லண்டனில் ஈழத் தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த சிங்கள இராணுவத் தளபதியை நாடு கடத்த வேண்டும் என வைகோ கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இலங்கையின் சுதந்திர நாளான பெப்ரவரி 4ஆம் திகதி பிரிட்டனில் உள்ள இலங்கைத் தூதுவர் அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.
தமிழீழத்தில் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதைக் கண்டித்தும், இனப் படுகொலைக்கு நீதி கேட்டும் பிரிட்டன் இலங்கை தூதராலயம் முன்பு ஆயிரக்கணக்கான புலம்பெயர் ஈழத் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த இலங்கைத் தூதரக இராணுவப் பாதுகாப்பு ஆலோசகர் பிரியங்க பெர்னான்டோ, ஈழத் தமிழர்களைப் பார்த்து, “கழுத்தை அறுத்து விடுவேன்” என்று சைகை காட்டினார்.
இதைக் கண்டு கொதித்து எழுந்த ஈழத் தமிழர்கள், மிரட்டல் விடுத்த இலங்கை இராணுவ அதிகாரி பிரியங்க பெர்னான்டோவை பிரிட்டன் அரசு பணி நீக்கம் செய்து பிரிட்டனை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப் படுகொலையில் பிரியங்க பெர்னான்டோ, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய கொலைகாரன் ஆவார்.
2008-ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்டப் போரின்போது, முல்லைத் தீவில் உள்ள மருத்துவமனைகள் மீது வெடிகுண்டுகள் வீசி நோயாளிகளையும், பொது மக்களையும் கொன்ற இலங்கை இராணுவத்தின் 59ஆவது பிரிவுக்கு பிரியங்க பெர்னான்டோ தான் தலைமை வகித்தவர்.
முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழர்கள் படுகொலையில் இவருக்குத் தொடர்பு இருக்கிறது. போர்க் குற்றம் செய்து, ஈழத் தமிழர் இனப் படுகொலையை முன்நின்று நடத்தியமைக்காக இலங்கை இராணுவத் தளபதி பிரியங்க பெர்னான்டோவுக்கு 2014 இல் அதிபர் மகிந்த ராஜபக்சே, பிரிகேடியர் என்ற உயர் விருது அளித்து பாராட்டியிருக்கிறார்.
ஈழத் தமிழர் இனப் படுகொலைக்காகப் பன்னாட்டு நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டிய மகிந்த ராஜபக்சேவுடன் பிரியங்க பெர்னான்டோ போன்ற சிங்கள இராணுவத் தளபதிகளும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ஆவர்.
இத்தகைய கொலைக் குற்றவாளி, பிரிட்டனில் உள்ள இலங்கைத் தூதுவர் அலுவலகத்தின் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டது இலங்கை அரசின் கோர முகத்தை வெளிப்படுத்துகிறது. இது மன்னிக்கவே முடியாத மாபாதக நடவடிக்கையாகும்.
புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் தேசிய சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தின் நியாயத்தையும், தமிழீழத்துக்காக நடத்தப்படும் அறவழி ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தையும் பிரிட்டன் அரசு பரிவுடன் உணர்ந்து கொண்டிருக்கிறது.
கடந்த 30 ஆண்டு காலமாக இலங்கை சிங்களப் படைகளின் கொலைவெறியிலிருந்து தப்பி ஈழத் தமிழர்கள் பிரிட்டனுக்கு ஏதிலிகளாக வந்தபோது அரவணைத்துக் கொண்டது பிரிட்டன்.
அத்தகைய நாட்டின் தலைநகரம் லண்டனில், ‘ஈழத் தமிழர்களைக் கழுத்தை அறுப்பேன்’ என்று மிரட்டல் விடுக்கும் இலங்கை இராணுவத் தளபதி பிரியங்க பெர்னான்டோ இலங்கையில் அப்பாவி ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடந்த போரில் எப்படியெல்லாம் தமிழ் மக்களை நர வேட்டையாடி இருப்பார் என்பதை உணர முடிகிறது.
லண்டனில் ‘ஈழத் தமிழர்களைக் கொல்வேன்’ என்று மிரட்டல் விடும் வகையில், சைகை காட்டிய இலங்கை இராணுவ அதிகாரி பிரியங்க பெர்னான்டோவை பிரிட்டன் உடனடியாக நாடு கடத்த வேண்டும்.
இந்திய அரசு, இச்சம்பவத்திற்குக் காரணமான சிங்கள இராணுவ அதிகாரி பிரியங்க பெர்னான்டோவின் நடவடிக்கைக்காக சிங்கள அரசுக்குக் கடும் கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/statements/01/173501?ref=home-top-trending
Geen opmerkingen:
Een reactie posten