தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 10 april 2017

தமிழும் தமிழர்களும் இனி மெல்ல மெல்லச் சாவார்கள்

ஒரு மாறுபட்ட அடக்குமுறை ஈழ நாட்டில் வேரூன்ற தொடங்கியுள்ளது. இதனை அடக்கு முறை என்பதை விடவும் அழிப்பு முறை என்று சொல்வதே பொருத்தம்.
இருந்த நிலை மாற்றப்பட்டு வடக்கு கிழக்கில் புதிதாக விகாரைகளும் புத்தர் சிலைகளும் அமைக்கப்பட்டு, அங்கு ஓர் செயற்கையான கலாச்சாரம் ஏற்படுத்துவதனையும், உட்புகுத்துவதனையும் புதுவித ஆக்ரமிப்பு படலமாக மட்டுமே நோக்க முடியும்.
அப்படிப் பார்க்கும் போது இதனையும் கூட ஒரு வகையில் இன அழிப்பு பட்டியலுக்கும் அடக்கிவிட முடியும். அதற்கான ஓர் அடித்தளமாகவே பலவந்தமான ஓர் கலாச்சாரத் திணிப்பு இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இது இப்படியே தொடருமானால் “தமிழும் தமிழர்களும் இனி மெல்ல மெல்ல சாவார்கள்” என்ற பதம் மட்டும் உண்மையாகி விடக்கூடிய சூழலில் இலங்கைத் தமிழர்கள் நிலை தற்போது பயணித்துக் கொண்டு வருகின்றது.
உலகத் தமிழர்களைப் பொருத்தவரைக்கும் கூட இலங்கை என்பது மிகப் பிரதானமான நாடு. அதில் இருந்து முற்றாக தமிழர்களை அகற்றி விட இலங்கை பௌத்த அமைப்புகள் தரப்பு ஆட்சியாளர்களோடு இணைந்து காட்டும் முனைப்பு என்பது வேடிக்கையான விடயமே.
இருந்தாலும் அதனை செயற்படுத்தியே தீர வேண்டும் என்பது ஒரு நிகழ்ச்சி நிரலாகவே அரங்கேற்றப்பட்டு கொண்டு வருகின்றது. இது இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டது அல்ல.
வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும் போது, எத்தகைய மாற்றங்களை இலங்கை சந்தித்து வந்தது என்பது தெளிவாகப் புலப்படும்.
வரலாற்றில் எத்தனை புதுக் கதைகள் திணிக்கப்பட்டுள்ளன, எத்தனை மாற்றுக் கருத்துகள் பதியப்பட்டன என்பதனை தமிழர்கள் மட்டுமல்ல பௌத்தர்களும் கூட நன்றாகவே அறிவார்கள். வரலாற்றை பொய்யாக்குவதில் பெயர் பெற்றது இலங்கை.
இப்படியாக வரலாற்றை அழிப்பதாலோ, அல்லது திரிபு படுத்தப் படுவதாலோ தமிழர்கள் இலங்கையில் பெற்றுள்ள முக்கியத்துவத்தினை மாற்றி விட முடியாது என்பதனை தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்ட காரணத்தினாலேயே இலங்கையில் செயற்கை கலாச்சார திணிப்பு முனைப்பு காட்டப்பட்டு வருகின்றது.
இதன் இலக்கு இலங்கை முற்று முழுதான ஓர் பௌத்த நாடாக மாற வேண்டும். குறிப்பாக வடக்கு கிழக்கும் பௌத்த வசமாக வேண்டும் என்பது மட்டுமே.
அந்த வகையில் வடக்கு கிழக்கு தமிழர்களை அழிக்க வேண்டும் என்பதற்கான திட்டமிட்ட செயற்பாடுகள் தொடர்ந்தும் நடைபெற்று கொண்டே இருக்கின்றது.
இந்த விடயத்தில் இலங்கை ஆட்சியாளர்கள் சாமர்த்தியமான யுக்தியை கடைபிடித்து ஆமை வேகத்தில் நகர்ந்து வந்தாலும் தனது உடும்புப் பிடி மட்டும் எது நடந்தாலும் தளர்த்திக் கொள்ள வில்லை.
இந்த இடத்தில் மலையத்திலும் தமிழர்கள் தானே இருக்கின்றார்கள் அவர்களை ஏன் விட்டு விட்டார்கள்? இந்தக் கேள்வி கட்டாயம் வரக்கூடும்.
மலையகத் தமிழர்கள் ஒரு வகையில் ஓர் அடக்கு முறை வாழ்வுக்கு பழக்கப்படுத்தப்பட்டு விட்டார்கள். ஆனால் தமிழீழ தமிழர்கள் அந்த அடக்கு முறையை எதிர்த்தனர்.
உரிமைக்காக குரல் கொடுத்தனர். ஆரம்ப கட்டத்தில் அகிம்சை வழியிலும் கூட உரிமைக்காக கேள்வி எழுப்பிப்பார்த்தனர். அதில் கிடைக்கப்பெற்றது ஒன்றும் இல்லை என்றாகிப் போகவே ஆயுதம் ஏந்தியும் தம் உரிமைக்காக போராடத் தொடங்கினர்.
இவை அனைத்துமே தெரிந்த கதை ஆனால் இதில் தோற்றது இலங்கையின் ஆட்சியாளர்களே என்பதும் ஒரு வகையில் உண்மையே.
எந்த நிலையிலும் தமிழர்களையும், அவர்களின் பண்பாட்டுக் கலாச்சாரத்தினை அழித்து ஒடுக்கி விட முடியாது என்பதனை அறிந்து கொண்ட காரணத்தினால் ஒரு மாறுபட்ட அழிப்பு முயற்சி இலங்கையில் தொடரப்பட்டுள்ளது.
இந்த முயற்சி இரு வகையில் தொடரப்பட்டுள்ளது. அதாவது தமிழர் பிரதேசங்களில் பௌத்த கலாச்சாரத்தை திணிப்பது ஒன்று, இரண்டாவது தமிழர் வழிபாட்டு தலங்களுக்குள் பௌத்தத்தை புகுத்துவது.
இந்த இரு வகை செயற்பாடுகள் இலங்கையில் நடைபெற்று கொண்டு வருவதனை அனைவராலும் உணரக் கூடியதாகவே இருக்கின்றது. கதிர்காமக் கந்தன் “கத்தரகம தெய்யோவாக” மாற்றம் பெற்றதை எவரும் உணரவில்லை.
விசாகத் திருவிழா “வெசக்” பண்டிகையாக திரிந்து போனதையும் கண்டு கொள்ள வில்லை. இது போல எத்தனை மாறுதல்கள்!. தானத்திற்கு பெயர் பெற்றவர்கள் தமிழர்கள் என்பதை நிருவ இத்தனை விட்டுக் கொடுப்புகள் கொஞ்சம் அதிகம் தான்.
இப்போதைக்கு முருகக் கடவுள் இலங்கையைப் பொருத்தவரை பௌத்தக் கடவுளாக்கப்பட்டு விட்டார். இது அறிந்த காரணத்தினாலோ தெரியவில்லை ஆண்டியாய் மாறினார் அப்போதே கந்தன்.
“கதிர்காம வெற்பில் உறைவோனே!
சோதி சிவஞானக் குமரேசா தோமில் கதிர்காமப் பெருமானே!
கதிரகாம மூதூரில் இளையோனே!'
அரிய கதிர் காமத்தில் உரிய அபிராமனே!'
மணிதரளம் வீசி அணி அருவி சூழ மருவு கதிர்காம பெருமாளே!'
கதிர்காம மேவிய பெருமாளே”
திருப்புகழ் ஊடாக அருணகிரிநாதர் பாடியது இது. புராணங்களின் அடிப்படையிலும் சரி, வரலாற்றின் அடிப்படையிலும் சரி கதிர்காமம் இந்துக்களின் ஆலயம் எனப்படுவதே உண்மை.
கதிர்காமம் மட்டுமல்ல பல வழிபாட்டுத்தலங்களுக்கு ஏற்பட்டதும் இதே கதியே. பௌத்த விகாரைகளுக்குள் இந்துக் கடவுள்கள் இல்லாத இடம் குறைவு.
இங்கு கடவுள்களிடம் வேறுபாடு காண முயலவில்லை. இன ரீதியில் வேற்றுமையையும் நோக்கவில்லை. இதன் உண்மைத் தன்மையை ஆராயும் போதே மாற்றத்தின் விளைவு புரிகின்றது.
அதாவது திட்டமிட்ட வகையில் ஓர் இன அழிப்பினை இலங்கை துளித்துளியாக சேமித்து வருகின்றது. இதே நிலை தொடருமானால் அது பிரளயமாக மாறக் கூடிய நாள் வெகு தூரத்தில் இல்லை.
இப்போதைய சூழலின் அருகிவரும் பட்டியலில் தமிழர்களையும் அடக்கி விட முடியும். இதில் வேடிக்கையான விடயம் எதுவெனில் நம் பண்பாடுகளும், சமய நம்பிக்கைகளும், கலாச்சாரமும் அழிக்கப்பட்டு வருகின்றது என்பதை தமிழர்களும் அறியாமல் இல்லை என்பதே.
அறிந்து என்ன பயன் கேள்வி கேட்பவன் இனவாதி, தட்டிக் கேட்பவன் விடுதலைப்புலி என்ற ஓர் சிந்தை வடிவமைப்பினை சிறப்பாக சித்தரித்து விட்டார்கள் ஆரம்ப காலம் முதல் ஆண்டு வந்த ஆட்சியாளர்கள்.
இப்போது மட்டும் நல்லிணக்கம், கலாச்சார பாதுகாப்பு என்பன தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என ஆட்சியாளர்கள் தெரிவித்தாலும் அது நடைமுறையில் இருக்கின்றதா? இது மிகப்பெரிய கேள்விக் குறியே.
தமிழ் கலாச்சாரங்கள் பாதுகாக்கப்பட வில்லை என்பதே உண்மை. அது எப்படி முடியும் அப்படி பாதுகாத்து விட்டால் ஆண்டாண்டுகளாக இலங்கை ஆட்சியாளர்கள் செய்து வந்த பிரம்ப பிரயத்தனம் தோல்வியை சந்தித்து விடுமே.
எது எப்படியோ இந்த செயற்கை கலாச்சாரத் திணிப்பிற்கு மத்தியில் தமிழர்கள் தமது கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் விட்டுக் கொடுக்காமல்.,
தமது வரலாற்று ஆவணங்களைப் பாதுகாத்து வந்தால் மட்டும் “தமிழும் தமிழர்களும் இனி மெல்ல மெல்ல சாவார்கள்” என்ற பதத்தை பொய்யாக்க முடியும்.
அப்படியும் இல்லாவிடின் எது நடந்தால் நமக்கென்ன என்று தமிழர்கள் இருப்பார்களானால் அதனைத் தொடர்ந்து நடக்கப்போவது தமிழர்களுக்கு என்று இன்னோர் கிரகத்தில் தான் இடம் தேட வேண்டி வரும் என்பதே.

Geen opmerkingen:

Een reactie posten