ஏற்கனவே இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பில் புத்தகம் ஒன்றினை வெளியிட்டு பல்வேறு விதமான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்த மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன மீண்டும் வெளிவந்துள்ளார்.
அண்மையில் குளோபல் இலங்கையர்கள் கருத்துக்களம் எனும் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட இவர் உரையாற்றும் போது,
இலங்கையில் தற்போது நல்லிணக்கம் இருக்கின்றதா என்பது சந்தேகமே. வடக்கிற்கு ஒரு நீதியும் தெற்கிற்கு ஒரு நீதியும் காணப்படுகின்றது.
அதிகாரப்பகிர்வு வேண்டும் என தமிழ் மக்கள் கேட்கின்றார்கள், அவர்களிடம் நான் ஒன்று கேட்கின்றேன் எமக்கு கிடைத்து உங்களுக்கு கிடைக்காதது என்ன?
எதற்காக வடக்கிற்கு புதிய அதிகார பகிர்வு கொடுக்கப்பட வேண்டும் தற்போது அதிகாரம் கொடுப்பதற்கு என்ன அவசியம் வந்து விட்டது அவ்வாறு அதிகாரப் பகிர்வு வேண்டிதானே உயிரிழப்புகள் ஏற்பட்டன.
எதற்காக வேறு அதிகார பலம் அதற்காகதானே நாட்டில் யுத்தம் நிகழ்ந்தது. கைகால்களை இழந்து அங்கவீனர்களாக மாறினர் இராணுவத்தினர். இப்போது அதிகாரப் பகிர்வு கொடுக்கப்பட்டால் யுத்தம் நடைபெற வேண்டிய அவசியமே இல்லை தானே.
யுத்தம் இல்லை நிறைவடைந்து விட்டது குண்டுகள் வெடிக்கவில்லை ஆனாலும் பிரச்சினை என்ன என்றால் உனக்கு உள்ளது எனக்கு இல்லை என நினைப்பதாலேயே ஆகும்.
இதேவேளை கடந்த ஆட்சியாளர்கள் அனைவரும் பிரபாகரன் பேச்சை கேட்க ஆயத்தமாக இருந்தனர். தற்போதைய பிரதமரும் சமாதானத்தை நோக்கியே சென்றனர்.
சுனாமியின் போதும் பெருமளவிளான பணம் விடுதலைப்புலிகளுக்கு கொடுக்கப்பட்டது இதன்போது அன்டன் பாலசிங்கம் பிரபாகரனிடம் “தம்பி நாம் போர் செய்து சாதிக்க முடியாதது தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது.
அதன் காரணமாக யுத்தத்தை நிறுத்தி விடுவோம். அடித்துக் கொள்வதை விடவும் பெரிய பக்கேஜ் தற்போது கிடைத்துள்ளது நிறுத்திக்கொள்வோம்” என்றார்.
ஆனாலும் பிரபாகரன் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை அதுவே எமக்கு சாதகமாகிவிட்டது. மகிந்த ராஜபக்ச என்பவர் பலம் மிக்கதோர் தலைவர் ஏனைய தலைவர்களைப்போல் புலிகளின் ஆணைக்கு கீழ் இருந்தவர்கள் அல்ல எனவும் கமால் குணரத்ன தெரிவித்திருந்தார்.
இலங்கையின் அரசியலைப் பொறுத்தவரையில் தற்போது அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் மாற்றங்கள் மூலமாக வெவ்வேறு விதமான கருத்துகள் கூறப்படுகின்றன.
இதன் போது புதிய அரசியல் கட்சி உருவாக்கமும் ஒரு பக்கம் நடைபெற்று வந்து கொண்டிருக்கும் போது இதுவரையில் மௌனமாக இருந்த கமால் குணரத்ன மஹிந்தவிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதே சமயம் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படும் தருவாயில் அதிகாரப்பகிர்வு தடுக்கப்பட வேண்டும் என்ற வகையில் இவர் கருத்து வெளியிட்டுள்ளது சந்தேகத்திற்கு இடமாகின்றது எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை நான் அரசியலில் ஈடுபட மாட்டேன் எனவும், யுத்த இரகசியங்களை வெளியிட மாட்டேன் எனத் தெரிவித்தவருமான கமால் தற்போது விடுதலைப்புலிகளைப் பற்றியும் அரசியலைப் பற்றியும் பேசி வருவது அரசியல் பிரவேசத்திற்கான அடித்தளமா என தென்னிலங்கை புத்திஜுவிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மஹிந்த அணியினர் புதிய கட்சி ஆரம்பமான நிலையில் இவரது மீள் பிரவேசம் அரசியல் உள்நோக்கத்திற்காக இருக்கலாம் அல்லது விடுதலைப்புலிகள் பற்றியும் இறுதி யுத்தம் பற்றியும் வெளிப்படுத்துவதற்காக இருக்கலாம் எனவும் கருத்துகள் வெளிவந்துள்ளன.
எவ்வாறாயினும் இவரது மீள் பிரவேசத்திற்கும் மஹிந்தவின் அரசியல் காய் நகர்த்தல்களுக்கும் தொடர்பு உண்டு என்றே அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இந்த நிகழ்விற்கு ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது. அரசிற்கு எதிரான புதுசக்திகளை ஒன்றிணைக்கும் வகையில் இரகசியமாக இந்த கூட்டம் நடைபெற்றிருக்கலாம் எனவும் தென்னிலங்கை அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Geen opmerkingen:
Een reactie posten