யுத்தத்தால் இடம்பெயர்ந்து தஞ்சம் நிராகரிக்கப்பட்ட 25வருடம் ஐரோப்பாவில் வாழும் ஒருவனின் நாடு திரும்புவதற்கான காரணக்கடிதம்!
மதிப்புக்குரியோருக்கு
நான் இலங்கை செல்ல எடுத்த முடிவு உறுதியானது,ஆனால் நானாக அங்கு பாதுகாப்பு இருப்பதாக சொல்லி செல்லவில்லை!
அங்கு கட்டாயப்படுத்தி அனுப்பப்படுவீர்கள் என்று IND யால் சொல்லப்பட்டதால் இந்த முடிவை எடுத்தேன்,அத்துடன் பல காலமாக தொடர்ந்து எந்த உதவியும் அற்ற நிலையில் சட்ட விரோதமாக உயிருக்கு அஞ்சி பசி,படுக்க இடமற்ற நிலையில் வாழ்வது எனக்கு பிடிக்கவில்லை!இதை விட உயிர் ஆபத்தான நாட்டுக்கு செல்வதே எனக்கு கௌரவம் என எண்ணியதால் போக சம்மதித்துள்ளேன்!
இலங்கையில் எனது உயிருக்கு ஆபத்து இல்லை,தமிழருக்கு அங்கே பாதுகாப்பு உண்டு என்று சொல்லும் IND எனக்கு அங்கு பாதுகாப்பு தருவீர்களா என கேட்டபோது மறுத்துவிட்டது,ஆனால் நாடு நானாக போகாவிட்டால் கட்டாயப்படுத்தி அனுப்புவோம் என்று சொன்னதுடன் சிறை வைத்து அனுப்பவும் 2006 இல் முயன்றது!அதன் பின் அனுப்பமுடியாது போகவே தெருவில் விட்டுவிட்டது!எந்த மனிதாபிமான உதவியும் பெறமுடியாமல் போய் பிச்சை எடுத்து வாழும் நிலையில் பலகாலமாக இங்கு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து சலித்துப்போனதால் மனநிலை பாதிக்கும் நிலைக்கு ஆளாவதால் அவற்றை தவிர்க்கவும் மானம் உயிரை விட பெரிது என்று உணர்ந்ததாலும் நாடு திரும்பும் முடிவை எடுத்துள்ளேன்!
எனக்கு பிரச்சனை,ஆபத்து இல்லை என்பவர்கள் அங்கு சென்றதும் அது உள்நாட்டுவிவகாரம் நாம் தலையிட முடியாது என்பார்கள்,இறந்தால் வருத்தம் சொல்லி ,உதவி செய்கிறோம் என்ற பெயரில் தங்கள் தவறை மறைப்பார்கள் என்று தெரிந்தும் படுக்கைக்கும் உணவுக்கும் அலைய வைக்கும் இந்த நாட்டை விட்டு செல்வதே நான் மனிதன் என்பதற்கு ஆதாரமாகும் என கருதுவதால் செல்லும் முடிவை எடுத்துள்ளேன்!
நான் திரும்பி செல்வதால் அங்கு தமிழருக்கு பிரச்சனை தீர்ந்து உரிமைகள் கிடைத்து விட்டதென்றோ ஆபத்து இல்லையென்றோ அர்த்தமில்லை!என்னால் இப்படி சட்டவிரோதமாக அச்சத்துடன் ஒவ்வொரு நாளும் வாழ முடியவில்லை!அகதியை மனிதநேயமற்று அலைக்கழிக்கும் இடத்தில் இருப்பதை விட மனிதநேயமுள்ள எதிரியிடம் அடங்கி இருப்பது நல்லது என கருதுவதால் செல்லும் முடிவை எடுத்துள்ளேன்!
srilankan embassy யில் கூட அங்கு யுத்தமில்லை,ஆனால் கப்பம் கேட்கும் குழுக்கள் ,சட்டவிரோத குழுக்கள் இயங்குகின்றன,அவற்றால் ஆபத்து உள்ளது என்று சொன்னார்கள்!அதை சொன்னால் உனது தனிப்பட்ட பிரச்சனை சொல்,ஆதாரம் உள்ளதா என கேட்டு அசிங்கப்படுத்தும் நிலை வரும்,அதை தவித்து ஆபத்திடம் நானாக செல்வதே இந்த கொடிய வாழ்வுக்கு முடிவாகும்!அதனால் செல்லும் முடிவை எடுத்துள்ளேன்!
இதுதான் நான் செல்லும் காரணம்!
நன்றி
இப்படிக்கு
சுயபுத்தியுடன்
Geen opmerkingen:
Een reactie posten