தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 11 april 2017

பிரபாகரன் நினைத்திருந்தால் என்னை கொலை செய்திருக்கலாம்: வடக்கின் முக்கிய புள்ளி

இறுதி யுத்தத்தின் போது படையினர் யுத்தக்குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டுள்ளதாகவும், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தற்போது சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வருகின்றார்.
எனினும், முன்னொரு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களை அதிகமாக கொலை செய்தார்கள் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இதற்கான ஆதாரங்கள் தற்போதும் என்னிடம் இருப்பதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தான் கூறியதை கேட்டிருந்தால் இன்று உயிருடன் இருந்திருப்பார் என அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போது வீ.ஆனந்தசங்கரி தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் லங்காசிறி 24 செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தற்போது இருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மத்திய அரசாங்கத்துடன், பேரம் பேசும் சக்தி காணப்படுகின்றது. எனினும் எங்களுடைய தமிழ் தலைமைகளின் பேச்சில் உறுதியில்லை.
தற்போது பார்கின்ற வகையில் தன்னை அழிக்க முற்பட்டது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா போன்றவர்களே தவிர, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அல்ல.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நினைத்திருந்தால் என்னை எப்போதோ கொலை செய்திருக்கலாம். ஆனாலும் அவர் அப்படி எதுவும் செய்யவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் முதலில் பதவியை இராஜினாமா செய்யுமாறு நான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் கூறினேன். அத்துடன், தமிழ் மக்களின் சாபத்திற்கு ஆளாக போகின்றீர்கள் எனவும் அவரிடம் கூறினேன்.
இன்று தமிழ் மக்கள் வெயில், மழை பாராது தமது உரிமைகளுக்காக போராடிக்கொண்டிருக்கின்றார்கள். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஆனால், அரசாங்கத்திடமிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு வரி விலக்கு என்ற பெயரில் 600 லட்சத்தை லஞ்சமாக பெற்றுள்ளனர். எனினும், போரினால் பாதிக்கப்பட்டுள்ள பலர் இன்று ஒருவேளை உணவுக்காக போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நிலைக்கு காரணம் யார்..? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு அரசியல் தெரியாது.
அவருக்கு அரசியல் தெரியுமாக இருந்திருந்தால், வேலையில்லாமல் பலர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டதாக அவர் கூறியிருக்க மாட்டார் என அவர் மேலும் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten