வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றவர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்ட கூட்டமைப்பின் ஆதரவாளர்களை இராணுவத்தினர் அச்சுறுத்தியுள்ளனர்.
இதனால் கிளிநொச்சி மாவட்டத்தில் சுதந்திரமாக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட முடியவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாண சபைத் தேர்தலில் எமது கட்சியின் சார்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களான குருகுலராசா, பசுபதிப்பிள்ளை, அரியரத்தினம் ஆகியோருக்கு சார்பாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற எமது கட்சி உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் இராணுவத்தினர் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக நேற்றுக் காலை திருநகர், கணேசபுரம் பகுதியில் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த எமது கட்சி ஆதரவாளர்களை, தம்மை இராணுவத்தினர் என அடையாளப்படுத்திய சிலர் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனத் தடுத்துள்ளனர்.
இவ்வாறு தடையினைப் பிரயோகித்த குறித்த நபர்களுடன் நான் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு கதைத்த பொழுது அவர்களுக்கு தமிழ் தெரியாதென்ற பதில் எனக்கு கிடைத்தது.
குறிப்பாக எமது கட்சி சார்பாக போட்டியிடுகின்ற குருகுலராசா, பசுபதிப்பிள்ளை, அரியரத்தினம் ஆகிய மூவரின் வெற்றிக்காக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற எமது கட்சி ஆதரவாளர்களையே இராணுவத்தினர் தொடர்ந்தும் அச்சுறுத்தி வருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக நேற்று முன்தினம் எம்மைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட தலைமையகமான அறிவகத்தில் சந்தித்து கலந்துரையாடிய மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்துவிடமும் சுட்டிக்காட்டியுள்ளோம்.
தேர்தல் விதிமுகைளுக்கு முரணாக நெடுந்தீவுப் பகுதியில் எமது வேட்பாளரான விந்தன் கனகரத்தினத்துக்கு ஆதரவாக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த எமது கட்சி ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஏற்பாட்டில் அரசாங்க அதிகாரிகளுக்கு விருந்துபசார நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதேபோல் அண்மையில் நியமனம் பெற்ற முன்பள்ளி ஆசிரியர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சிவில் படையணியினர் போன்றோரை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு குறைந்தது 30 பேரையாவது வாக்களிக்கத் தூண்டுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
இது போன்ற தேர்தல் சட்டவிதிமுறைகளுக்கு முரணான செயற்பாடுகளில் ஆளும் கட்சியினரும், இராணுவத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக தேர்தல் ஆணையாளரிடமும், தெரிவத்தாட்சி அலுவலரிடமும், பொலிஸாரிடமும் முறையிட்டுள்ளோம். ஆனால் இத்தகைய சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்த எந்தவொரு நடவடிக்கையும் இவர்கள் இன்னமும் எடுக்கவில்லை என்றார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryJTVMWmr4.html#sthash.PdgjCuCD.dpuf
Geen opmerkingen:
Een reactie posten