ஆனால் இன்றும் இந்தக் கதறல்கள் தொடரக் கூடிய சாத்தியக் கூறுகளே அதிகமாக காணப்படுகின்றது என்பதும் மறைமுகமாக அச்சுறுத்தல் விடுத்துக் கொண்டு வரும் ஓர் செய்தி.
காரணம் இல்லாமல், பல (தமிழ்) இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கொடூரமான சித்திரவதைக்கு பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்ட கதைகள் பல. அத்தோடு விடுவிக்கப்படாமல் காணாமல் ஆக்கப்பட்ட பட்டியலில் உள்ளடக்கி கொல்லப்பட்டவர்களும் பலர்.
இதனை இப்போதைய ஆட்சியாளர்களும் சரி, முன்னைய காலத்தில் பதவி ஆசனங்களை பூர்த்தி செய்த அரசியல் தலைவர்களும் சரி மறுக்க முடியாது. ஆனால் மறைத்து விட முடியும்.
பயங்கரவாதச் தடைச்சட்டம் என்ற ஒன்றே இந்த நிலைமை ஏற்படக் காரணம் என்பதனை அனைவரும் அறிவர். அதேபோல் விடுதலைப்புலிகள் என்ற ஓர் காரணத்திற்காகவே சந்தேகத்தின் பேரில் அப்பாவிகள் பலரும் துன்புறுத்தப்பட்டனர்.
இந்த இடத்தில் இன்றும் விடுதலைப்புலிகளுடனான யுத்தம் நிறைவு பெற்றது என்பதனை இலங்கை முற்றாக ஒப்புக் கொண்டு விட்டதா? என்ற சந்தேகம் கலந்ததோர் கேள்வி இருக்கத்தான் செய்கின்றது.
காரணம் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவு பெற்று விட்டதாக அறிவித்த இலங்கை, அதன் பின்னரும் விடுதலைப்புலிகள் பற்றி பேசுவதனை நிறுத்தவில்லை. இந்த நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் மட்டும் மாற்றத்தினை கொண்டு வந்து விடுமா?
அத்தோடு இந்த பயங்கரவாதச் சட்டத்தின் மூலம் தமிழர்களின் அடக்கு முறைகளும் தொடர்ந்து கொண்டு வருகின்றது என்பதும் மறைக்கப்படும் உண்மையாக எடுத்துக் கொள்ள முடியும்.
வெளிப்படையில் இந்த பயங்கரவாதச் சட்டமானது, அடிப்படை மனித சுதந்திரத்தையும், உரிமைகளையும் மீறுகின்றது என்பது சொல்லித் தெரிய வேண்டிய கட்டாயம் இல்லை.
அந்த வகையில் இலங்கையில் இன்றும் தமிழர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது இந்த பயங்கரவாத தடைச் சட்டம் என்பது வெளியில் வெளிப்படையாக தெரிந்து விடும் ஒன்றல்ல.
உண்மையில் இந்த சட்டமானது மேலோட்டமாக பார்க்கும் போது ஏதோ பயங்கரவாதத்திற்கு எதிராக அமுல்படுத்தப்பட்ட சட்டம் என்று சித்தரிக்கப்பட்டாலும், மறைக்கப்படும் அதன் உள்நோக்கம் மிக மிக அபாயமானது. எதிர்காலத்தில் தமிழர்கள் தலையில் மீண்டும் இடியைப் போடவும் காரணியாக அமைந்து விடும்.
அதாவது சட்ட ஆலோசனைகள் அற்ற வாக்குமூலங்கள், மேற்பார்வைகள் எதுவும் அற்ற நிரந்தர அல்லது நீடித்த தடுப்புகள், பாதுகாப்பு படைக்கு அதி உச்ச அதிகாரம், அனைத்திற்கும் மேலாக வலிந்து காணாமல் ஆக்கப்படவும் (கடத்தப்படவும்) சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படவும் சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொள்ளுதல்,
மற்றும் எதிர்ப்பு போராட்டத்தை கட்டுப்படுத்தல், பகிரங்கமாக பேச்சு சுதந்திரத்தினை பறித்தல், பொதுக் கூட்டங்களை கூட்டுதல் (கூடுதல்) போன்றவற்றை அடக்கி ஒடுக்கவுமே இந்த சட்டம் நடைமுறையில் இருந்து வருகின்றது என்பது பலருக்கு தெரியாது.
அதேபோல் இதில் உள்ள இன்னுமோர் விடயம் இந்த சட்டம் மூலம் ஒட்டுமொத்த காரணிகளும் அழுத்தமாக மட்டுமல்ல, முற்றிலுமாக பிரயோகிக்கப்பட்டது தமிழர்களுக்கு மட்டுமே என்றும் கூற முடியும். இலங்கையில் பார்வைக்கு தமிழர்கள் தீவிரவாதிகளா? என்ற கேள்வியையும் இது எழுப்பிவிடும்.
இந்தக் கருத்தினை கடந்து வந்த பாதை ஊடாகவும், இப்போது தொடர்ந்து செல்லும் பாதை ஊடாகவும் அவதானித்து அறிந்து கொள்ள முடியுமானதாகவே இருக்கும்.
காரணம் உள்நாட்டு யுத்த காலப்பகுதியில் இந்த சட்டத்தினால் வாழ்விழந்துப் போனது தமிழர்கள் மட்டுமே என்பதும் மறுக்க முடியாதோர் வாதம் என்பது உண்மை.
இன்றும் அதாவது யுத்தம் நிறைவடைந்த பின்னரும், தேசிய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனச் சொல்லும் காலகட்டத்திலும் ஏன் இந்த பயங்கரவாதச் தடைச்சட்டம் நீக்கமோ, மாற்றமே ஏற்படுத்தப் படவில்லை என்பது பிரதான கேள்வி.
நடப்பு அரசு பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றம் அல்லது மீள் பரிசீலனை செய்வதாக கூறியது. எனினும் அதன் அடுத்த கட்ட நகர்வு எவ்வாறு அமைந்துள்ளது என்பது இப்போதும் மறைக்கப்படும் விடயமாகவே காணப்படுகின்றது.
எனினும் திருத்தங்கள் செய்யப்பட்ட புதுச் சட்டம் வருவது என்பது விடவும் மிக ஆபத்தானது, அதாவது சேற்றில் இருந்து மீண்டு, முதலை வாயில் சிக்கிக் கொள்வதனை போன்றதோர் விடயமாகவே அமையும் தமிழர்கள் நிலை என்றும் கூறப்படுகின்றது.
காரணம் இப்போது காணப்படும் சட்டத்தினை விடவும் இறுக்கமான சட்டமே பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடாக கொண்டு வரப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மகிழ்ச்சியான விடயமாக இந்தச் சட்டம் இன்னும் உத்தியோக பூர்வமாக அமுல்படுத்தவில்லை. எனினும் பாராளுமன்றத்தில் இது குறித்த ஆவணம் மேற்பார்வை குழுவின் முன்னிலையில் உள்ளதாகவும் தகவல்கள் உண்டு.
அதேபோன்று இந்த பயங்கரவாதச் தடைச் சட்டத்தினை பரிசீலனை செய்யுமாறும், திருத்துமாறும் சர்வதேச ரீதியான அழுத்தங்களும் கூட இலங்கைக்கு தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கின்றன.
ஒருவகையில் இதுவும் போர்க்குற்ற விசாரிப்பு போன்றதோர் கண்துடைப்பு நாடகமாகத்தான் இருக்க முடியும். என்றாலும் அரசு அவற்றினை கணக்கில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.
காரணம் இந்த ஓர் சட்டம் மூலமாக இலங்கை சாதித்துக் கொள்ள வேண்டிய விடயங்கள் இன்னும் பல உள.
அந்தவகையில் ஒட்டுமொத்தமாக தமிழர்களை கட்டுப்படுத்துவதற்காகவும், அடக்குவதற்காகவுமே இந்த சட்டத்தினை இன்றும் இலங்கை ஆட்சியாளர்கள் அமுலில் வைத்துள்ளார்கள் என்பது அத்தனை எளிதில் வெளியில் தெரிந்து விடாது.
காலம் காலமாக இலங்கையில் இந்தவோர் சட்டத்தினால் வடக்கு கிழக்கு மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள தமிழர்கள் சித்திரவதைகளையும் மறைமுக அடக்கு முறைகளையும் அனுபவித்துக் கொண்டே வந்தனர்.
விடுதலைப்புலிகளுடனான ஆயுதப்போர் மௌனிப்பதற்கு முன்னர், நாடு முழுவதும் பல இடங்களிலும் இருந்து விசாரணை என்ற பெயரில், பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் கீழ் (வலுக்கட்டாயமாக) அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள்.,
தலைகீழாக தொங்கவிடப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு அவர்களின் விருப்பத்திற்கும் மாறாக ஒப்புதல் வாக்கு மூலங்கள் எடுத்துக் கொள்ளப்பட்ட சம்பவங்கள் பல.
அவற்றிலும் வேதனையானது தமிழர்கள் புரிந்து கொள்ள முடியாத சிங்கள மொழியில் அமைந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் சித்திரவதை தாக்க முடியாமல் கையெழுத்திட்டமை போன்ற சம்பவங்களே.
இன்றும் இந்த சித்திரவதைகளினால் பாதிப்படைந்த குடும்பங்கள் ஏராளமான இருக்கின்றன. அவர்களுக்கு என்ன தீர்வு என்பது தொடர்பில் அரசு அக்கறையற்ற நிலை என்பது இப்போது அல்ல எப்போதுமே மாற்றமடையாது.
1978ஆம் ஆண்டு முதலாக இலங்கையில் நடைமுறையில் இருக்கும் இந்த சட்டம் தமிழர்களுக்கு எதிராக தசாப்தங்கள் மூன்றினையும் விழுங்கிவிட்டு வெற்றியோடு நிற்கின்றது.
அதே போன்று இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு குரல்கள் பல மட்டத்தில் இருந்தும் வெளிவந்தாலும், தேசிய பாதுகாப்பு என்றதோர் கட்டுக்குள் பயங்கரவாத சட்டத்தினை இலங்கை ஆட்சி (கள்) வைத்திருப்பதோடு,
அதன் ஊடாக வெளிப்படையாக, வடக்கு கிழக்கில் இராணுவத்தை நிலை நிறுத்தி வைத்திருப்பதனையும், பௌத்த மயமாக்கல் செயற்பாட்டையும் நேர்த்தியாக செய்து கொண்டு வருகின்றது என்பதும் மறைக்கப்படும் உண்மை.
நாட்டில் பாதுகாப்பினை பேணிக்காப்பது அரசின் கடமை. அது எந்த வகையிலும் குற்றமாகாது. ஆனால் அதன் உள்நோக்கம் தமிழர் அடக்கு முறை என்பதனை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தனி மனிதனுக்கு தனி மனிதனே குற்றமளிக்க முடியாது என்கின்ற காரணத்தினாலேயே சட்டங்கள் அமைக்கப்பட்டன என்றும் கூறமுடியும்..,
என்றாலும் பொதுமக்களின் சுதந்திரத்தை பறிக்கும் வகையில், அத்தோடு மறைமுகமான அடக்கு முறையினைக் செய்து வரும் வகையில் ஓர் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறையில் செயற்பட்டு கொண்டு இருக்குமானால் அது வேதனையானது மட்டுமல்ல உரிமை மீறலும் கூட.
இன்றும் எந்தவிதமான குற்றங்களும் நிரூபிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டவர்கள் பலர், குற்றமே இல்லாமல் சித்திரவதை அளிக்கப்பட்டு அதனால் பாதிப்படைந்தவர்களும் பலர்.
இவற்றுக்கு பதில் கூறப்போகின்றவர்கள் யார்? இந்த பயங்கரமான பயங்கரவாதச் சட்டத்தில் இருந்து தமிழர்கள் மீட்டு எடுக்கப்போகின்றவர்கள் யார்?
இப்போதைய ஆட்சியாளர்களா? அல்லது எப்போதோ வரப்போகும் ஆட்சியாளர்களா? பதில்கள் இல்லை. என்றாலும் முத்தசாப்தங்களுக்கு மேலாக நடைபெறாத திருத்தம்.,
அல்லது யுத்தம் நிறைவுற்ற பின்னரும் மாற்றமடையாத சட்டம். இனிமேலும் மாற்றம் பெறும், அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்பதும், இப்போதல்ல எதிர்கால இலங்கை குடிகளுக்கும் (தமிழர்களுக்கும்) சந்தேகமாகவே காணப்படும் என்பது உறுதி.
இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Mawali Analan அவர்களால் வழங்கப்பட்டு 21 May 2017 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Mawali Analan என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.
http://www.tamilwin.com/articles/01/146450?ref=rightsidebar-article
Geen opmerkingen:
Een reactie posten