அதேபோல தற்போது என்னுடைய மக்களின் பிரச்சினைகளுக்காக போராடும் என்னை இனவாதி என பட்டிப்பளை பிரதேச செயலாளரும், மட்டக்களப்பு கிராம உத்தியோகத்தரும் மக்களிடம் பொய்கதைகளை சித்தரித்து வருகின்றனர்.
இதன் காரணமாக வெளிநாட்டில் உள்ளவர்கள் புலி கொடியை ஏந்தியவாறு என்னை கொலை செய்வேன் என இலட்சக் கணக்கான குறுந்தகவல்களை அனுப்புகின்றனர்.
எனது மக்களுக்காக நான் இறப்பதற்கும் தயாராக உள்ளேன். இவ்வாறான செயற்பாடுகளுக்கு அஞ்சியவன் நானல்ல என்று மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி சுமனரத்த தேரர் தெரிவித்துள்ளார்.
கிராமசேவகரின் ஊடாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஆறு சிங்கள குடும்பங்களுக்கு நீதியை பெற்றுத்தருமாறு வலியுறுத்திய மகஜர் ஒன்றை மட்டுக்களப்பு அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் கையளித்து விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நான் இனவாதியோ மதவாதியோ அல்ல. தமிழ் மக்களுக்கு எதிரானவனும் அல்ல. சிங்கள மக்களின் உரிமைகளுகாகவே போராடுகிறேன்.
நான் இனவாத ரீதியில் செயற்படுவதாக செய்திகள் வெளியிடப்படுகின்றன. என்னை கொலை செய்யப்போவதாக வெளிநாட்டில் உள்ளவர்கள் இலட்சக்கணக்கான குறுந்தகவல்களை அனுப்புகின்றனர்.
பான் கூட வாங்க முடியாத இந்த அப்பாவி மக்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்து அம் மக்களை காணியிலிருந்து வெளியேறுமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவர்களுக்கு எந்தவிதமான உதவிகளும் இல்லாததால் நானே அவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளேன். இவ்வாறு உதவி இன்றி இருப்பவர்களிடம் தற்போது இருக்கும் வீட்டையும் விட்டு வெளியேறுமாறு கூறினால் அவர்கள் எங்கு செல்ல முடியும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
நியாயம் பெற்றுக் கொடுக்க நினைத்ததினாலேயே நான் இன்று உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றேன். நான் இனவாதியும் அல்ல மதவாதியும் அல்ல.
என்னை கொலை செய்தாலும் பரவாயில்லை. ஆனாலும் எனது மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். தற்போது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஆறு குடும்பத்தவர்களுக்கும் தாங்கள் நியாயம் வழங்க வேண்டும்.
தங்களை நான் அச்சுறுத்தவில்லை. மாறாக கோரிக்கையாகவே முன்வைக்கின்றேன். இப்பகுதியில் தமிழ், முஸ்லிம் அதிகாரிகளே அரச சேவையில் உள்ளனர்.
சிங்கள அரச அதிகாரிகள் இல்லை என்பதால் எம்மக்களுக்கும் பாரபட்சம் இன்றி நீங்கள் உதவ வேண்டும். இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை இந்த அப்பாவி மக்களுக்கு எதிராக யாரும் செயற்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
எனினும், விகாராதிபதியின் ஆக்ரோஷமான விளக்கத்தை அவதானித்துக் கொண்டிருந்த அரச அதிபர் அமைதியாக நின்றிருந்தவாறு மகஜரை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten