லண்டனில் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவை உடன் பதவிநீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி எதிர்வரும் 9ஆம் திகதி லண்டனில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது.
தமிழ் ஒற்றுமை, (Tamil Solidarity) பிரிட்டனின் தமிழ் இளைஞர்கள் அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் இந்தப் போராட்டதை முன்னெடுக்க உள்ளன.
குறித்த போராட்டமானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்னால், ஆரம்பித்து வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்துக்கு முன்னால் நிறைவடையும் என தமிழ் ஒற்றுமை அமைப்பு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
குறித்த பிரிகேடியர் பதவி நீக்கப்பட்டு, பின்னர் இலங்கை ஜனாதிபதியின் தலையீட்டுடன் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டதை அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
காணொளி காட்சி ஆதாரங்களை புறக்கணித்து, விசாரணைகளை முன்னெடுக்காததன் ஊடாக ராஜபக்ஷ ஆட்சியின் தடத்தையே இந்த அரசாங்கமும் பின்பற்றுகின்றது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவை உடன் பதவி நீக்குவதுடன், அவருக்குரிய இராஜதந்திர சிறப்புரிமைகளை நீக்குதல், போர்க்குற்றம் தொடர்பான சுதந்திரமான விசாரணை, காணி அபகரிப்பை நிறுத்துதல், அரசியல் கைதிகள் விடுதலை, நல்லாட்சி மீது நம்பிக்கை இல்லை முதலான மேலும் சில விடயங்களை உள்ளடக்கி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து பிரிகேடியர் சைகை செய்யும் காணொளியை தமிழகத்தின் ஊடகமொன்று வெளியிட்டுள்ளதாகவும், அதனை ஒரு இலட்சம் பேர் பார்த்துள்ளதுடன், 4 ஆயிரம் பேர் பகிர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் பிரிட்டனில் முறைப்பாடு செய்வதற்காக ஆயிரம் கையொப்பங்களை திரட்டும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ் ஒற்றுமை அமைப்பு தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/community/01/173569
Geen opmerkingen:
Een reactie posten