்தகாலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை ஆட்சியாளர்கள் கூற முற்படும் போது அல்லது, தீர்வு கொடுக்க முற்படும் போது இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பிலும் பதில்கள் கூறவேண்டி வரும்.
புலிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்று கூற வேண்டி வரும், வதை முகாம்கள் பற்றி கூற வேண்டி வரும், இவை பற்றிய உண்மைகள் வெளிவந்த பின்னர் அடுத்தது என்ன?
அடுத்தது இலங்கையில் தமிழர்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டார்கள் என்பதனை அனைத்து மக்கள் மற்றும் ஒட்டு மொத்த உலகத்திற்கும் தெரிந்து போகும், அப்படி தெரிந்தால் இலங்கை ஓர் ஒதுக்கப்பட நாடாகக் கூட மாற்றம் பெற்றுப் போகும்.
இந்த நிலை ஏற்படக் கூடாது என்பதில் அதி அக்கறை காட்டும் அரசுக்கு உண்மையில் இந்த காணாமல் ஆக்கப்பட்டோரது பிரச்சினை சிம்ம சொப்பனவாகவே காணப்படும் என்பது உறுதி.
எந்த நிலையிலும் சிங்கள ஆட்சியாளர்கள் வெளியில் ஒருவருக்கு ஒருவர் திட்டிக் கொண்டாலும் பௌத்தமயமாக்கல், முழு நாட்டையும் பௌத்தப்படுத்துதல் என்பதில் மட்டும் விட்டுக் கொடுப்புகள் எப்போதும் நிகழாது.
அடிப்படையில் எத்தனை ஆட்சியாளர்கள் வந்தபோதும் இந்த ஓர் விடயத்திற்காகவே இலங்கைத் தமிழர்கள் அப்போது முதல் இன்று வரை பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள் என்பது கடந்து வந்த பாதைகள் மூலம் தெளிவாகத் தெரியும் விடயம்.
அதேபோன்று ஒட்டு மொத்த தமிழர்களும் இந்த இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் இணைந்து கேள்விகளைக் கேட்டால்? நிச்சயமாக பதில்கள் கிடைக்கும் ஆனால் அப்படி நடக்கும் வாய்ப்புகள் இருக்கின்றதா?
இது ஓர் சந்தேகத்திற்கு இடமான கேள்வியே அதனால் பதில் இல்லை. நடந்தாலும் நடக்கலாம், அல்லது நடக்காமலும் போகலாம் என்ற ஓர் பதில் மட்டுமே கிடைக்கும்.
எவ்வாறாயிலும் நல்லாட்சி எனக் கூறிக்கொள்ளும் ஆட்சி எப்போது மதத்தை தாண்டி வெளிவந்து தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கின்றதோ.,
அரசியல் இலாபங்களுக்காக உண்மைகளை மூடி மறைத்துக் கொண்டு வரும் நிலை மாற்றப்பட்டு அனைவருக்கும் ஓர் நீதி என இலங்கை செயற்படுகின்றதோ அன்று உண்மையான நல்லிணக்கம் ஏற்படலாம்.
ஆனாலும் அதனை செய்யுமா இப்போதைய அரசு? செய்யத்தான் விட்டு விடுவார்களா? மீட்டிப்பார்க்கும் கடந்த காலம் தொடர்கதை என்ற பதிலையே இதற்கு தரும்.
அதுவரையில் இலங்கைத் தமிழர்களின் வாழ்வு மட்டும் என்னவோ போராட்டத்தோடு கூடிய தொடர்கதையாக இருக்கும். இந்த நிலை எப்போது, யாரால் மாற்றப்படும்?
Mawali Analan
http://www.tamilwin.com/articles/01/144121?ref=rightsidebar-article
Geen opmerkingen:
Een reactie posten