தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 1 september 2013

நவநீதம்பிள்ளையின் கருத்துக்கள் நடுநிலையானவை: ஜெனிவாவுக்கான முன்னாள் தூதுவர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை வெளியிட்டுள்ள கருத்துக்கள் நடுநிலையானவை எனவும் அவர் இம்முறை போர்க்குற்றம் என்ற மந்திரத்தை உச்சரிக்கவில்லை என்றும் ஜெனிவாவுக்கான முன்னாள் தூதுவரும் இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்த நவநீதம்பிள்ளை கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிட்டிருந்த கருத்துக்கள் தொடர்பில் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
விடுதலைப்புலிகள் அமைப்பு தீவிரவாத அமைப்பு எனவும் அந்த அமைப்புக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பில் எந்த உதவியும் கிடைக்காது எனவும் நீலன் திருச்செல்வத்தை கொலை செய்தது புலிகள் அமைப்பு எனவும் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்தார்.
மனித உரிமை ஆணையாளர் விடுதலைப்புலிகள் தொடர்பில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார் என்பதை சகலரும் மறந்து விடுகின்றனர்.
நவநீதம்பிள்ளையை இலங்கைக்கு அழைத்து, அவர் பிரதேசங்களுக்கு விஜயம் செய்து நிலைமைகளை கண்டறிய அவருக்கு வாய்ப்பை வழங்கியதானது இலங்கை அரசின் வெளிப்படைதன்மையை காட்டியுள்ளது.
அவர் இலங்கைக்கு வந்து பெற்றுக்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் அவர் கூறியவற்றுக்கு அரசாங்கம் பதிலை வழங்க வேண்டும்.
பிள்ளை. ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த விடயங்களை ஏற்றுக்கொள்வதானால் ஏற்றுக்கொள்ளவும் நிராகரிப்பதானால் அதற்கான காரணங்களை அரசாங்கம் முன்வைக்க வேண்டும்.
அவரது கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போது, அரசாங்கம் அனைத்தையும் நிராகரித்தால், அதனை மனித உரிமை ஆணைக்குழுவில் உள்ள சகல உலக நாடுகளும் ஏற்றுக்கொள்ளாது.
நவநீதம்பிள்ளை கடந்தகாலத்தை போல், போர்க்குற்றம் என்ற மந்திரத்தை உச்சரிக்கவில்லை எனவும் போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்த ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் எனவும் கூறவில்லை.
நடந்துள்ள குற்றங்கள் தொடர்பில் தேசிய ரீதியில் நடத்தப்படும் விசாரணைகளுக்கு தேவையானால் மனித உரிமை ஆணைக்குழு உதவும் என்று அவர் கூறியுள்ளார்.
அப்படியான தேசிய ரீதியில் விசாரணைகளை நடத்தாவிட்டால், அரசாங்கத்தின் போராட்ட கோஷம் சர்வதேசத்தில் எடுப்படாது என அவர் தெரிவித்தமையானது இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகளுக்கான ஏதுநிலைகள் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
இதனடிப்படையில் இலங்கை அரசாங்கத்திற்கு தற்போது முதல் எதிர்வரும் மார்ச் மாதம் வரை கால அவகாசம் இருக்கின்றது. இதனால் நீதிமன்ற செயற்பாட்டின் ஊடாக அரசாங்கம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது சிறந்தது.
இலங்கைக்கு எதிராக எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் யோசனை ஒன்று கொண்டு வருவதைத் தவிர்க்க இது போதுமானதாக இருக்கும் என்றார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryJTVMWmu3.html#sthash.DCNOjdvL.dpuf

Geen opmerkingen:

Een reactie posten