கிளிநொச்சி – பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த நடராஜா சபேஸ்வரன் கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து சென்னைக்குச் சென்ற நிலையில், இந்திய அதிகாரிகளுக்கு அறிவித்து திருப்பி அழைத்துக்கொண்டுள்ள நிலையிலேயே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி தெரிவிக்கின்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான நடராஜா சபேஸ்வரன், இறுதிக்கட்ட யுத்தத்தின் இறுதி நாட்களான 2009 ஆம் ஆண்டு மே மாதம் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்திருந்தார்.
யுத்தத்தின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இறுதி யுத்தம் இடம்பெறுவதற்கு சில வருடங்களுக்கு முன்னரே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து விலகியிருந்த சபேஷ்வரன், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த அனைவரும் சரணடைய வேண்டும் என இராணுவம் விடுத்த உத்தரவிற்கு அமையவே சரணடைந்திருந்தார்.
இதற்கமைய ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஜோசப் முகாம் மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது தாய் நீதிமன்றில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவிற்கு அமைய நீதிமன்றினால் கடந்த 2010 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து திருமணம் முடித்து வாழ்ந்து வந்த நிலையில் உறவினரது திருமணமொன்றில் கலந்துகொள்வதற்காக கடந்த ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி இந்தியாவுக்கு சென்றபோதே நடராஜா சபேஸ்வரன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான நடராஜா சபேஸ்வரனை நாடு கடத்துமாறு இந்திய அதிகாரிகளுக்கு அறிவித்ததற்கான காரணம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டதற்கான காரணம் குறித்தும் இதுவரை தமக்குத் தெரியப்படுத்தவில்லை என அவரது மனைவி தெரிவிக்கின்றார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கடந்த ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி மாலை 5 மணிக்கு புறப்படவிருந்த விமானத்தில் பயணம் செய்ய விருந்த சபேஸ்வரனை, கடவுச்சீட்டில் தவறு இருப்பதாக தெரிவித்து தடுத்து நிறுத்திய அதிகாரிகள், இரவு 11 மணிக்கே சென்னை செல்ல அனுமதித்துள்ளனர்.
எனினும் சென்னை விமான நிலையத்தைச் சென்றடைந்த நடராஜா சபேஷ்வரனிடம், ஸ்ரீலங்கா விமான நிலைய அதிகாரிகள் திருப்பி அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அறிவித்த இந்திய அதிகாரிகள், அவரை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதற்கமைய ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி அதிகாலை, கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் சபேஷ்வரனை கைதுசெய்து தடுத்துவைத்திருக்கின்றனர்.
போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில், சபேஷ்வரன் மோசமான சித்திவதைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கும் அவரது மைத்துனர், எவ்வித காரணமுமின்றி மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளமை பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளதாகவும் கூறுகின்றார்.
Geen opmerkingen:
Een reactie posten