சுவிஸ் நாடானது இலங்கை அரசுடன் “இடப்பெயர்வு தொடர்பானகூட்டாண்மை- Migrationsabkommen” எனும் உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளது.
இதனூடாக இலங்கையில் ஓர் சாதாரண சூழல் வழக்கத்திலுள்ளது போன்ற எண்ணக்கருவை உருவாக்கியுள்ளது.
இந்த நிலைப்பாடானது முற்றிலும் உண்மைக்கும், யதார்த்தத்திற்கும் அப்பாற்பட்டதாகும். இந்த நிலைப்பாட்டின் பிரகாரம் பல தமிழர்கள் நாடு கடத்தப்படுகின்றனர்.
இவ் ஒருதலைப்பட்சமான நிலைப்பாட்டை சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் முற்றாக நிராகரிக்கின்றோம்.
போருக்கு பின்னரான இன்றைய காலப்பகுதிகளிலும், தமிழ் பகுதிகள் இலங்கை இராணுவத்தால் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் வாழும் நிலங்கள் பறிக்கப்பட்டும் வருகிறது.
பறிக்கப்பட்ட நிலப்பரப்புக்கள் இராணுவ நோக்கங்களுக்கான பொருளாதாரத்தை ஈட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
சமபொழுதில் சுவிட்சர்லாந்து உட்பட உள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா நிறுவனங்களிற்கும், முதலீட்டாளர்களிற்கும் புதிய விடுதிகள் மற்றும் வர்த்தக மாளிகைகள் நிறுவ குத்தகைக்கு விடப்படுகிறது.
அதே சமயம்!, சிங்கள குடியேற்றக்காரர்கள் (வர்த்தகர்கள், விவசாயிகள், மீனவர்கள், ஓய்வு பெற்ற இராணுவத்தினர், பௌத்த துறவிகள்) ஒரு பெரிய அளவில் திட்டமிட்டு குடியேற்றப்படுகின்றனர்.
இதன் விளைவாக ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த தமிழ் குடும்பங்கள் அவர்களது சொந்த வீடுகளுக்கு திரும்ப முடியாமலும் அவர்களது வாழ்வாதரத்திற்கான தொழில்களையும் மேற்கொள்ள முடியாமலும் உள்ளனர்.
அவர்களின் பாரம்பரிய தொழில்கள் அவர்களுடைய இருப்பிடத்தை மையப்படுத்தி அமைந்திருப்பதனால் அவர்களின் வாழ்வாதார நிலையும், இருப்பும் இராணுவ ஆக்கிரமிப்பால் ஆபத்திற்குள்ளாகியுள்ளது.
தமிழ் பேசும் சமூகம் மத்தியிலும், உலகளாவிய மனிதாபிமானத் தளங்களிலும், மானுடவியல் மேதைகள் மற்றும் சட்டத்தரணிகள் மட்டத்திலும் இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ச்சியான கட்டமைப்பு சார் இனவழிப்பை எதிர்கொள்கின்றார்கள் எனும் கருத்துக்கள் வலுப்பெறுகிறது. திட்டமிட்ட கட்டமைப்பு சார் தமிழினவழிப்பு என்பது யுத்தத்தின் கடைசி எட்டு மாதங்களில் மட்டும் காணாமல் அல்லது கொலைசெய்யப்பட்ட 146,679 தமிழ் மக்கள் மட்டுமல்ல தமிழ் இனத்தின் முழு அடையாளத்தையும் முறைப்படுத்தி அழிப்பதேயாகும். இது பின்வரும் செயல்களால் செயல்படுத்தப்படுகிறது:
- தமிழர்களின் பண்பாட்டு கலாச்சார விழுமியங்களை திட்டமிட்டு அழித்தல்.
- தமிழ் வழிபாட்டுத் தளங்களையும், கல்லறைகளையும் திட்டமிட்டு அழித்தல்.
- தமிழ் இடங்களின் பெயர்களை சிங்களத்தில் மாற்றுதல்.
- சிங்களமயமாக்கல்,இராணுவமயமாக்கல் மற்றும் பௌத்தமயமாக்கல்.
- தமிழ் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்களும், கட்டாய கருக்கலைத்தல்களும். கடத்தல், காணாமல் ஆக்குதல் மற்றும் சித்திரவதை.
இந்நிலையில் அவர்களால் முன்மொழியப்பட்ட விசாரணை முறைகளைக்கூட சிறிலங்கா அரசு ஒருதலைப்பட்சமாக நிராகரித்து வருகின்றது. சுவிட்சர்லாந்து கூட இலங்கையில் உண்மையான நிலையை காணமறுத்து கண்மூடுகிறது.
இலங்கையுடன் இருதரப்பு உடன்படிக்கைகள், குடியேற்ற உடன்படிக்கைகள் என பல்வேறு உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டுள்ளது. அதே நேரத்தில் அகதித் தஞ்சம் கோரும் தமிழர்களின் விண்ணப்பங்களை நிராகரித்து அவர்களின் வாழ்வை அபாய நிலைக்கு இட்டுச்செல்கிறது.
இவ் அவல நிலை இப்படியே தொடர்வதனால் சுவிட்சர்லாந்தின் சமஸ்டி அரசை நோக்கி நாம் ஒரு கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளோம்.
இந்த நாட்டில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் எங்களில் பலர் இன்று குடியுரிமை பெற்று இந்த நாட்டின் மக்களாகவும் எமது இதர தாயகமாகவும் கருதி வாழ்கிறோம். சக குடிமக்களாகிய எமது கோரிக்கைகளுக்கு செவிமடுக்கும் பொறுப்பும் அவர்களுக்கு எதிரான வன்முறைக்கு குரல்கொடுக்கும் கடமையும் சுவிஸ் நாட்டிற்கு உள்ளதை உரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்.
இக் கையெழுத்துப் போராட்டத்தில் அனைத்து மக்களும் பங்குபற்றி எனது சக உறவுகளுக்காகவும், தாயக உண்மை நிலையை சுவிஸ் அரசிற்கு எடுத்துரைக்கவும் பேரெழுச்சியுடன் தயாராகுவோம்.
இக் கையெழுத்து வேட்டைக்கு ஆதரவளிக்கும் அமைப்புக்கள்:
Association Des Etudiants Tamoule de France, AssociationTamil Uzhagam, Bharathi Centre Culturel Franco Tamoul, Association Tourner La Page, Centre for Human Rights and Development, AssociationTamil Uzhagam, Nambikaiyin Viddu, ONG CNRJ, Association Thendral, SDCE, Association pour les Victimes du Monde, Alliance Creative Community Project.
சுவிஸ் நாடு தழுவிய இக்கையெழுத்து போராட்டம் தமிழர் இயக்கத்தால் 03.12.2017 அன்று Zug மாநிலத்தில் தொடங்கி வைக்கப்பட்டதுடன், சுவிஸ் நாடு தழுவிய ரீதியில் இப் போராட்டம் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும் இக்கையெழுத்துப் போராட்டமானது எதிர்வரும் வைகாசி மாதத்துடன் நிறைவுக்கு வரவிருப்பதனால் இதுவரை இவ்மனுவில் கையெழுத்திடாதவர்கள் எமது கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் முகமாக இதில் கலந்து கொண்டு தமது ஒத்துழைப்பை வழங்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழர் இயக்கம்
மேலதிக தகவல்களுக்கு
http://news.lankasri.com/swiss/03/175436?ref=ls_d_swiss
Geen opmerkingen:
Een reactie posten