தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 16 april 2017

கேள்விக்குறியாகும் தமிழர்களின் எதிர்காலம் : சர்வதேசம் பாராமுகம்!

சம்பவங்களின் கோர்வைகள் புரியாத விடயங்களையும் புரியவைக்கும். ஆனாலும் நாம் நடப்புகளை தொகுத்துப் பார்ப்பது என்னமோ சற்று குறைவே.
ஓர் நிகழ்வின் அல்லது சம்பவத்தின் தன்மையும், தாக்கமும் இன்னுமோர் விடயத்தோடு கட்டாயம் தொடர்பு படும் என்பதனை எத்தனையோ சம்பவங்கள் எடுத்துக் காட்டும்.
இப்போதைய நிலையில் எது எப்படிப்போனாலும் பிரச்சினையில்லை ஆனால் தமிழர்கள் மட்டும் அடக்கப்பட, அழிக்கப்பட வேண்டும்.,
என்பதில் இலங்கை ஆட்சியாளர்கள் மட்டுமல்ல சர்வதேசமும் மிகுந்த விழிப்பாக இருப்பதாகவே தோன்றுகின்றது காரணம் சம்பவங்களின் கோர்வைகள்.
ஓர் அரசியல் நாடகமாக, இன அழிப்பு படலமாக இலங்கை அரசு சர்வதேசத்தோடு கைகோர்த்து, சில பல எட்டப்பர்களை துணை கொண்டு பல்லாயிரங்கணக்கான உயிர்களை அழித்தது.
விடுதலைப் புலிகளை அடியோடு அழித்துவிட வேண்டும் என்பது மட்டுமே இலக்கு என போர்க் கோலம் பூண்ட அரசு (கள்) செய்தது அதனையா?
சகுனிகளும் தோற்றுவிடும் அளவு ஓர் பரமபதமாட்டமாடி முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாய் மனித உயிர்களை கொன்று குவித்தன.
அத்தோடு நிற்காமல் திண்டாடிப் போன தமிழர்களை பாதுகாக்கின்றோம் எனப் போலி பாதுகாப்பு வலயத்தை ஏற்படுத்தி வலைக்குள் சிக்கியவர்கள் அழிக்கப்பட்டனர்.
எத்தனை உயிர்கள், எத்தனை உடற் சிதறல்கள் பாரபட்சமின்றி தமிழர்களுக்கு மரணங்கள் வாரி வழங்கப்பட்டன. இங்கு யுத்தம் மூலம் எதிர்பார்த்தது புலிகளை அழிப்பது மட்டும் தானா?
இந்தக் கேள்விக்கு இலங்கை அரசு முதல் இலங்கை உள் நாட்டுப் போரை உற்று கவனித்த, போருக்கு உதவிகள் செய்த அனைத்து நாடுகளுக்கும் நன்றாகவே பதில் தெரியும் தெரிந்தும் பேச வில்லை காரணம் அரசியல்.
ஆனால் பாதிக்கப்பட்ட மக்களின் இன்றைய நிலை என்ன? அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியவர்கள் யார்? இதற்கு சட்டென்று பதில் கூறிவிடும் அளவிற்கு எவரும் இல்லை என்பதே உண்மை.
உதவிகள் என்ற பெயரில் கிடைத்தது வெறும் கண்துடைப்புகள் மாத்திரமே. அது அப்படியே இருக்கட்டும்.,
இன்றைய நிலையில் குப்பை மேடு குடித்த உயிர்களைப் பற்றியும், பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பிலான அனுதாப வெளியீடுகள் கொடிகட்டிப்பறக்கின்றன.
இந்த மீதொட்டுமுல்ல குப்பை மேடு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச ரீதியில் உதவிக் கரங்கள் வந்து குவிகின்றன.
அரசும் கூட திக்கு முக்காடிப் போய் விட்டது, இதில் வேடிக்கையான விடயம் என்னவெனின் போலியாக ஒருவர் மாற்றி ஒருவரை குறை சொல்லிக் கொண்டு போலி அரசியல் நாடகங்களும் ஆங்காங்கே அரங்கேற்றப்பட்ட வாறே இருக்கின்றன.
ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்கள் வழங்க அரசு காட்டும் முனைப்போ அதி வேகமானது. அண்டை நாடான ஜப்பான் உதவி செய்ய ஓடோடி வருகின்றது.
நன்று தவறேதும் இல்லை. அனர்த்தம் நடந்து விட்டதால் உதவிகள் செய்யப்படுகின்றது இதில் என்ன தவறு என்று நினைத்தால் அது பிழை.
இந்த உதவிகள் முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றப்பட்ட இன அழிப்பு படலத்தின் போதும், இன்று வரை வாழ்வாதாரத்திற்கு துயரப்படும் தமிழ் மக்களுக்கு ஏன் வழங்கப்பட வில்லை.
அப்போது இந்த ஜப்பானுக்கு தமிழர்களின் அழிப்பு தெரிய வில்லையா? அவர்கள் உண்ண உணவின்றி அலைந்தது, மடிந்ததும் புலப்படவில்லையா? ஜப்பான் மட்டுமல்ல அனைத்து நாடுகளும் செய்தது இதனையே.
அதுவே தென்னிலங்கையில் ஓர் அனர்த்தம் என்றால் சர்வதேசமே கொந்தளிக்கும் நிலை. ஆனால் வடக்கு கிழக்கு தமிழர்களை திட்டமிட்டு கொன்றாலும் வேடிக்கைப் பார்க்கும் செயலையும் அரசியலாக பார்க்க முடியுமா?
இங்கு அவர்களுக்கு கிடைக்கின்றது, தமிழர்களுக்கு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு எதுவும் இல்லை என்பதனையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஆனால் இதில் உள்ள அரசியல், தனிப்பட்ட இலாபங்கள், நாடகங்கள் என்பது மட்டுமே ஆதங்கம்.
அதேபோல் அரநாயக்க மண் சரிவு அப்பாவி உயிர்களை குடித்துச் சென்றது இயற்கை வடிவில் வந்து, நூற்றுக் கணக்கான குடும்பங்கள் பரி தவித்தன. இங்கு இயற்கை எமனாகியது.
அதேபோன்று சாலாவ இராணுவ முகாம் விபத்தும் பல குடும்பங்களை திண்டாட வைத்தது. ஒரு வகையில் சாலாவ விபத்து என்பது செயற்கையானது.
எது எப்படியோ இயற்கையாக இருக்கட்டும் செயற்கையாக வந்து போகட்டும் ஆனால் உதவிகள் முறையாக கிடைத்தன.
இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது இலங்கை அரசு மட்டுமல்ல சர்வதேசமும் நீலிக்கண்ணீர் வடித்தது ஆனால் உதவிகளுக்கு மட்டும் குறை வைக்காமல் வாரி வழங்கின.
இப்போது இந்த அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான உதவிகள், வீடுகள் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு விட்டன.
இந்த உதவி செய்யும் முனைப்பை தமிழர்கள் விடயத்தில் ஏன் காட்டவில்லை? முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழர்களை வேடிக்கை பார்த்த ஜப்பான் இன்று உதவிகளை வாரி வழங்க தேடி வருகின்றது.
ஆனால் அப்போது அழிக்கப்பட்ட தமிழர் உடமைகளுக்கு பதில் கூறுபவர்கள் இல்லை. ஆண்டுகள் பல கடந்த நிலையிலும் இன்றுவரை உதவிகள் என்பது எட்டாக் கனியாகவே இருந்து வருகின்றது.
ஒரு வகையில் மைத்திரி அரசு தான் இதற்கு காரணம் என்றால், உதவி செய்யவும் அரசியலை பார்க்க வேண்டுமா? என்ற கேள்வியும் கூடவே வந்து போகும்.
அதே போன்று வடக்கு மக்கள் குறை தீர்ப்பதாக கூறி வந்த ஐ. நா பிரதிநிதி பான் கீ மூன் பின் வாசல் வழியாக ஓடிச் சென்ற வேடிக்கையை மறக்க முடியாது.
இப்படியாக தமிழர்களை ஏன் ஒதுக்க வேண்டும்? அவர்களை அழிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றார்களா? அதனால் என்ன இலாபம்?
மைத்திரி அரசினால் இந்த சர்வதேச உதவிகள் கிடைக்கின்றது என்று கூறுபவர்களும் இல்லாமல் இல்லை.
ஆனால் இதே மைத்திரி இன்றும் தமிழர்களுக்கு எவ்வாறான உதவியை செய்கின்றார் என்றால் அதனைக் கூற முதலில் பேச்சுவார்த்தை அவசியம்.
பேச்சுவார்த்தைகளில் நகர்கின்றது இப்போது தமிழர்கள் நிலை.
ஜனாதிபதி மைத்திரி பாராளுமன்றத்தில் கூறிய ஓர் விடயம் நினைவுக்கு வருகின்றது,
“நண்பர்கள் எப்போதும் நண்பர்கள் அல்ல, எதிரிகள் எப்போதும் எதிரிகள் அல்ல, கடந்த கால கசப்புகளை மறக்க வேண்டும்” என்பதே அது.
அதேபோன்று பிரதமரும் “யாழ் நூலகம் எரிக்கப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றோம்” என்றார் பகிரங்கமாக.
போலியான மன்னிப்பு எதற்கு? யுத்தம் நிறைவடைந்த பின்னரும் துயர்படும் தமிழர்களுக்கு உதவிகள் செய்யாத பிரதமரும், ஜனாதிபதியும்
தமிழர்கள் வாழும் பிரதேசம் தவிர்ந்த ஏனைய இடங்களை முன்னேற்ற காட்டும் அக்கறைகளோ தனித்தன்மை வாய்ந்தவை.
மேலும் வெளிப்படையாக இவர்கள் இப்படி கூறினாலும் உள்ளுக்குள் தமிழர்களை இவர்கள் இன்றும் எதிரிகளாகத்தான் பார்க்கின்றாரா என்ற சந்தேகமும் எழுகின்றது.
ஆக மொத்தம் இவற்றை தொகுத்தால் கிடைக்கும் ஒரே பதில் தமிழர்களை அழிக்க வேண்டும் என்பதில் இலங்கை அரசுகள் காட்டும் முனைப்பையே சர்வதேசமும் காட்டி வருகின்றது.
இலங்கைத் தமிழர்களை அழிப்பதை வேடிக்கைப்பார்த்த நாடுகளும், அதற்கு உதவி செய்த நாடுகளும் இப்போது தங்கள் இலாபங்களுக்காக போலியாக நடிக்கின்றன என்பதே உண்மை.
http://www.tamilwin.com/special/01/142846?ref=view-latest

Geen opmerkingen:

Een reactie posten