இலங்கையில் சித்திரவதை செய்யப்பட்ட கனேடியருக்கு நட்ட ஈடு: ஐ.நாடுகள் சபை உத்தரவு
கனடாவின் டொரன்டோவில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்த போது சித்திரவதை செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டமை தொடர்பில் நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு தீர்ப்பளித்துள்ளது.
இந்த நிலையில் ஜெனீவா குழுவின் தீர்ப்பை இலங்கை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிக்கான கனேடிய நிலையத்தின் சட்டத்துறை பணிப்பாளர் மெட் இசென்பிராட் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,
2007ஆம் ஆண்டு இலங்கைக்கு திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் ரோய் சமாதானம்(46) இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.
அந்த நேரத்தில் அவரது வீட்டை முற்றுகையிட்ட பொலிஸாரால், சிங்கப்பூரில் இருந்து நண்பரால் வர்த்தகத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த 600 கையடக்கத் தொலைபேசிகளை ரோயிடம் இருந்து கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து பொலிஸாரால் கப்பம் கேட்கப்பட்ட போதும் கொடுக்க மறுத்தமையினால், “கனேடிய புலி” என்று அடையாளப்படுத்தப்பட்டு ரோய் சித்திரவதை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், இது தொடர்பாக இலங்கைப் படையினராலேயே தாம் சித்திரவதைகளுக்கு உட்பட்டதாக மூன்று வருடங்களுக்கு முன்னரே கனடாவில் முறைப்பாடு மூலமாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவிடம் தெரிவித்திருந்ததாக த நசனல் போஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.